தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மே 25, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 25, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் சத்தியம்!

'பிளஸ் 2' தேர்வு முடிந்ததும், ஒவ்வொரு பள்ளியிலும் மதிப்பெண் பட்டியலும், மாற்றுச் சான்றிதழும் (டி.சி.,) தருவர். மாணவர்கள் அவற்றைப் பெற்று, கல்லூரியில் சேர முயற்சி செய்வர். இதுதான், பல பள்ளிகளின், நடைமுறை.

ஆனால், சென்னை திருவான்மியூரில், ஒரு தனியார் பள்ளியில், வித்தியாசமான ஒரு அணுகுமுறையைக் கையாளுகின்றனர்.

'பிளஸ் 2' முடித்த மாணவர்கள், தலைமை ஆசிரியரைச் சந்தித்து சான்றிதழ்களைப் பெறச் செல்லும்போது, அவர்கள் இரண்டு சத்தியங்களைச் செய்ய வேண்டும்.

அது, 'எக்காரணத்தைக் கொண்டும், பெற்றோரை விட்டு, பிரிந்து வாழ மாட்டேன்; அரசுப் பணியில் அமர்ந்தால், எவரிடமும் லஞ்சம் வாங்க மாட்டேன்...' என்று, வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டுத்தான், மாணவர்கள் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும், மாணவப்பருவம் மிக மிக முக்கியமானது. அந்தப் பருவத்தில், அவர்கள் சில உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டால், வாழ்நாள் முழுவதும் அதைக் காப்பாற்ற முயலுவர். இதைத்தான் மேற்காணும் நிகழ்ச்சி நமக்கு விளக்குகிறது.

வித்தியாசமான இந்தப் பள்ளியின் அணுகுமுறையை, ஒவ்வொரு பள்ளியும் பின்பற்றினால், எதிர்காலத்தில் நல்லதொரு சமுதாயம் உருவாவது நிச்சயம்.

— டி.எஸ்.பாலு, கவுரிவாக்கம்.

அழைப்பிதழ் கொடுத்தவருக்கும்...

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர், தன் வீட்டிற்கு யார் திருமண அழைப்பிதழ் கொண்டு வந்தாலும், அவர்களை இன்முகத்துடன் வரவேற்று, உணவு தந்து உபசரிப்பார். பின், அவர்கள் புறப்படும் போது ஒரு கவரில், போக்குவரத்து செலவுக்குரிய பணத்தை வைத்து கொடுப்பார்.

இதையறிந்த நான், 'எதற்காக இப்படி பணம் தருகிறீர்கள்?' என்று கேட்டேன். அவர் சொன்ன பதில், என்னை அசர வைத்து விட்டது. 'எவ்வளவோ செலவுகள், சிரமங்களுக்கிடையில், என் மீது உள்ள அன்பினால், என்னை நேரில் பார்த்து அழைக்க வருகின்றனர். அப்படி வருபவரை, வெறுங்கையுடன் அனுப்புவது முறையல்ல; அதனால் தான், அழைப்பிதழை கொண்டு வருபவர்களுக்கு, போக்குவரத்து செலவுக்குரிய பணத்தை, என் அன்பின் காணிக்கையாகத் தருகிறேன். மேலும், திருமணத்தன்று மணமக்களுக்கு உபயோகப்படும் பொருளையும், வாங்கித் தந்திடுவேன். இதனால், நட்பும், உறவும் பலப்படும். அவர்கள் மனதில், நம்மைப் பற்றி ஒரு மரியாதையும் இருக்கும்...' என்றார்.

அவர் சொன்னதில், எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை, நானும், அவரும் கலந்து கொண்ட, ஒரு திருமண நிகழ்ச்சியில், நேரிடையாக பார்த்து வியந்தேன்.

- ராம.முத்துக்குமரன், கடலூர்.

வேட்டி கட்டும் வேந்தர்களே!

கல்லூரி படிப்பை முடித்து, தற்காலிகமாக, எங்கள் பகுதியில் உள்ள, ஒரு மொபைல் ரீசார்ஜ் செய்யும் கடையில், வேலை செய்யும் இளம்பெண் நான்.

பல வகையான, கஸ்டமர்கள், 'ரீசார்ஜ்' செய்ய வருகின்றனர். இதில், வேட்டி கட்டி வரும் சில ஆண்கள் செய்யும் செயல், அருவருப்பாக இருக்கிறது.

இவர்கள், 'ரீசார்ஜ்' முடிந்ததும், அதற்கான பணத்தை கொடுக்க, எதிரில் ஒரு பெண் இருக்கிறாள் என்ற, இங்கிதம் இல்லாமல், திடீரென்று வேட்டியை, ஒரு பக்கமாக ஒதுக்கி, உள்ளாடையில் உள்ள பாக்கெட்டிலிருந்து, பணத்தை எடுத்து தருகின்றனர்.

'ரீ சார்ஜ்' செய்யப் போகிறோம் என்று முடிவு செய்து விட்டால், பணத்தை முன்பே எடுத்து சட்டைப் பையிலோ, கையிலோ எடுத்துக் கொண்டு வரலாமே... அதை விட்டுவிட்டு, பணம் கொடுக்கும் போது, அவர்கள் நடந்து கொள்ளும் விதம், அருவருப்பாக இருக்கிறது. இதை, இவர்கள் தெரிந்து செய்கின்றனரா அல்லது தெரியாமல் செய்கின்றனரா எனத் தெரியவில்லை.

இது, ஆண்களுக்கு சாதாரணமாக இருக்கலாம்; பெண்களாகிய எங்களுக்கு அவர்களின் இத்தகைய செயல் எத்தனை சங்கடத்தை தரும் என்பதை, வேட்டி கட்டும் ஆண்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

வேட்டிக்கென்று ஒரு மரியாதையும், கம்பீரமும் இருக்கிறது. அதை, இம்மாதிரி செயல்களால், சீர் குலைக்காதீர்கள்.

— வீ.சுசீலா, வெட்டுவான்கேணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us