PUBLISHED ON : ஆக 24, 2014

சுவையான உண்மைச் சம்பவங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை, நண்பர் ஒருவர் கொடுத்தார். அதில் படித்தது: எத்தியோப்பியாவில், மெங்கிஸ்து என்ற கம்யூனிஸ்ட் சர்வாதிகாரி, ஆட்சியில் இருந்தபோது, நாட்டில் உணவுப் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு துண்டு ரொட்டிக்காக மக்கள் நீண்ட கியூவில் நிற்பதெல்லாம், அங்கு வெகு சகஜமான காட்சி.
அத்தகைய சூழ்நிலையில் ஒரு நாள், கியூவில் ரொட்டிக்காக நின்றான் ஒரு கவிஞன். இரண்டு மணி நேரம் நின்றும் கியூ கொஞ்சம் கூட குறையவில்லை. மேலும் கியூ நீண்டு கொண்டே தான் இருந்தது. மனம் வெறுத்துப் போன கவிஞன், 'நம்முடைய உயிரே போனாலும் பரவாயில்லை; இந்தச் சர்வாதிகாரியைக் கொன்றுவிட வேண்டியது தான். குறைந்த பட்சம், இந்த நாட்டு மக்களாவது நன்றாக இருப்பர்!' என்று நினைத்து, கியூவில் தன் அருகில் நின்றவர்களிடம் தன் முடிவை அறிவித்து விட்டு, சர்வாதிகாரியின் அரண்மனையை நோக்கிப் போனான். என்ன ஆனதோ தெரியவில்லை; போனவன், வெகு சீக்கிரத்திலேயே திரும்பி விட்டான்.
பக்கத்தில் நின்றிருந்தவர்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம்... 'என்ன அதற்குள்ளாகவா அந்த சுப காரியம் முடிந்து விட்டது?' என்று கேட்டனர். அதற்கு கவிஞன், 'அட, நீங்க வேறு! அங்கே அந்த சர்வாதிகாரியைக் கொல்ல அரண்மனையில் இதைவிட பெரிய கியூ நின்று கொண்டிருக்கிறது...' என்றான்.
— கதை எப்படி?
உறவுக்காரர், அலுவலகத்தில் உடன் பணியாற்றுவோர், ஒரே கல்லூரியில் படிக்கிறவர் என, பல விதங்களில், ஆண்களுடன் இன்றைய பெண்கள் பழக நேரிடுகிறது. அப்போது, 'ஆகா... இவர் நமக்கு ஏற்ற லட்சியக் கணவராகத் திகழ்வார்...' என்று, சிலரைப் பற்றிய எண்ணங்களை பெண்கள் தம் மனதில் வளர்த்துக் கொள்ளக் கூடும்; அது, தப்பில்லை!
ஆண்களை வகைப்படுத்தி, 'உஷார்!' என்று எச்சரிக்கிறது, ஒரு ஆங்கில பத்திரிகை. இன்னின்னாரை நம்பி ஏமாறாதீர்கள் என்று அது தந்துள்ள பட்டியலை, உ.ஆ., ஒருவர் உதவியுடன் படித்து, தெரிந்து கொண்டேன். பட்டியல் இதோ:
திருமண சோம்பேறி!
இத்தகைய நபர்கள் காலையில் எழுந்து பல் விளக்க எவ்வளவு சோம்பல் படுவரோ அதே அளவுக்கு, கல்யாண விஷயத்திலும் சோம்பேறித்தனமாக இருப்பர். 'படிப்பு முடியட்டும்... வேலை கிடைக்கட்டும்... புரமோஷன் கிடைக்கட்டும்... தங்கச்சிக்கு திருமணம் ஆகட்டும்...' என்று, திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார். இவரை நம்பினால், உங்கள் திருமணத்தையும், மணிவிழாவையும் ஒன்றாக நடத்த வேண்டிஇருக்கும்!
சிக்கன சிங்காரம்!
ஒரு முறை உங்களை வெளியே அழைத்துச் சென்று திரும்பி வந்தவுடனே, என்னென்ன செலவாயிற்று என்று கணக்கு எழுதுகிறவர் இவர். இவரிடம், ஒரு மைல் தள்ளி நில்லுங்கள்; இதே போல நோட்டு நோட்டாக பறக்க விடுகிறவரிடமும் எச்சரிக்கை தேவை. ஒரு நாள் உங்களையே பறக்க விட்டு விடுவார் இவர்.
புத்தக புழு!
ஏராளமாக படிப்பவர், அறிவு ஜீவி; ஆனால், பெண் மனம் இவருக்குப் புரியாது; புரிந்தாலும் கவலைப்பட மாட்டார்.
'தேக' பக்தர்!
'காபி சாப்பிடப் போகிறாயா... அதற்கு முன், இந்த மாத்திரையை போட்டுக் கொள்ளும்படி டாக்டர் சொன்னாரே... ஞாபகம் இல்லையா? டைரியில் கூட குறித்து வைத்திருக்கிறேன்...' என்று பதறுவார். எப்போதும் பயம், படபடப்பு. உங்களுக்கு தலைவலி வந்தால், அவருக்கு நெஞ்சுவலி வந்து விடும். இவரை திருத்துவது நன்று; துறப்பது அதனினும் நன்று!
