தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : செப் 21, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 21, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்' என்பதை, சமீபத்தில், அனுபவப்பூர்வமாக நேரில் கண்டு உணர்ந்தேன்.

சென்னை வர, ஐதராபாத் விமான நிலையத்தில் காத்திருந்தேன். ஐந்து மணிக்கே எழுந்து, அறையை காலி செய்து, ஆட்டோ பிடித்து, விமான நிலையம் வந்து சேர்ந்தால், எட்டு மணி விமானம், மதியம் இரண்டு மணிக்குத் தான் புறப்படும் என விமான நிலைய அதிகாரிகள் குண்டைத் தூக்கிப் போட்டனர்.

விமானத்தில், 'பிரேக் பாஸ்ட்' தருவர் என்ற நம்பிக்கையில் வந்த என் வயிறு, 'கப கப'வென கூப்பிட ஆரம்பித்தது. வெயிட்டிங் அறையில் வந்து அமர்ந்தேன். அருகே, தமிழ் ஆசாமி போன்று ஒருவர் அமர்ந்து இருந்தார். இருந்தாலும் ஒரு சந்தேகம்; அதனால், இங்கிலீஷில்,'அடித்து' விட்டேன்.

'யூ தமிழ்நாடு... ஆர்...' என, அரைகுறையாக நிறுத்தினேன்.

அவர் இங்கிலீஷில் எனக்கு அண்ணன்.

'எஸ்... தமிழ்நாடு... யூ!' என்றார்.

உடனே, 'அண்ணே...' என நான் அழைக்க, அவர், 'தம்பி...' என பாசத்தைப் பொழிய...

அண்ணன், சிவகாசியைச் சேர்ந்த பெரிய அச்சக அதிபர்களுள் ஒருவர் என்பது தெரிந்தது.

நீண்ட நேரம், 'இந்தியன் ஏர்லைன்ஸ்'ஐ திட்டித் தீர்த்தோம்; பின், 'அண்ணே... பசிக்குது; வாங்க ஏதாவது சாப்பிட்டு வரலாம்...' என்றேன்.

'இரு தம்பி... காசு செலவில்லாம சாப்பிட முடியுமான்னு பாக்கலாம்...' என்றவர், என்னையும் உடன் அழைத்துச் சென்று, விமான நிலைய அதிகாரிகளிடம் இங்கிலீஷில் பொழிய ஆரம்பித்தார்.

'வி... அங்கிரி... யூ மிஸ்டேக்... கிவ் புட்! வி... நோ மணி... கிவ் பிரி புட்...' என, என்னன்னமோ பேசினார்; அதற்கு நல்ல பலன்!

போர்டிங் கார்டை காட்டி, விமான நிலையத்தின் மேல் தளத்தில் உள்ள, 'ரெஸ்டரன்டில்' காலை உணவை முடித்துக் கொள்ள அனுமதி வாங்கி விட்டார்.

காலை உணவை முடித்துக் கொண்டோம்.

பதினோரு மணி அளவில் ஒரு அறிவிப்பு: 'சென்னை செல்லும் பயணிகள், ரெஸ்டரன்டில் லைட் டிபன் இலவசமாக சாப்பிட்டுக் கொள்ளலாம்...'

அண்ணாச்சி ஒரு ஐடியா செய்தார். 'தம்பி, திரும்பவும் அங்கே சென்றால் உதை விழும்; கீழே, 'ஸ்நாக் பார்' இருக்கு... அங்க போய் ஏதாவது ஓ.சி.,யிலே வாங்கி வெட்டலாம் வா...' என, அழைத்துச் சென்றார்.

அங்கே காபி, டீ அல்லது கூல்டிரிங்ஸ் உடன் நாலு பிஸ்கட் கொடுத்தனர். அண்ணாச்சி அவற்றை மறுத்து, 'வி... நோ காபி, டீ, பிஸ்கட்; யூ டேக்... கிவ் கட்லட் ஒன்லி...' எனக் கேட்டார்.

அவர்கள் மறுத்தனர்; பின், அண்ணனின் இங்கிலீஷை தாங்க முடியாமல், கட்லட் கொடுத்தனர்.

ஆக மொத்தம், காலையில் பிரட் டோஸ்ட், ஆம்லட், காபி. (நான் பிரட் மட்டும்) 11மணிக்கு, 'கட்லெட்!' மற்ற பயணிகளுக்கு வெறும் டீ, பிஸ்கட்!

