PUBLISHED ON : அக் 17, 2010

** விஜயா பெரியசாமி, மஞ்சக்குப்பம்: உண்மையான மகிழ்ச்சி பணத்தில் தான் இருக்கிறதா?
முழுமையாக, 'ஆம்' என்றோ, 'இல்லை' என்றோ சொல்லிவிட முடியாது! எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர், பரம்பரை பணக்காரர். கோடிக்கணக்கில் சொத்து! ஒரே மகன். இரண்டு பேரன்கள், ஒரு பேத்தி உள்ளனர். சமீபத்தில், பெரியவர், சன்னியாசம் வாங்கி விட்டார். தென்காசி அருகே தனி வாழ்வு நடத்துகிறார். இந்த கேசில் பணம் மட்டுமே உண்மையான மகிழ்ச்சியை தரவில்லை! நண்பன் ஒருவன், எம்.ஏ., படித்தவன்! நல்ல வசதியான குடும்பம். கம்ப்யூட்டர் இன்ஸ்டிடியூட்டில் படிக்கும் போது, பக்கத்து டேபிள் பெண்ணை, இவன், 'சைட்' அடித்தான். இவன் வீட்டில் பெரும் எதிர்ப்பு! இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மணந்து கொண்டனர். ரொம்ப சாதாரண வேலையில் இருக்கிறான்! இந்த கேசில் பணம் இல்லாததால் மகிழ்ச்சிக் குறைவு தான்! எனவே, பணத்தை ஒரேயடியாக ஒதுக்கி விட முடியாது!
***
*என்.அபர்ணா, வடமதுரை: என் கணவர் மீது அடிக்கடி சந்தேகம் கொள்கிறேன். பிறகு, வருத்தப்படுகிறேன். என்னை மாற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
உங்களது நிலையில் இருத்திப் பாருங்கள் உங்கள் கணவரை - தெளிவு பிறக்கும்!
***
*வெ.பாலாஜி, சுந்தராபுரம்: தற்கொலைகள் அதிகமாகிக் கொண்டே போக காரணம் என்ன?
'டிப்ரஷன்' - மனச்சோர்வு முக்கிய காரணம் என்கின்றனர் - உளவியல் அறிஞர்கள். உலகிலேயே அதிக தற்கொலைகள் நடக்கும் நாடுகள் ஸ்கேண்டிநேவியன் கன்ட்ரீஸ். இந்த நாடுகளில் பனிக்காலங்களில் மக்களுக்கு மனச்சோர்வு அதிகம் ஏற்படுகிறதாம். இதனால், தற்கொலை விகிதம் உலகிலேயே இங்கு அதிகமாக உள்ளதாக கூறுகின்றனர்!
***
** பி.ராஜாராம், மதுரை: வயதை காட்டி, 'ஓய்வெடு' எனக் கூறும் அரசு, திறமையை கவனத்தில் கொண்டு திரும்பவும் பணியில் அமர்த்தினால் என்ன?
ஏற்கனவே பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வயது 30ஐ தாண்டியும் வேலை கிடைக்காமல் இருக்கின்றனர். உங்களின் திட்டத்தை செயல்படுத்தினால் அவ்விளைஞர்களுக்கு, 'ரிட்டயர்' ஆகும் வயதிலாவது வேலை கிடைக்குமா என்பது சந்தேகம். மேலும், கன்னிப் பெண்ணின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து விடும். வேலை இல்லாதவனுக்கு பெண் கொடுக்க தயக்கம் காட்ட மாட்டார்களா?
***
** ஜெ.தாரிணி, திருப்பூர்: அழகான தன் மனைவியை வெளியில் அழைத்துச் செல்வதில்லையே சில கணவன்மார்கள்...
மனதில் அசிங்கம் பிடித்த கொடுமைக்காரர்கள் இவர்கள்... பெண்கள் மனது வைத்து விட்டால் தாங்கள் அடைய நினைக்கும் எதையும் அடைந்தே தீருவர்... பூட்டு போட்டு மூடி வைத்தாலும் காற்றை அடைக்க முடியாது என்பது தெரியாத மூடர்கள்!
***
*ஆ.மல்லிகா, நெல்லிக்குப்பம்: பொறுப்பான பதிலைச் சொல்லுங்கள்... ஆண்களை நம்பலாமா? உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இருக்கிறதா என சோதித்துக் கொள்ளுங்கள்... அப்போது பிறக்கும் தன்னம்பிக்கை... பின் சுலபமாக எதிர்கொள்ளலாம் யாரையும்! ***
*ஆர்.பத்மநாபன், செஞ்சி: என் மனைவி நல்ல குணவதி - ஆனால், அழகில்லை. மற்ற அழகான பெண்களைக் கண்டால் மனம் சபலப்படுகிறது. தப்பென்று தெரிந்தும், மனதை அடக்க இயலவில்லை. மனதை சாந்தப்படுத்த என்ன செய்யலாம்?
திருமணமான அனேக ஆண்களிடம் உள்ள குறைபாடுதான் இது! அழகிய பெணகளை, கலைக் கண்ணோடு பாருங்கள்; தவறு இல்லை! ஆனால், சபலப்படுவது தவறு! உங்கள் மனைவியும் உங்களைப் போலவே எண்ணினால்...? நினைத்துப் பாருங்கள்; சபலம், இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்!
***
