PUBLISHED ON : செப் 21, 2014

ஆர்.சிவசங்கரன், பொன்னேரி: காரியம் ஆக வேண்டும் என்றால் காலைப் பிடிக்கக் கூட தயங்காத சந்தர்ப்பவாதிகளை என்ன செய்யலாம், அவர்களிடம் எப்படி பழகலாம்?
அவர்களிடம் பழக்கம் என்ன வேண்டி கிடக்கிறது... இப்படிப்பட்டவர்களைக் கண்டால் ஒதுங்கி விடுங்கள்!
எம்.முகமது பஷீர், கருப்பட்டி: ஓயாமல் கேள்வி கேட்பவர்களை ஓரங்கட்டுவது எப்படி? (நேரில்வந்து அறுப்பவர்களைப் பற்றி...)
சம்பந்தப்பட்ட நபரின் தலை, தூரத்தில் தெரியும் போதே அம்பேலாகி விடுவது தான் சிறந்தது. இல்லே ஜாமின் கொடுக்க கூட ஆளில்லாமல் கழுத்தறுபட்டு ரத்தமே வந்து விடும்!
சி.கிறிஸ்டோபர், துவரிமான்: 'சம்பளம்' என்ற சொல் எப்படி வந்தது?
வேலைக்கு கூலியாக நெல்லும், உப்புமே பழங்காலத்தில் வழங்கப்பட்டது. நெல்லில் சிறந்தது, சம்பா நெல். 'அளம்' என்றால் உப்பு; இவை இரண்டும் சேர்ந்து,'சம்பளம்' ஆகிவிட்டது என்கிறார், நடுத்தெரு நாராயணன்!
டி.சுலைமான், புன்செய்புளியம்பட்டி: அசைவத்தை விட்டு விட விரும்புகிறேன்; ஆனால், அசைவத்தில் கிடைப்பது போன்ற புரதம் சைவத்தில் கிடைக்குமா என அச்சமாகவும் உள்ளது...
சைவம் சாப்பிடும் என்னைப் போன்றோர் புரதம் இல்லாமல் தவிக்கிறோமா என்ன? ஆடு மற்றும் கோழிக்கறியை விட அதிகமான, தரமான புரதம் முருங்கைக் கீரை போன்ற எத்தனையோ சைவ உணவுகளில் உள்ளன. இனி, முருங்கை அடை, தோசை; முருங்கை கீரை பொரியல், சூப், முருங்கைக்காய் குழம்பு என ஜமாயுங்கள்!
ப.மதனா, சின்னமனூர்: பெண்களின் நடை, உடை பாவனைகளை பார்த்துத்தான் ஆண்கள் காதலிக்கின்றனர்; அழகைப் பார்த்து அல்ல என்கிறாள் என் தோழி. உண்மையா?
'அண்ணலும் நோக்கினாள்; அவளும் நோக்கினாள்' என முதல் பார்வையிலேயே வரும் காதல் வேண்டுமானால், அழகினைக் கொண்டு வரலாம். பழகப் பழக, பார்க்க பார்க்க வரும் காதலில்,'அழகு' அடிப்பட்டு விடும் என்கிறார் லென்ஸ் மாமா!
என்.நமசிவாயம், எல்லீஸ் நகர்: நிம்மதியான பிற்கால வாழ்க்கைக்கு இப்போதிருந்தே என்ன செய்ய வேண்டும்?
முதலில் உடல் நலத்தைப் பேண வேண்டும்; இதற்கு தீய பழக்கங்களை கை விட வேண்டும். உடற்பயிற்சியும். சில பயனுள்ள பொழுது போக்குகளை பழகிக் கொள்ள வேண்டும். இது, வயதான காலத்தில் பிறரை தொந்தரவு செய்யாமல் இருக்க உதவும். எல்லாவற்றுக்கும் கிரீடம் வைப்பது போல பணம் வேண்டும்; அதற்கு, இப்போதிருந்தே சேமிக்க வேண்டும். பிறகு நிம்மதிக்கு குறைச்சலேது?
வி.லட்சுமிபிரியா, அரியலூர்: கலகலப்பாக பேசும் ஆண்களை நம்பி விடும் பெண்கள், 'ரிசர்வ்ட்' ஆக உள்ள ஆசாமிகளை விரும்பாதது ஏன்?
பெண்களின் அடிமனதில் நகைச்சுவை உணர்வு புதைந்து கிடக்கிறது; கலகலப்பு ஆசாமிகள் அதை உணர்ந்தவர்கள். சிரித்துப் பேசி இளகிய மனமுடைய பெண் இனத்தை சரியாக ஈர்த்து விடுகின்றனர். 'ரிசர்வ்ட்' ஆசாமிகளை முரடர்களாக சித்தரித்து விடுகிறது பெண்களின் இளம் மனம்; முரட்டுத்தனத்தை எவர்தான் விரும்புவர்!