ஒரு வழியாக விமானத்தில் ஏறி, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டைப் பார்த்தால், அதில் பிரெஞ்சுக்காரர்கள்!

'திஸ்... அவர்... சீட்!' என்றார் அண்ணாச்சி.

'நோ... நோ... இன்டியா ஆல் பிரி...' என்றனர் பிரெஞ்சுக்காரர்கள்; அவர்களும் ஆங்கிலத்தில் எங்கள் கேஸ்!

'வாட் பிரி... கோ... கோ... யுவர் கன்ட்ரி ஐ கம்... நோ பிரி... திஸ் மை கன்ட்ரி... கோ... கோ... யுவர் சீட்!' என, சத்தம் போட, சுற்றி அமர்ந்திருந்தவர்கள் அண்ணனின் ஆங்கிலப் புலமையை கேட்டு, நையாண்டிச் சிரிப்புடன் தலையை திருப்பிக் கொண்டனர்.

அண்ணன் போட்ட சத்தத்திற்கு பலன், எங்கள், 'சீட்' எங்களுக்கு கிடைத்தது!

சீட்டில் அமர்ந்ததும், விமான நிறுவன வெளியீடான, ஆங்கில புத்தகத்தை எடுத்து ஆங்கிலக் கட்டுரையில் மூழ்கினார் அண்ணன்.

ஆச்சரியமாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்த என்னை நோக்கி, 'தம்பி... வாயுள்ள பிள்ளை பிழைக்கும்...' என்றார். 'ஆங்கிலம் சரளமாக பேசத் தெரியாவிட்டாலும்...' என்று, மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

சென்னை வாசகி ஒருவர் எழுதிய கடிதம்: நான் எழுதுவது என்னுடைய தோழியின் கதையை!அவள் பெயர் குமுதா; (உண்மையான பெயர் அல்ல.) அப்பா, மத்திய அரசில் பெரிய ஆபீசர். அம்மா இறந்து விட்டார்; கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை.

தற்போது, என் தோழி, பட்டப்படிப்பு கடைசி வருடம் படித்துக் கொண்டு இருக்கிறாள். அவள், பிளஸ்2 படிக்கும் போது, திலக்கை (உண்மையான பெயர் அல்ல) சந்தித்தாள். இருவரும் இரண்டு ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். பின், அவளை காதலிப்பதாக அவன் கூறியிருக்கிறான். முதலில் இவள் ஆச்சரியமடைந்தாலும், பின் மகிழ்ச்சி. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இருவரும் கடிதங்களையும், வாழ்த்து அட்டைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

குமுதாவின் அப்பாவிற்கு, அவளின் புதிய நண்பனை பிடிக்கவில்லை. மகளிடம் முதலில் சொல்லிப் பார்த்தார்; பின், அவளுக்காக அவனைப் பொறுத்துக் கொண்டார். இப்போது வரை, அவர்கள் இருவருக்கிடையே உள்ள உறவு முறை அவருக்கு தெரியாது. இருவரும் நண்பர்கள் என்றே நினைத்திருக்கிறார்; தெரிந்தால், உயிரையே விட்டு விடுவார்.

சில கருத்து வேறுபாடுகள் குமுதாவுக்கும், திலக்குக்கும் இடையே வரத் துவங்கின. அவள், பட்டமேற்படிப்பு படிக்கக் கூடாது என்று அவனும், படித்தே தீருவேன் என்று இவள் கூறியதில் ஆரம்பித்தது சண்டை. இவனிடம் சொல்லாமல், தன் தோழிகளுடன் அவள் வெளியே சென்றால் கூட சண்டை போடுவதுடன், அவளின் தோழிகள் மேல் பொறாமை படவும் ஆரம்பித்தான். கல்லூரியில் நடக்கும் எல்லா விஷயத்தையும் இவனிடம் சொல்ல வேண்டும்; தவறினால், சண்டை.

ஒரு நாள் யாரோ ஒருவன் குமுதாவிற்கு போன் செய்து இருக்கிறான். இவள் சோஷியல் டைப். அவனோடு போனில் பேசி இருக்கிறாள். இது, திலக்குக்கு தெரிய வர, போன் செய்தவனின் கல்லூரி வாசலில் இவன் காத்துக் கிடக்க, பயந்த அவன், குமுதாவிற்கு மறுபடியும் போன் செய்து, மன்னிப்பு கேட்டு இருக்கிறான்.

