தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திட்டம்!

திட்டம்!

திட்டம்!


PUBLISHED ON : செப் 07, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 07, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊருக்கு வெளியே, ஒரு கிரவுண்ட் நிலத்தில், 1,200 சதுர அடியில், கலையுணர்ச்சியுடன் கட்டப்பட்டு இருந்தது விவேக்கின் வீடு.

விவேக் ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில், டீம் லீடர். திவ்யா, அவன் குழுவில் இருப்பவள்; தான் புதிதாக கட்டிய வீட்டை காண்பிப்பதற்காக, அவளை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.

'திவ்யா... வலது காலை எடுத்து வச்சு உள்ள வா...' என்று கூற நினைத்த விவேக், அதை சொல்லவில்லை.

அவளிடம் தன் விருப்பத்தை முறையாக வெளிப்படுத்தும் முன் உளறினால், எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டுவிடக் கூடும் என்ற அச்சம்.

''திவ்யா... இது பாங்க் லோன்ல கட்டின வீடு; மொத்தம் 50 லட்ச ரூபாய் ஆச்சு. கையிலிருந்த என்னுடைய சேமிப்பு, அப்பா விட்டு சென்ற சேமிப்புத் தொகை போக, பாக்கி, 25 லட்சத்துக்கு பேங்க் லோன்... மாசம் இருபத்தைந்தாயிரம், ஈ.எம்.ஐ.,

''ஒருவேளை எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா... லோன் அமவுண்டுக்கு சமமா ஒரு எல்.ஐ.சி., பாலிசி எடுத்திருக்கேன்,''என்றான்.

''கிரேட்,'' என்று கூறிய திவ்யா, 'இதெல்லாம் எனக்கிட்ட ஏன் சொல்றான்...' என்று மனசுக்குள் நினைத்தாள்.

''இது கார்னர் வீடு; மூணு சைடுலயும் கேட்டு. ஒரு சைடுலே நுழைய முடியாம பிரச்னை வந்தாலும், இன்னொரு பக்கமா வரலாம்; அதனால்தான் இந்த இடத்த தேர்வு செய்தேன்,''என்றான்.

''நைஸ்.''

''பாதுகாப்புக்கு எல்லா பக்கமும் கிரில் கேட், மாஜிக் ஐ அலாரம், கேமரா சர்வில்லின்ஸ்... அப்புறம் வீட்டில் போர்வெல், கார்ப்பரேஷன் வாட்டர், கிணறு மூணும் இருக்கு. ஒண்ணு இல்லாட்டி இன்னொண்ணு. தவிர குடிக்க, சமைக்க, யூவி ஆர்வோ கொண்ட வாட்டர் பில்டர். அது ரிப்பேரானாலும், வாட்டர் ஹீட்டர் உண்டு.''

''அப்படியா...''

''அதே மாதிரி கரன்ட் போனா இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் இரண்டுமே இருக்கு. தவிர, சோலார் சிஸ்டம். அதுவும் ரிப்பேரானா பேட்டரில ஓடற பேன், டியூப்லைட், டேபிள் டாப் கம்ப்யூட்டரும், லேப் - டாப்பும் இருக்கு; தவிர மொபைலில் நெட் வசதி.''

''அடேங்கப்பா... ரொம்ப முன் யோசனை தான் போலிருக்கே,'' என்று ஆச்சரியப்பட்டாள் திவ்யா.

''இன்னும் கேளு...மொட்ட மாடியிலிருந்து சூடு இறங்காம இருக்க, கெமிக்கல் கோட்டிங் செய்த ஸ்பெஷல் டைல்ஸ்; இது தவிர மாடி தோட்டம் போட்டிருக்கேன். இதற்கு மேலும் ஒவ்வொரு அறையிலும், 'ஏசி'யும், அது ரிப்பேரானா, அவசரத்திற்கு ஏர்கூலரும் இருக்கு,'' என்றான் விவேக்.

''சான்சே இல்ல விவேக்... உங்கள மாதிரி பக்காவா யாரும் திட்டமிட முடியாது,'' என்றாள் திவ்யா.

''அட! இதுக்கே வியந்தா எப்படி... சமையலறையில ரெண்டு சிலிண்டருடன், காஸ் அடுப்பு இருக்கு. தப்பித்தவறி காஸ் காலியாகிட்டா அல்லது ஸ்டவ் ரிப்பேர் ஆயிட்டா இருக்கவே இருக்கு, இண்டக் ஷன் ஸ்டவ்!''

''சூப்பர் விவேக்.''

''வெளியே போக ஒரு சின்ன கார் இருக்கு... அது ரிப்பேர்ன்னு வச்சுக்க, அடுத்ததா மோட்டார் பைக்கும், ஒரு ஸ்கூட்டியும் உண்டு.''

''பின்றீங்க விவேக்... எப்படி இவ்வளவு தூரம் பிளான் செய்றீங்க... ரியலி சூப்பர்!'

''திவ்யா... லைப்ல எனக்கு ரிஸ்க் எடுக்கவே பிடிக்காது. எல்லாத்துக்கும் ஒரு மாற்று, ஒரு ஸ்டெப்னி இருக்கணும்; அப்பத்தான் வாழ்க்கை நல்லா போகும். அப்புறம்... நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன்... கோவிச்சுக்கக் கூடாது. உன்ன கல்யாணம் செய்துக்கணும்ன்னு ரொம்ப நாளா ஆசை. என்னைப் பத்தி உனக்கு நல்லாத் தெரியும்; நான் ரொம்ப சூஸி! உன்கிட்ட என் மனச பறிகொடுத்திட்டேன்; உன் பதிலுக்காக படபடக்குற இதயத்தோடு காத்திருக்கேன்... எனக்கு மனைவியா வருவாயா?''

