PUBLISHED ON : ஆக 24, 2014

கே.ராஜாங்கம், உடுமலைப்பேட்டை: இன்றைய மாணவ, மாணவியரின் அறிவு திறம், என்னைப் போன்ற ஆசிரியர்களையே திகைக்க வைக்கிறதே...
பெருகி வரும் பத்திரிகைகளும், 'இன்டர்நெட்'டுமே இதற்கு பெரும் பங்கு வகிக்கின்றன. பாடப் புத்தகம் தவிர, 'எக்ஸ்ட்ரா ரீடிங்' மாணவ, மாணவியரிடையே வளர்ந்துள்ளது. ஆயிரம் வார்த்தை ஒரு பாடத்துக்கு சமம் என்பர்; இந்த பணியை தற்போது கம்ப்யூட்டர் செய்து வருகிறது. பின்னே அறிவு வளர தடை எது?
க.துளசிதாஸ், ராமாபுரம்: காலை உணவாக இட்லி, தோசை போன்றவற்றை தயாரித்து உண்ணும் பழக்கம், நகரங்களில் வெகுவாக குறைந்து வருகிறதே...
ஆமாம்; கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் வீடுகளில் ரொட்டி, கேழ்வரகு கஞ்சி, கெலாக்ஸ், அவல், நூடுல்ஸ், ஓட்ஸ் கஞ்சி சாப்பிடும் கலாசாரம் பரவி வருகிறது. இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு, 5,000 கோடி ரூபாய்க்கு ரொட்டி விற்பனையாகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங் களேன்!
என்.ரங்கராஜன், கடலூர்: மனிதனுக்கு பைத்தியம் பிடிப்பதால் பலன் ஏதும் உண்டா?
உண்டே... பைத்தியங்களால் தானே எந்த எதிர்ப்புமின்றி தம் கருத்தைக் கொட்ட முடிகிறது!
டி.தனராஜ், காஞ்சிபுரம்: குடும்பங்களில் பிரச்னை வளர பெண்கள் தானே காரணம்?
இது பொத்தம் பொதுவான குற்றச்சாட்டு; அவர்களை, 'வீக்கர் செக்ஸ்' எனக் கருதும் ஆண்களின் அபாண்டம். பிரச்னையின் மூல காரணம் தெரியாதவரை இப்படிப்பட்ட ஸ்டேட்மென்ட்கள் அபத்தம்!
தி.நாசர், மேலூர்: காதல் செய்ய எந்த காலம் உகந்தது?
மார்கழி எனச் சொல்வேன் என்றா எதிர் பார்த்தீர்கள்? இல்லை... லைப்பில் செட்டில் ஆன பிறகு - கால் ஊன்றிய பிறகு! இது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொருந்தும்!7
ம.ஜீவா, நாகர்கோவில்: வருமான வரி கட்டாமல், 'டிமிக்கி' கொடுப்பவர்களை சுட்டு பொசுக்கித் தள்ளினால் என்ன?
தள்ளலாம்தான்... அதற்கு முன், நம்மிடமுள்ள கண்மூடித்தனமான தாங்க முடியாத வருமான வரியை குறைக்க வேண்டும். (இது பெரிய, 'சப்ஜெக்ட்!' தனிக் கட்டுரையாகத்தான்,'டிஸ்கஸ்' செய்ய முடியும்)
எஸ்.லட்சுமி, கே.கே.நகர்: எப்படிப்பட்ட மனிதரின் சகவாசம் தேவையில்லை நமக்கு?
நமக்கு என்னவெல்லாம் நேரக் கூடாது என்று நினைக்கிறோமோ அது, அந்த மனிதரின் சகவாசத்தால், பிறருக்கு நிகழும் என்று தெரிந்தால், கும்பிடு போட்டு காத தூரம் ஓடிவிடுங்கள்!
