PUBLISHED ON : செப் 14, 2014

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், 'குடுகுடுப்பைக்காரர்கள்' பற்றி ஒரு மாணவர் எம்.பில்., பட்டத்திற்காக ஆய்வு நடத்தி, எழுதியது:
குடுகுடுப்பைக்காரர்களின் முன்னோர்கள், 500 ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் வாழ்ந்து வந்தனர். அங்கு, 12 ஆண்டுகள் மழை பொழியாமல் கடும் பஞ்சம் தோன்றியதால், பஞ்சம் பிழைக்க தமிழ்நாட்டிற்கு வந்தனர்.
மதுரை மாவட்டத்தில் சத்தியமூர்த்தி நகர், புதுப்பட்டி, கடச்சனேந்தல் போன்ற ஊர்களில், நூற்றுக்கணக்கான குடுகுடுப்பைக்காரர்கள் நிலையான வீடுகளில் தங்கியிருக்கின்றனர். ஆண்டில், பத்து மாதங்கள் ஊர் ஊராக சுற்றி வருபவர், சித்திரை மாத பவுர்ணமியன்று ஊருக்கு திரும்பி விடுவர். அடுத்து, ஆனி மாதம் தான் திரும்ப தொழிலுக்கு செல்கின்றனர். இதை யாராவது மீறினால், அபராதம் விதிக்கப்படும்.
குடுகுடுப்பைக்காரர்களிடம் உள்ள விசித்திர பழக்க வழக்கங்கள்:
* இவர்கள், கோரைப் பாயில் உறங்குவது கிடையாது.
* இவர்கள், தங்கள் ஜாதியினருக்கு ஜாதகம் எழுதித் தருவது கிடையாது; ஆனால், பிற ஜாதிக்காரர்களுக்கு எழுதித் தருகின்றனர்.
* இறந்தவர்களைப் புதைக்கும்போது, இறந்தவர்களின் உள்ளங்கையைக் கத்தியால் கீறிவிட்டு புதைக்கின்றனர்.
* கரும்பாசிகள் கோர்த்த மணிமாலையை தாலியாக பயன்படுத்துகின்றனர்.
* திருமணம் முடிந்த மறுநாள் நடைபெறும் விருந்துக்கான ஆட்டுக் கிடாவை மாப்பிள்ளை தான் அறுக்க வேண்டும்.
- இப்படி இன்னும் விசித்திர பழக்கவழக்கங்களை கொண்டுள்ளனர் குடுகுடுப்பைக்காரர்கள்.
பிரதமர் மோடியின் அமைச்சரவையைச் சேர்ந்த ராஜ்நாத் சிங் மற்றும் சுஷ்மா சுவராஜ் போன்றோரின் வீடுகளில் உளவு பார்க்கும் கருவி பொருத்தப்பட்டிருப்பதாக புகார் எழுந்து, ஏக களேபரமானது நினைவிருக்கலாம். மறைந்த எழுத்தாளர் குஷ்வந்த் சிங் இந்துஸ்தான் டைம்ஸ் (1984)ல் நாளிதழில் எழுதிய கட்டுரையிலிருந்து:
'ஹவாய் தீவுகளுக்கு போயிருந்த போது, அங்கு ஒரு பிளாட்டில் தங்கியிருந்தேன்; அதைச் சுற்றிலும் உயரமான கட்டடங்கள். அதிக வெப்பம் காரணமாக, அங்கிருந்தவர்கள் மிகக் குறைந்த ஆடையே அணிந்திருப்பர். அதனால், அவர்களை அந்த நிலையில் பார்ப்பதற்கு என் பைனாகுலரை திருப்பினேன். அப்படிப் பார்க்கும் போது தான் தெரிந்தது, என்னைப் போலவே இன்னொரு ஆசாமியும், பைனாகுலர் மூலம் அங்குமிங்கும் பார்த்துவிட்டு, நான் பைனாகுலர் மூலம் பார்ப்பதையும் பார்த்துக் கொண்டிருந்தான் என்பது! என்னைப் பார்த்து, சில ஆபாசமான செய்கைகளையும் செய்தான். பின், எப்படியோ என் இருப்பிட டெலிபோன் நம்பரைத் தெரிந்து, போன் செய்தான். அவன் பேச்சை அச்சேற்ற முடியாது; அவ்வளவு ஆபாசம். ஆனால், என்னைப் பொருத்தமட்டில், அது என்னுள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது; அன்றிலிருந்து இதுபோல் பிறரது அந்தரங்க விவகாரங்களைப் பார்ப்பது என்ற விஷயத்தை விட்டு விட்டேன்.
