PUBLISHED ON : செப் 14, 2014

எஸ்.ஆர்.சதாசிவன், திருக்கோவிலூர்: 'எல்லாம் என் தலைவிதி; இதை யாராலும் மாற்ற முடியாது' என, சிலர் சொல்றாங்களே...
திட்டமிடாமல், லாப, நஷ்டங்களை அனுமானிக்காமல், சரியானபடி உழைக்காமல் திரியும் சோம்பேறிகளின் முடக்குவாதத்தனமான ஸ்டேட் மென்ட்டுகள் இவை!
ஆர்.ரமேஷ்கண்ணன், திருத்தங்கல்: பெண்கள் என் அருகில் வந்தால் என் மனம், 'திடுக்' என, 'ஷாக்' அடிக்கிறதே...
நடுக்கத்தாலா? அப்படியானால் என் கேசு தான் நீங்களும்!
க.ராமையா, நெய்வேலி: இடியே விழுந்தாலும் அலட்டிக் கொள்ளாத ஆசாமிகளை என்ன செய்வது?
இந்தியாவில் உள்ள எல்லா மக்களையும் அல்லவா கவனிச்சாகணும்... பெரும் பெரும் இடிகளை மக்கள் தலையில் விழ வைக்கும் ஆட்சியாளர்களின் இடியைத் தாங்கிக் கொண்டு அலட்டிக்காமல் இருக்கப் பழகி விட்டார்களே!
ம.கல்யாணசுந்தரம், கழுகுமலை: பொது இடங்களில் நண்பர்கள் அல்லது உறவினர்களைக் கண்டால், அவர்கள் வந்து பேசட்டும் என எண்ணாமல், நானே சென்று, 'ஹலோ' சொல்கிறேன். இப்படி நானே முந்திக் கொண்டு பேசுவதால், என் மதிப்பு குறையும்; மரியாதை கெடும் என்கின்றனர் என் நண்பர்கள்... அப்படியா?
குறையவும் செய்யாது, கெட்டுப் போகவும் போகாது; மாறாக மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கவே செய்யும். 'நல்ல பையன்பா... கொஞ்சம் கூட தலைக்கனம் இல்ல பாரு...' என்ற பாராட்டு கிடைக்கும்; கை விடாதீர்கள் இந்தப் பழக்கத்தை!
மு.சாந்தமூர்த்தி, சிறுகளத்தூர்: என் வயது 19; இதுவரை எந்த கெட்ட பழக்கமும் இல்லை. இனியும் கெடாமல் வாழ, 'ஐடியா' கொடுங்களேன்...
சினிமா தொடர்புடையவர்கள், அரசியல் தொடர்பும், நாட்டமும் உடையவர்கள், மது மற்றும் மாது போதை அடிமையாளர் - இந்த மூன்று கேட்டகிரி ஆசாமிகளின் அருகே அண்டவே அண்டாதீர்கள்; வாழ்வில் நல்ல நிலையை அடைவீர்கள்!
பி.எஸ்.பி.சுகுணா, சேத்தியாதோப்பு: புத்தகங்கள், பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகம்?
கேரள மாநிலம் முதலிடம் வகிக்கிறது; அடுத்ததாக மேற்கு வங்காளம்... வங்காளிகள் நிறைய படிப்பவர்கள்!
மு.பாத்திமா, திட்டக்குடி: தங்களுக்கு எந்த வாசகருமே கேள்விகள் அனுப்பாவிட்டால் என்ன செய்வீர்கள்?
இருக்கவே இருக்கிறது, 'கருணாநிதி பாணி!' நிருபர்கள் எவரும் பேட்டி காண வராத நாட்களில், கருணாநிதியே கேள்வியும் எழுதி, பதிலும் சொல்லி, அதை பத்திரிகை ஆபீசுகளுக்கு அனுப்புவதில்லையா... ஆனால், என் வாசகர்கள், என்னை அப்படி தவிக்க விட மாட்டார்கள்!
