தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 14, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 14, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கலிபோர்னியா (அமெரிக்கா)வில் இருந்து ஆன் என்ற கருப்பு அம்மணி வந்திருந்தார். ஏழு அடி உயரம், மூன்றடி அகலம் கொண்ட இவர், தோல் ஆடை இறக்குமதியாளர்; சென்னை தாஜ் ஓட்டலில் தங்கி இருந்தார்.

ஒரு மாலையில், 'ஷாப்பிங்' முடித்து, தெரு வழியே நடந்து வந்து கொண்டிருந்த போது, இஸ்திரி வண்டியை பார்த்து, ஆவலாக அதனருகே சென்று, இஸ்திரி செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தார். பின், 'இந்த இஸ்திரி ஆளை என்னோடு கூட்டிச் சென்றால் எவ்வளவோ பிரச்னைகள் எனக்குத் தீரும்; அயர்ன் செய்யாமல் இருப்பதற்காக, என் கணவரிடம் தினமும் பாட்டு வாங்க வேண்டாம். இவருக்கு மாதம் எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும்?' எனக் கேட்டார்.

'தினமும், 150 ரூபாய் கூலி, மாதம், 4,500 ரூபாய்; அதாவது, 100 டாலர் உங்க பணத்தில்... இதற்கு மேல் எவ்வளவு கொடுத்தாலும் உங்க இஷ்டம்...' என்றேன்.

'நூறு டாலர் என்ன... 500 டாலர் கூடத் தரத் தயார்...' என்றார் ஆன்.

நம்மூர் ஆட்களுக்கு எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கின்றன; அதை பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறோம். இருந்தாலும், பிழைக்கப் போன இடத்தில், பிரிவினை பேச ஆரம்பிக்கிறோம்; சங்கம் அமைக்கிறோம்; கட்சிக் கொடிகளைப் பறக்க விடுகிறோம். இதெல்லாம் அவர்களுக்கு பிடிக்காமல், 30 பிரம்படியுடன், தலையை மொட்டையும் அடித்து அனுப்பி விடுகின்றனர். தமிழனுக்கு புத்தி வரும் நாள் என்றோ?

'ஒர்க்மென் பப்ளிஷிங்' என்ற நியூயார்க் நிறுவனம் வெளியிட்ட, 'தி புக் ஆப் கொஸ்டின்ஸ்' என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன்; எழுதியவர் கிரிகோரி ஸ்டாக் என்பவர். இதில், 217 கேள்விகள் உள்ளன; அவற்றுக்கு தொடர்பான, 50 கேள்விகள், கடைசியில் கொடுக்கப்பட்டு உள்ளன.

ஒருவர் தன்னைப் பற்றி, தானே அறிந்து கொள்ளும் விதமாக மதிப்பு, நம்பிக்கை, வாழ்க்கை, காதல், பணம், செக்ஸ், நேர்மை, தயாளம், பெருமை, இறப்பு போன்ற, 'சப்ஜெக்ட்'களும், தன் கடந்த காலம், - நிகழ்காலம் பற்றி ஆராய்ந்து பதிலளிக்கும் விதத்தில் கேள்விகள் உள்ளன.

இப்படி பதில் காண் பதால் என்ன பயன்?

'தன்னைத் தானே வளர்த்துக் கொள்ளவும், மற்றவருடனான உறவை பலப்படுத்திக் கொள்ளவும் உதவும்...' என்கிறார், இப்புத்தகத்தின் ஆசிரியர்.

கேள்விகளைப் படித்துக் கொண்டே வரும்போது, இதே கேள்விகளை சமீபத்தில், தமிழில் படித்ததாக, 'பொறி' தட்ட, எல்லா தமிழ் வார இதழ்களையும் புரட்டினேன்.

சிக்கியது அந்த வார இதழ்.

ஆங்கிலப் புத்தகத்தில் வெளியாகியுள்ள கேள்விகள் சிலவற்றை அழகாகத் தொகுத்து, சில சினிமா - நாடக நடிகர், நடிகைகளிடம் கேட்டு, பதில் வாங்கி வெளியிட்டு இருந்தனர்; பதிலும் சுவையாகத் தான் இருந்தது.

நல்ல கருத்துகள் - விஷயங்கள் எங்கு, எந்த மொழியில் வெளியானாலும், அதை தம் வாசகருக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்ட அந்த வார இதழை நினைத்து, பெருமை கொண்டேன்.

சாம்பிள் கேள்விகள் சில:

* உங்களுடைய குழந்தைக்கு ஒரு வயது; நல்ல அழகு. பிரசவ ஆஸ்பத்திரியில் நடந்த தவறால், குழந்தை மாறி விட்டது. உங்களது என நினைத்து வளர்க்கும் குழந்தை, உங்களது அல்ல எனத் தெரிய வருகிறது. என்ன செய்வீர்கள்... குழந்தையை மாற்றிக் கொள்வீர்களா?

* உங்கள் எதிரே உள்ள, 10 துப்பாக்கிகளில் -ஒன்றில் மட்டும் குண்டு உள்ளது; அது, எது எனத் தெரியாது. 10ல் ஒரு துப்பாக்கியை எடுத்து, நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொள்ள வேண்டும். உயிர் தப்பினால், பத்து லட்சம் டாலர் பரிசு! பந்தயத்தில் கலந்து கொள்வீர்களா?