இந்தியாவில் எதுவுமே ரகசியம் கிடையாது; ஒரு நெருங்கிய கிளார்க்கின் மூலம் நான் எழுதும் தபால்களும், எனக்கு வரும் தபால்களும் பிரித்துப் பார்க்கப்படுவதை அறிந்தேன்.
அதோடு மட்டுமல்ல, டெலிபோனில் நான் பேசுவதெல்லாம் பதிவு செய்யப்படுகிறதாம்; இதை அறிந்து எனக்கு கடுங்கோபம் வந்தது. ஆதனால், இதற்கு, 100 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அனுமதி இருக்கிறது என்று தெரிந்தும், திடுக்கிட்டேன்.
இந்நிலைமை என் நண்பர் வை.கோபால் சாமிக்கும் (வைகோ) ஏற்பட்டிருக்கிறது. போலீஸ் ஆபீசராக இருக்கும் நண்பர் ஒருவர் மூலம், தமிழக அரசின் ஆணை ஒன்றின் நகல், அவருக்கு கிடைத்தது. அதில், இந்தியத் தபால் அலுவலகச் சட்டம், 1898ன் கீழ், கோபால்சாமியின் கடிதங்களைக் கைப்பற்ற உத்தரவு இருந்தது.
இது போர்க்காலமாக இருந்து அல்லது நண்பர் கோபால்சாமி பெரிய கள்ளக் கடத்தல்காரராகவோ, வரி கொடுக்காமல் அரசை ஏமாற்றி, தன் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பவராகவோ, அரசைக் கவிழ்க்க முயலும் ஆசாமிகளில் ஒருவராகவோ இருந்திருந்தால் இந்த உத்தரவை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இவர் இந்த வகைகளில் எதிலும் இல்லாதவர். ஒரு சாதாரண பார்லிமென்ட் உறுப்பினர். தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்; இலங்கைத் தமிழர்களின் ஆதரவாளர். அவரது கோரிக்கை பார்லிமென்டில் நிராகரிக்கப்பட்டது. பிறர் கடிதங்களை அவர்கள் அறியாமல் படித்தல், ஒட்டுக் கேட்டல் போன்றவை நிச்சயம் நாகரிகமற்ற செயல்கள் தாம்; அதேவேளையில், ஒவ்வொரு நாகரிகமற்ற அரசாங்கத்தின் உரிமையாகவும் இந்தச் செயல்கள் இருக்கின்றன. அந்த அரசுகளும் மகிழ்ச்சியோடு இந்த உரிமையைத் தவறாகப் பயன்படுத்துகின்றன.
முன்னாள் சோவியத் நாட்டு தூதர், கே.பி.எஸ்.மேனன் எழுதிய, 'மாஸ்கோ டயரி' நூலிலிருந்து:
பிப்.,18, 1953 அன்று இரவு, 8:00 மணிக்கு ரஷ்ய முன்னாள் அதிபர் ஸ்டாலின் என்னைக் காண இசைந்துள்ளார் என்று, 4:00 மணிக்கு டெலிபோன் செய்தனர். என் காரின் நம்பரையும், டிரைவரின் பெயரையும் கேட்ட பின், 'கிரெம்ளின் கோட்டையின் பராவிட்ஸ்கி வாசலருகில், 7:45 மணிக்கு வர வேண்டும்...' என்றனர்.
தூதரகத்திலிருந்து, 7:30 மணிக்குப் புறப்பட் டோம். டிரைவர் வான்யாவுக்கு, ஸ்டாலினை தான் ஒருமுறை கண்ணால் பார்க்க முடிந்ததில் அளவு கடந்த மகிழ்ச்சி. எனக்கு ரஷ்ய மொழி கற்றுத் தரும் ராயா என்பவர், என்னுடைய கைகளைப் பிடித்துக் குலுக்கினார். 'ஸ்டாலின் கைகளைக் குலுக்கப் போகும் ஒருவரின் கைகளை, நான் குலுக்குகிறேன்.,.' என்று பெருமையாக சொல்லிக் கொண்டார்.
பராவிட்ஸ்கி வாசலில் எங்களை அடையாளம் கண்டு கொண்டனர். ஒரு கார் முன்னே வழிகாட்டிக் கொண்டு சென்றது. நாலைந்து மீட்டர் தூரத்திற்கு ஒரு சிப்பாய் வீதம், சல்யூட் அடித்தனர்!
