PUBLISHED ON : செப் 07, 2014

வி.ஆர்.சுகுமாறன், மேலவளவு: 'அன்புடன் அந்தரங்கம்' பகுதியில் வெளியாகும் கடிதங்கள் அனைத்தும் உண்மையான சம்பவங்களா?
அப்பகுதிக்கு வரும் கடிதங்களை தேர்வு செய்யும் பணி, சில காலத்திற்கு முன் எனக்கு தரப்பட்டது. அவற்றை படித்த பின், இரண்டு, மூன்று நாட்களுக்கு, 'டிப்ரஸ்ட்'ஆக இருந்தேன்; காரணமே புரியவில்லை. அக்கடிதங்கள் தான் மன பாரத்தை, மன அழுத்தத்தை உண்டாக்கி விட்டது என்பதை உணர்ந்து, அந்தப் பணியில் இருந்து கழன்று கொண்டேன். கடிதங்களை படிக்கும் போது, 99 சதவீதம் உண்மை சம்பவங்களாகவே தெரிகிறது; மீதமுள்ள 1 சதவீதம் டுபாக்கூர் கடிதங்கள்; அவை அச்சுக்கு வருவதில்லை!
க.பாலசுப்ரமணியன், தாயில்பட்டி: உங்களுடைய கோபம் எப்படிபட்டதாக இருக்கும்?
மவுனமாக; பேச்சு வெளியே வராது.
பெ.ரகு, பழங்காநத்தம்: சாதிக்க தேவை பணமா, மனமா?
மனம்; மனமிருந்தால் மார்க்கம் உண்டு. சாதனை செய்ய திடமாக தீர்மானம் செய்து கொண்ட பின், பணத்தைத் திரட்டுவது மிக எளிது. சாதனை புரிந்த பலரது வாழ்க்கை சரித்திரம் உணர்த்தும் உண்மை இது!
எம்.மாதவன், சிங்கப்பெருமாள்கோவில்: ஐம்பது வயது ஆண், குழந்தை வளர்க்கும் சாக்கில் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்கும் சமூகம், வாழ்க்கையின் வாசற்படியிலேயே கணவனை இழந்த இளம் பெண்ணின் மறுமணத்தை ஆதரிக்காதது ஏன்?
நம் சமூகத்திற்கு, பெண் என்றாலே இரண்டாம் பட்சம் தான்! பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக உள்ளனர். தன் வாழ்க்கை, தன்னோட எதிர்காலம் என வரும்போது, கணவனை இழந்த இளம் பெண்கள், சமூகத்தின் அடாவடித்தனமான செயல்களுக்கு மதிப்பு அளிக்க தேவை இல்லை; துணிந்து மறுமணம் செய்து கொள்ளலாம்!
பி.முத்துக்குமரன், பள்ளபட்டி: தகுதியை புறக்கணித்து, ஜாதிக்கும், பணத்திற்கும் முக்கியத்துவம் தரப்படுகிற நிலையில் உள்ள இந்தியா, ஒரு ஜப்பானாக மாற வாய்ப்புள்ளதா?
ஜப்பானைப் போல் ஒரே மொழி, ஒரே மதம் என்று இல்லாமல் இருப்பது நமக்கு பெரிய குறைதான்; இந்தக் குறையையே தமக்கு சாதகமாக்கி, வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியிலும், நாம் வளர்ந்து வருகிறோம் என்பதே பெரிய ஆறுதல்!
மு.நசீர் முகம்மது, மஞ்சக்குப்பம்: பிறருக்கு பயப்படுபவர்கள் தான் முகமூடி அணிந்து கொள்வர்; உமக்கு எதற்கு முகமூடி?
பிறரது அமைதியில் அதிக அக்கறை கொண்டவன் நான்!
எம்.பட்டாபிராமன், நுங்கம்பாக்கம்: அந்துமணியின் பதில்களுக்கும், சினிமா நடிக, நடிகையரின் பதில்களுக்கும் என்ன வித்தியாசம்?
அவர்களின் பதில்கள் பண்டிகை தினங்களில் மட்டும், சில பத்திரிகைகளில் வெளியாகும்; என்னுடைய பதில்கள், 'வாரமலர்' இதழில் ஞாயிறுதோறும் வெளியாகும். வாசகர்களின் கேள்விகளுக்கு நானே பதில் எழுதுவேன்; ரசிகர்களின் கேள்விகளுக்கு தெலுங்கு, இந்தி நடிகைகளின் பி.ஆர்.ஓ.,க்கள் தமிழில் பதில் எழுதித் தருவர்.
டி.இந்திரஜித், அண்ணாநகர்: காதலிப்பவர் அனைவராலும் கவிதை எழுத முடியுமா?
தெரியவில்லை; தோல்வி அடைந்த அனைவரும் எழுதுவதாக கேள்விப் பட்டுள்ளேன்!