-இதுபோன்ற கேள்விகள். எல்லாரும் படிக்க வேண்டிய புத்தகம்!

வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்திருந்த தமிழ் அன்பர் ஒருவருடன், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செல்ல வேண்டி இருந்தது. அந்தத் தமிழன்பர் பல வருடங்களுக்குப் பின், தமிழகம் வந்திருந்தார்.

விசேஷ தரிசனத்திற்கான கட்டணத்தை செலுத்தி வரிசையில் நின்றோம். எங்களுக்கு முன், ஒரு புதுமண தம்பதியர் நின்று இருந்தனர். காசு வசூலித்து தரிசனம் காட்டும் வரிசையும், தர்ம தரிசன வரிசையும் கொஞ்சம் கூட நகரவில்லை.

ஐந்து, பத்து என நிமிடங்கள் ஓடி, பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தன.

எங்களுக்கு முன் நின்று இருந்த தம்பதியரில், மணமகள் கொஞ்சம், 'போல்டு டைப்!' அர்ச்சகரை அழைத்து, தாமதத்திற்கு காரணம் கேட்டார்.

நீதியை நிலை நாட்டும் பதவியில் உள்ள சென்னை, 'கனவான்' ஒருவர், தரிசனத்திற்கு வர இருப்பதாகவும், அவருக்காக பொதுமக்களை நிறுத்தி வைத்திருப்பதாகவும் கூறினார்.

அம்மணிக்கு வந்ததே ஆத்திரம்... 'ஆண்டவன் சன்னிதியில் அரசனும், ஆண்டியும் ஒன்று. இங்கே பாருங்க... பச்சை குழந்தைகள் புழுக்கம் தாங்காமல் சிணுங்குகின்றன. நீதியை நிலை நாட்டும் மிகப் பெரிய பணியில் இருக்கும் அவர், இதுபோல பொதுமக்களை நிறுத்தி இருக்க சொல்ல மாட்டார். அவர் வரட்டும்... நீதி கேட்கிறேன்...' என, கண்ணகி போல பொரிந்து தள்ளி, 'பெரிய பதவியில் இருப்பவர்களே, பொதுமக்களுடன் வரிசையில் நின்று தரிசனம் செய்கின்றனர்...' என, வி.வி.ஐ.பி.,களின் பெயரைக் கூறி, ஆதாரத்துடன் பேசினார்.

நாற்பத்தி ஐந்து நிமிடங்களுக்குப் பின், 'டவாலி' புடை சூழ, சென்னையில் உள்ள ஒரு நீதிமன்றத்தைத் சேர்ந்த அந்த, 'நீதிமான்' தரிசனத்திற்கு வந்தார். இதனிடையே சிறு குழந்தைகள் அழத் துவங்கி இருந்தன.

'நீதிமான்' அடுத்த சன்னிதிக்கு, தரிசனத்திற்கு செல்லுமுன், நம், 'கண்ணகி' அம்மணி அவரை வழிமறித்தார். வழக்கம் போல ஒட்டுக் கேட்டேன்.

'நீங்க தானே நீதிமான்...' என, அவரது பெயரைக் கேட்டார் ஆங்கிலத்தில். (முன்னமே அர்ச்சகரிடம், அவரது பெயரை விசாரித்து, அறிந்து கொண்டார்.)

அறிமுகமில்லாத பெண்கள் திடீரென வந்து பேசும்போது, ஆண்களுக்கே உரிய ஒரு அசட்டு, 'ஹி... ஹி...' இருக்கிறது அல்லவா... அதை உதிர்த்து, 'எஸ்... எஸ்...' என்றார்.

'நீங்க இங்கு வருவதற்கு முன் நடந்த விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்ல. நீங்க தரிசனத்திற்கு வரப் போறீங்க என்றவுடன், 45 நிமிடங்கள் சிறு குழந்தைகள் உட்பட பக்த கோடிகளை காக்க வைத்து விட்டனர் உங்க கைத்தடிகள். நீதியை நிலைநாட்டும் பொறுப்பில் இருக்கும் நீங்க இச்செயலைச் செய்ய உத்தரவிட்டு இருக்க மாட்டீங்கன்னு நம்புகிறேன். எதிர்காலத்தில், இதுபோல் நடக்காமல் இருக்கணுங்கிறதுக்குத் தான் இப்போ, உங்களிடம் விஷயத்த சொல்றேன்...' என முடித்தார்.

ஒரு பேச்சுக்குக் கூட அந்த நீதிமான் சாரி சொல்லவில்லை. அதிகார மமதையுடன், 'டவாலி'யை திரும்பிப் பார்க்க, அவர் வழக்கம் போல, 'வழி விடுங்கள்... வழி விடுங்கள்...' எனக் கூறியபடியே, அம்மணியை பின்னுக்கு தள்ளி சென்றார்.

'இவனுங்களைப் போல மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கி, வயிற்றைக் கழுவும் அரசு ஊழியம் செய்யும் ஆசாமிங்கள, 'ரிட்டயர்' ஆன பின், ஒரு சொறி, 'டி.ஓ.ஜி.,' கூட மதிக்க மாட்டேங்குதுன்னா என்ன காரணம்ன்னு இப்போ புரியுதா...' என, தன் கணவரைப் பார்த்து கேட்டார் அம்மணி; தலை அசைத்தார் அவர்.

அம்மணியின் கருத்தில் உள்ள நியாயம் எனக்கு புரிந்தது; உங்களுக்கும் தானே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us