இந்த விஷயத்தால் இருவருக்கும் பயங்கர சண்டை. 'கண்டவனோடு எல்லாம் போனில் பேசுகிறாய்...' என்று அவனும், 'அவன் யார் என்று தெரியாது; தெரிதிருந்தால் பேசியே இருக்க மாட்டேன்...' என்று அவளும் சொல்ல, நிலைமை மோசமானது.

அவனின் செயல்கள், அவன் மீது இவள் வைத்திருந்த அன்பை கொன்று விட்டது. அவனின் அடாவடித்தனத்தைக் கண்டு பயந்து, 'உனக்கும், எனக்கும் ஒத்து வராது...' எனக் கூறி, அவனின் கடிதங்களை எல்லாம் எரித்தும் விட்டாள். தான் அனுப்பிய கடிதங்களை கேட்டு இருக்கிறாள். வந்தது வினை!

அவற்றை கொடுக்க மறுத்ததுடன், 'என்னுடன் வெளியே வா; இல்லையெனில், கடிதங்களை உன் அப்பாவிடம் காட்டி விடுவேன்...' என பயமுறுத்த, இவள் முதலில் மறுத்தாள். பின் பயந்து, அவனுடன் செல்ல ஆரம்பித்தாள். இவளின் நிலைமையை கேட்ட ஒரு நண்பன், அவனிடம் பேசிப் பார்த்து இருக்கிறான். உடனே அவன் வீட்டுக்கு, 'இந்த விஷயத்தில் தலையிட்டால், உன்னால் நடக்க முடியாதபடி செய்து விடுவேன்...' என மிரட்டல் போன் கால்கள் வரத் துவங்கவே, பயந்து போன அவன் தாய், அவனை தலையிடக் கூடாது என தடுத்து விட்டாள். இப்போது அவன் குமுதாவை கண்டால், வேறு பக்கம் சென்று விடுகிறான்.

எனக்கு இந்த விஷயம் தற்செயலாகத் தான் தெரிய வந்தது. அவளை இப்போது தினம் வெளியே வரச் சொல்கிறானாம். மறுத்தால், 'தற்கொலை செய்து கொள்வேன், நீ தான் காரணம் என்று எழுதி வைத்து விடுவேன், பப்ளிசிட்டி ஆயிடும்...' என்கிறானாம்.

'கல்லூரி இருக்கிறது; நான் எப்படி வர?' எனக் கேட்டால், 'நீயே வருகிறாயா... இல்லை நீ எழுதிய கடிதத்தை உன் பிரின்ஸ்பால் மற்றும் உன் அப்பாவிடம் காட்டவா?' என, பயமுறுத்துகிறானாம்.

'அப்பாவிடம் காட்டுவேன் என்று தானே பயமுறுத்துகிறான்; உன் அப்பாவிடம் நீயே சொல்லி விடு...' என்றேன். 'அப்பாவிற்கு ஏற்கனவே, ஹார்ட் வீக்! இதைக் கேட்டு ஏதாவது ஆகிவிட்டால்...' என்று பயப்படுகிறாள். 'அவன் செய்வது பிளாக் மெயில்! இது ஒரு குற்றம்; பப்ளிசிட்டி இல்லாமல், நாம் போலீசை பார்த்து, இதுக்கு ஒரு முடிவை கட்டலாம் வா...' என்றேன். சில அரசியல் புள்ளிகளின் பேரைச் சொல்லி, 'இவர்களெல்லாம் இவனுக்கு தெரியும்; தன்னுடைய பலத்தால், அவன் ஏதாவது திருப்பிச் செய்தால் என்னாலோ, அப்பாவாலோ தாங்க முடியாது...' என்று கூறி, பயந்து சாகிறாள்.

நான் எனக்கு தெரிந்த எல்லா யோசனையையும் சொல்லி விட்டேன்; அதை செயல்படுத்த அவளுக்கு துணிச்சல் இல்லை. அவள் பயந்து பயந்து அவனுடன் போவதை, என்னால் காண சகிக்க முடியவில்லை. நீங்கள் எங்களுக்கு உதவி செய்தால், நாங்கள் அதை மறக்க மாட்டோம்.

- பொ.ஆ.,விடம் கடிதத்தை அளித்தேன்; கடிதம் எழுதிய பெண்ணை சந்தித்து பேச, இரு உதவி ஆசிரியைகளை அனுப்பினார் பொ.ஆ.,

மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us