கார் ஒரு புதிய கட்டடத்தின் முன் நின்றது. கிரெம்ளின் ரகசிய போலீஸ் அதிகாரி ஒருவர், எனக்கென அங்கீகரிக்கப்பட்ட அறையில் சிறிது நேரம் இருக்கச் சொன்னார். அங்கே ஸ்டாலின் மொழிபெயர்ப்பாளர் பாவ்லாங் வந்து சேர்ந்து கொண்டார்.
சரியாக, 8:00 மணிக்கு ஸ்டாலின் இருந்த அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். ஸ்டாலின் கட்சி சீருடை அணிந்திருந்தார். முன்னே வந்து என்னுடன் கை குலுக்கி, மேஜையருகே அழைத்துப் போனார்.
அதன்பின், 'உங்கள் நாட்டின் பிரதான மொழி உருதுவா... இந்துவா? (அவர் இந்தியை இந்து என்று உச்சரித்தார்) எல்லா மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து வந்தவையா? ஏன் அவை வெவ்வேறு வழியில் வளர்ச்சி அடைந்தன? குஜராத்திகள் என்ன மொழி பேசுகின்றனர்...' என்று கேட்டார். எனக்குத் தெரிந்த வரை பதில் சொன்னேன்.
'இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பாடு செய்து கொள்ளக் கூடாதா... அப்படி செய்தால் அது எவ்வளவு நல்ல ஏற்பாடாக இருக்கும்...' என்றார்.
'இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே உறவு துண்டிக்கப்பட்டு, பரஸ்பர நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது; எனவே, அது நடப்பதற்கு அதிக நாள் பிடிக்கும்...' என்றேன்.
'ஒரு மதத்தின் பெயரால், ஒரு ராஜ்ஜியத்தை ஏற்படுத்துவது ரொம்ப பிற்போக்கான காரியம்...' என்றார் ஸ்டாலின். அவருடைய புத்தி கூர்மை அவரது பேச்சிலிருந்தும், அவர் பேசாது இருந்ததிலிருந்தும் வெளிப்பட்டது.
புடாபெஸ்ட், மார்ச் 5, 1953 அன்று, மாஸ்கோவில் இருந்து வந்த செய்திகளில், ஸ்டாலின் நோய்வாய்ப்பட்டுக் கிடப்பதாகத் தெரிந்தது. நான் அவரைப் பார்த்து இரண்டு வாரம் தான் இருக்கும்; நான் தான் அவரைக் பார்த்த கடைசி அயல்நாட்டு பிரதிநிதி.
'ஸ்டாலின் எப்படி இருந்தார்... என்ன உடையணிந்து இருந்தார்... அவர் சுருட்டோ, குழாயோ பிடித்திருந்தாரா, அணிந்திருந்தது பூட்ஸா இல்லை செருப்பா, அறையில் லெனின் படம் இருந்ததா, என்னை வரவேற்றபோது எழுந்து நின்றிருந்தாரா அல்லது உட்கார்ந்தபடி இருந்தாரா, உலக நிலையைப் பற்றி கவலையோடு இருந்தாரா...' என லண்டன், பாரிஸ் மற்றும் ஸ்டாக்ஹோம் போன்ற இடங்களிலிருந்து, தொலைபேசி தகவல் வந்து கொண்டே இருந்தது.
மார்ச், 6, 1953, ஸ்டாலின் இறந்து விட்டார்.
அவருடைய வாழ்க்கை, அநேக வீடுகளுக்கு ஆனந்தத்தையும், அநேக வீடுகளுக்கு துக்கத்தையும் கொண்டு வந்தது.
பெர்னாட்ஷா சொல்கிறார்: 'நான் வெற்றியைக் கண்டு பயப்படுகிறேன். ஒருவர் வெற்றி அடைந்து விட்டார் என்றால் அவருடைய வேலை பூமியில் முடிந்து விட்டது என்று அர்த்தம். ஆண் சிலந்திப் பூச்சி, பெண் சிலந்திப் பூச்சியுடன் கூடி கலந்து வெற்றியடைந்ததும், பெண் சிலந்தி அதை கொன்று விடுகிறதல்லவா... அதுபோல், வெற்றியை அடைந்து முடிவதை விட, வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டேயிருப்பதை நான் விரும்புகிறேன். நான் அடைய நினைப்பது, என் முன்னேயிருந்து கொண்டேயிருக்க வேண்டும்; பின்னால் அல்ல!'
நடுத்தெரு நாராயணன்