சாப்பாட்டு ராமன்!
'ஓட்டல் சாப்பாட்டினால் நாக்கே செத்து விட்டது...' என்று சொல்லி, அடிக்கடி உங்கள் வீட்டு சமையலில் எதையாவது ருசி பார்த்தபடி இருக்கிறாரா? ஜாக்கிரதை! கல்யாணத்துக்குப் பிறகும், இவர் சமையலறையை விட்டுக்
கிளம்ப மாட்டார்!
பொழுது போக்காளர்!
இவருக்குத் தேவை, ஒரு சினேகிதி தான்; மனைவி அல்ல!
மிஸ்டர் நாகரிகன்!
'அது பண்பாடில்லை; இது, 'பேஷன்' இல்லை. அப்படி சிரிக்காதே, இப்படிப் பேசாதே...' என்று அடிக்கடி உபதேசம் செய்து, உங்களை திருத்திக் கொண்டே இருப்பார். இவருடன் வாழ்வது கொடிதினும் கொடிது!
— இப்படி எச்சரிக்கை செய்து இருக்கிறது அந்தப் பத்திரிகை. இன்னும் திருமணமாகாத வாசகியருக்கு, இந்த எச்சரிக்கை பெரிதும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.
சரி... பெண்களுக்கு எச்சரிக்கை விட்டு எழுதியிருப்பது போல, எந்த வகையான பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? எவ்வகையான பெண்களுடன் திருமண பந்தம் வைத்துக் கொள்ளக் கூடாது என, ஆண்களுக்கு அறிவுரை ஏதும், அதே புத்தகத்தில் எழுதப் பட்டுள்ளதா என, புரட்டிப் புரட்டிப் பார்த்தேன்.
ம் ஹூம்... ஒன்றும் இல்லை!
'அமெரிக்க கேன்சர் சொசைட்டி' என்ற அமைப்பு, சிகரெட் புகைப்பதை நிறுத்தினால் ஏற்படும் பயன்களை வெளியிட்டு உள்ளது. அவை, ஆங்கில இதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது. உ.ஆ., ஒருவர் உதவியுடன் அதை படித்து தெரிந்து கொண்ட பின், வெண் குழல் வத்தி வேந்தன் லென்ஸ் மாமாவிடம் புத்தகத்தைக் கொடுத்தேன்.
ரொம்ப, 'கேர்-புல்' ஆக அதைப் படித்தார் மாமா. படித்து முடித்தவர், 'பொத்' என்று அந்தப் புத்தகத்தை மேஜை மீது எறிந்து விட்டு, அஞ்சு, அஞ்சு, அஞ்சு ஒன்றை அதன் பெட்டியில் இருந்து உருவி, தன் மதுரை நண்பர் பரிசாகத் தந்த விலை உயர்ந்த லைட்டரால் பற்ற வைத்து, 'குப் குப்' என, ரயில் இன்ஜின் ஆனார்.
நீங்கள் ஒரு புகைஞராக இருந்தால், லென்ஸ் மாமா வழியைப் பின்பற்ற வேண்டாம்; புகைப்பதை நிறுத்துவதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொண்டு, மெதுவாக புகைக்கு பகை ஆகுங்கள்.
கடைசி சிகரெட் ஊதி, 20 நிமிடங்களுக்கு பிறகு...
ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, கை, கால், பாத உஷ்ணம், 'நார்மல்' ஆகும்.
8 மணி நேரங்களுக்கு பின்...
ரத்தத்தில் உள்ள, 'கார்பன் மோனாக்சைட்' மற்றும் பிராண வாயுவின் நிலை, 'நார்மல்' ஆகும்.
24 மணி நேரம்...
மாரடைப்பு அபாயம் குறையும்
48 மணி நேரத்திற்கு பின்...
நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்.
வாசனை மற்றும் சுவை பார்க்கும் சக்தி அதிகரிக்கும்.
நடப்பது சுலபமாகும்.
2 வாரம் முதல் 3 மாதம் வரை...
ரத்த ஓட்டத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
நுரையீரலின் செயல்பாடு, 30 சதவீதம் அதிகரிக்கும்.
9 மாதம் வரை...
இருமல், சைனஸ் தொந்தரவு, சோர்வு குறை யும்; சீராக மூச்சு விட முடியும். நுரையீரலில், 'சிலியா' மீண்டும் வளர்ந்து சளித் தொல்லையைக் குறைக்கும். நுரையீரலை சுத்தப்படுத்தும்; தொற்று நோய் எதிர்ப்பு சக்தி வளரும்.
1 வருடம்...
மாரடைப்பு வருவதற்கான சாத்தியக் கூறுகள் புகைப்பவர்களை விடப் பாதியாகும்.