'ஓ... இதுக்குதான் இவ்வளவு, 'பில்ட் - அப்'பா...' என்று நினைத்த திவ்யா, ''கொஞ்சம் டைம் கொடுங்க விவேக். சில விஷயங்கள யோசிக்க வேண்டியிருக்கு; ஒரு ரெண்டு, மூணு நாளுல சொல்லிடறேன்,'' என்றாள்.

'அழகான, வசதியான, திட்டமிட்டு செயல்படும் ஒருத்தனுக்கு வாழ்க்கைப்பட அவளுக்கு கசக்கவா செய்யும்... அதுவும் சுமாரான வசதியுடன் கூடிய சொற்ப பென்ஷன் வாங்கற அப்பா; இவளைப் போல் திருமணத்திற்கு காத்திருக்கும் ரெண்டு தங்கச்சிக. இத்தகைய குடும்ப சூழல்ல இருக்ற அவளுக்கு இந்த திருமணம் ஒரு பூட்டான் லாட்டரி மாதிரிதானே...'என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அவளது பதிலுக்காக காத்திருந்தான் விவேக்.

மூன்று நாட்களுக்கு பின், சற்றே படபடக்கும் இதயத்துடன், மதிய வேளையில் அவளிடம் நெருங்கியவன், ''திவ்யா... என்ன முடிவெடுத்தே?'' என்று கேட்டான்.

''சாரி விவேக்... எனக்கு இதில அவ்வளவா விருப்பமில்ல,''என்றாள்.

''என்ன காரணத்துக்காக என்னை வேணாம்ன்னு சொல்றன்னு தெரிஞ்சுக்கலாமா... என்கிட்ட என்ன குறைன்னு சொன்னா அதை சரி செய்துக்குவேன்ல...''

''உங்கள நான், 'ரிஜக்ட்' செய்ததா ஏன் நினைக்கிறீங்க... எனக்கு நீங்க சரிப்பட மாட்டீங்கன்னு தெரிஞ்சதால தான் இந்த முடிவுக்கு வந்தேன். அதுக்கு பல காரணங்கள் இருக்கு. அதுல மொதக் காரணம்... எனக்கு வசதியான கணவன் கிடைச்ச மாதிரி, என் தங்கச்சிகளுக்கும் கிடைக்கும்ன்னு சொல்ல முடியாது. இதனால், அவங்க பெருமூச்சுக்கும், பொறாமைக்கும் நான் ஆளாகணும்.''

''என்ன திவ்யா... இத ஒரு விஷயமா சொல்லிகிட்டு இருக்கே... அவங்களுக்கு நான் ஒரு வழி செய்து தர மாட்டேனா?''

''செய்வீங்க இல்லன்னு சொல்லல; ஆனா, எல்லாத்துக்கும் மாற்று ஏற்பாடு வச்சிருக்கிற நீங்க, எனக்கு ஏதாவது ஆயிட்டா என்ன செய்வீங்கன்னு யோசிச்சுப் பார்த்தேன். நிச்சயமா இன்னொரு கல்யாணம் செய்வீங்க; அதுக்கு இப்பவே பிளான் கூட வச்சுருப்பீங்கன்னு தோணுச்சு.

''இதப்பத்தி யோசிச்சுக்கிட்டு இருக்கிறப்பத் தான், எனக்கு ஒரு விஷயம், 'பிளாஷ்' ஆச்சு. எனக்கு கீழே ரெண்டு தங்கச்சிங்க கல்யாணத்து நிற்கிறதும், அதைப் பத்தி நான் உங்கிட்ட சொன்னதும் நினைவுக்கு வந்துச்சு. ஒரு வேளை இந்த வசதிக்காகத்தான் என்னை கல்யாணம் செஞ்சுக்க விரும்பறிங்களோன்னு தோணுச்சு. என் எண்ணம் தவறாக்கூட இருக்கலாம்; ஆனா, எனக்கு என்னவோ அது ஒரு உறுத்தலாவேயிருக்கு. சந்தேகத்தோட ஒருத்தர் கூட வாழறது நரக வேதனை இல்லியா?''

''திவ்யா...''

''இருங்க... இன்னொரு காரணத்தையும் சொல்லிடறேன். வாழ்க்கையில் நமக்கு சிறந்த வழிகாட்டியே நாம வாழ்ற வாழ்க்கை தான். வாழ்க்கை போற போக்குலயே போயி, என்ன பிரச்னை வந்தாலும், அத எதிர்கொண்டு சமாளிச்சு வாழணும்கிறது தான் என்னோட எண்ணம்.

''வாழ்க்கையோட சுவாரசியமே அடுத்து என்ன நடக்கும்ன்னு தெரியாம இருக்கிறதுதான். அளவுக்கதிகமா திட்டம் போடும் போது, வாழ்க்கை வாழ்க்கையா இல்லாம, டைம் டேபிள் மாதிரி ஆயிடுது. எனக்கு என்னமோ அதுல உடன்பாடில்ல; சாரி விவேக்... உங்களுக்கு என்னை விட நல்ல மனைவி வருவா. அவள் நிச்சயம் அதிர்ஷ்டசாலியாகத்தான் இருப்பா; என், 'அட்வான்ஸ்' வாழ்த்துகள்,'' என்று சொல்லி, போய் விட்டாள் திவ்யா.

திகைத்து நின்றான் விவேக். பணத்தால் வாங்க முடியாத விஷயங்களும் இருக்கின்றன என்ற உண்மை அவனுக்கு புரிந்தது.

- மாலதி ரகோத்தமன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us