தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : செப் 14, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 14, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால்...

என் தோழியின் கணவர் கட்டடங்களுக்கு ஒயரிங் செய்யும் எலக்ட்ரிஷியன். அத்துடன், மின் சாதனங்களை பழுது பார்க்கவும் செய்வார். சில மாதங்களுக்கு முன், புதிதாக மின்சாதன பொருட்களை விற்கும் சில்லரை விற்பனை கடை ஒன்றை திறந்தார்.

சமீபத்தில், நானும், என் கணவரும் தோழியின் கடை வழியாக செல்ல நேர்ந்தது. நான்கைந்து வாடிக்கையாளர்கள் நின்றிருக்க, என் தோழி தனியாளாக அவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தாள். வாடிக்கையாளர்கள் சென்றதும், அவளிடம் வியாபாரத்தை பற்றி விசாரித்தோம். 'ரெண்டு மாசத்துலேயே பொருட்களோட பேர், பயன்பாடு, விலை பற்றி முழுசாக தெரிஞ்சுக்கிட்டேன்; இப்போ எல்லாமே அத்துப்படி. நான் கடைய பாத்துக்கிறதால என் கணவர் வெளி வேலைகள கவனிச்சிக்குறாரு; அதோட செலவு போக, மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்...' என்று சொன்னாள். திருமணம் ஆகும் வரை வெளியுலகமே தெரியாத வெள்ளந்தியாக இருந்த தோழியின் தற்போதைய வளர்ச்சியை நினைத்து பெருமையாக இருந்தது.

பெண்களை கிணற்று தவளையாக நினைத்து, ஒரு வட்டத்திற்குள் அடக்காமல் வாய்ப்பு கொடுத்தால், வருமானத்தை பெருக்கி, வாழ்வை செழிக்க செய்வர் என்பதற்கு, என் தோழி ஒரு உதாரணம்.

— வி.மோகனாராஜன், மதுரை.

இயற்கைச் சூழலும் கல்வியே!

கிராமத்தில் இருக்கும் நண்பர் ஒருவர், தன் குழந்தைகளை மாதம் ஒருமுறை அருகிலிருக்கும் நர்சரி கார்டன், செங்கல் சூளை, திராட்சைத் தோட்டம் மற்றும் ஜல்லி உடைக்கும் குவாரி போன்றவற்றிற்கு அழைத்துச் செல்வது வழக்கம். இது குறித்து, அவரிடம் கேட்டபோது, அவர், 'பொதுவாக குழந்தைகள சினிமா, கடற்கரை, கோவில் திருவிழாக்களும், சொந்தக்காரங்க வீடுகளுக்கும் கூட்டிச் செல்றது தான் வழக்கம். ஆனால், அப்படி செய்யாம, இந்த மாதிரி மாறுபட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்றதால, அவங்களுக்கு புது அனுபவம் கிடைக்கிறது.

'நர்சரி கார்டனுக்கு செல்லும் போது அங்குள்ள செடிகள், மரக்கன்றுகள், பூச்செடிகள் போன்றவற்றை பாக்குற போது, மனசுக்குள் உற்சாகமாகி, தாங்களும் செடி வளர்க்கணுன்னு ஆசைப்படுவாங்க. செங்கல் சூளைய பாக்கற போது, செங்கல எப்படி தயாரிக்கறாங்க, அங்க இருக்கிற தொழிலாளர்கள் எப்படி எல்லாம் வெயிலில் கஷ்டப்பட்டு உழைக்கிறாங்கன்னு புரியுற போது, வாழ்க்கையோட இன்னொரு பகுதியையும் தெரிஞ்சுக்கிறாங்க. இதனால, படிப்பில கவனம் செலுத்துவாங்க. நம்மை சுற்றியுள்ள ஒவ்வொரு இடங்களுக்கும் கூட்டிச் செல்லும் போது, அவை குழந்தைகளுக்கு பயனுள்ள பொழுதுபோக்காக அமைவதுடன், பொது அறிவு வளர்ச்சிக்கும் உதவும்...' என்றார்.

இதுபோன்ற இடங்களை நாம் மேலோட்டமாக பார்க்கிறோம். ஆனால், அவற்றால் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன என்பது உண்மை தான்!

— இ.ஆல்பர்ட் நெல்சன், கொடைரோடு.

சட்டைப்பை இடமா, வலமா?

சமீபத்தில், என் நண்பரை சந்தித்தேன். அவர் அணிந்திருந்த சட்டைப் பை இடப்பக்கத்திற்கு பதிலாக வலப்பக்கம் தைக்கப்பட்டிருந்தது. புதிய பேஷனாக இருக்குமோ என எண்ணி, அதுகுறித்து அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், 'இடதுபக்கப் பாக்கெட்டில், மொபைல் போன் வைக்கும் பழக்கம் நம்மிடையே வந்து விட்டது; ஆனால், அந்த இடப்பக்கத்தில் தான் நம்முடைய இதயம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடுகிறோம். மொபைல் போனிலிருந்து வெளியேறும் மின்னணு கதிர் வீச்சுகளும், மென் துடிப்புகளும் இதயத்தின் செயல்பாடுகளை பாதிக்கும் அபாயம் உள்ளது. அதனால் தான், சட்டைப் பையை இடப் பக்கத்திலிருந்து, வலப் பக்கத்துக்கு மாற்றி விட்டேன்; வரும் முன் காப்பது தானே புத்திசாலித்தனம்!' என்றார். நண்பருடைய விளக்கம், எல்லாருக்கும் ஒரு வழிகாட்டுதல் என்று எனக்கு தோன்றியது.

— எஸ்.ராமன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us