PUBLISHED ON : அக் 17, 2010

மதிய வேளை —
சாப்பாட்டு பாத்திரங்களைத் திறந்து, சாப்பிட்டபடியே பெண் உதவி ஆசிரியைகள், 'குடும்ப வாழ்க்கையில் அதிக அளவு விட்டுக் கொடுத்து தியாகம் செய்வது ஆண்களா, பெண்களா?' என்ற விவாதம் சுவைபட நடத்திக் கொண்டிருந்தனர். தூரத்தில் உட்கார்ந்திருந்த நான், அவ்விவாதத்தை காதைத் தீட்டிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அருகில் அமர்ந்திருந்த நடுத்தெரு நாராயணன் சார், 'இது பொம்பளைங்க விவகாரம்... உருப்படியா ஒரு முடிவும் வராது... சுதந்திரப் போராட்டக் காலத்தில் நடந்த தியாகம் பற்றி கூறுகிறேன்... கேள்...' என்றார்.
'ராமநாதன்... ராமநாதன்னு வக்கீல்...' அவர் ஆரம்பிக்கும் போதே இடைமறித்தேன்...
'ரெண்டு ராமநாதன்களா?'
'போதும்பா கிண்டல்... சொல்றதைக் கேளு... 'ஒத்துழையாமை போராட்டத்தைத் துவக்குவதற்கு முன், அதற்கு ஆதரவு திரட்டுவதற்காக மவுலானா சவுகத் அலியோடு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார் மகாத்மா காந்தி.
'சவுகத் – காந்தி ஜோடி விநோதமாயிருந்தது. அவர்கள் இருவரும் இந்தியா முழுவதுக்குமே பெரிய மனிதர்கள். ஒருவர் உருவத்தில், மற்றவர், சக்தியில்!
'அக்காலத்தில் அவர்களைப் பற்றி ஒரு புரளி கிளப்பி விட்டிருந்தனர். தினசரி, அவர்கள் ஆகாரத்திற்கு ஒரு உயிருள்ள ஆடு தேவை. பாலைக் கறந்து மகாத்மாவுக்கும், ஆட்டை அடித்து மவுலானாவுக்கும் கொடுத்து விட வேண்டும்... இதுவே அந்தப் புரளி.
'ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட ராமநாதன் போன்ற வக்கீல்கள் ரொம்பவே யோசித்தனர். சிலர் குடும்ப பாரம் மிகுதியால், உடனே முடிவுக்கு வர முடியாமல் தவித்தனர்.
'வக்கீல்களுக்கும், சட்டக் கல்லூரி மாணவர்களுக்குமாக தனியே ஒரு கூட்டத்தில் பேசினார் காந்திஜி. அப்போது வக்கீல்கள் தங்களுடைய நிலைமையை விளக்கிக் கூறினர். அவர்கள் கேட்டனர்... 'நாங்கள் பணக்காரர்கள் அல்ல. சிலர், பெரிய குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டியிருந்தது. எங்களுடைய தொழிலை விட்டு விட்டால் எங்களையும், எங்களைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றுவது எப்படி?' என்று.
'அதற்கு மகாத்மா, 'இதற்கு என்னையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு தொழிலும் செய்யவில்லை. நான் அதிகமாக சாப்பிடா விட்டாலும், ஏதாவது சாப்பிட்டாக வேண்டும். ஒரு வேளைக்கு வாட்டிய ரொட்டிகள் இரண்டு தேவை. ஆனால், நான் சாப்பிடும் போது இரண்டல்ல... 20 ரொட்டிகள் கொண்டு வந்து வைக்கின்றனர். என்னுடைய பிரசாரத்திற்காக வெளியில் அலைவதற்கு ஒரு மோட்டார் கார் அவசியம். நான் கிளம்பும் போதெல்லாம் 20 மோட்டார் கார்கள் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு மனிதன் இரண்டு கார்களில் கூட ஏற முடியாத போது இவைகளெல்லாம் தேவைக்கு அதிகம் என்பது உங்களுக்குத் தெரியும்.
'மேலும், 'தேவைக்கு அதிகமாக எனக்குக் கிடைப்பதற்குக் காரணம் என்னுடைய தியாகம் தான். நீங்களும் தேசத்திற்காக உங்களைத் தியாகம் செய்யுங்கள். உங்களுடைய தேசமாகிய பெண், உங்கள் வசப்பட்டு, உங்கள் கையைப் பற்றிக் கொள்வாள்...' என்றார்.
'இந்தச் சொற்களில் சித்தரிக்கப்பட்ட உருவம் வக்கீல்களிடம் ஆனந்தத்தை உண்டாக்கியது. தேசம், தாய் நாடாக விளங்கி அவர்களுடைய வணக்கத்தைக் கோரவில்லை. காதலியாக உருவெடுத்து அவர்களை அணைக்க அழைத்ததாக நினைத்தனர். இதன் பிறகு அவர்களுக்கு எவ்வித சந்தேகமும் எழவில்லை. சங்கத்தின் அங்கத்தினர்கள் ஆறு பேர், காந்திஜி தங்கியிருந்த ஜாகைக்குப் போய், ஒத்துழையாமைத் திட்டத்தின்படி வேலையைப் பகிஷ்கரித்த வக்கீல்களின் பெயர் வரிசையில், அவர்களையும் சேர்த்துக் கொள்ளும்படி விண்ணப்பம் செய்தனர்...'
— நடுத்தெரு நாராயணன் சார் முடித்திருந்தார்; பெண் உ.ஆ.,களின் விவாதம் நீண்டு கொண்டிருந்தது!
***
ஜலதோஷம்... மூக்கடைப்பு, தும்மல், இருமல் என தொந்தரவு அதிகரிக்க, கட்டாய ஓய்வில் இருக்க வேண்டியதாகி விட்டது. அதுவும் ஒரு விதத்தில் பயனளிப்பதாக இருந்தது. பத்திரிகையாளர், சினிமா, சின்னத்திரைகளின் மக்கள் தொடர்பாளர் சுரா, மலையாளத்திலிருந்து, தமிழுக்கு மொழி மாற்றம் செய்திருந்த மலையாள சிறுகதைகள், தகழி சிவசங்கரன் பிள்ளையின் ஒரு நாவல் என பல நூல்களையும் படிக்க நேரம் கிடைத்தது.
'என் குருநாதர் பாரதியார்' என்ற நூலையும் படிக்கும் வாய்ப்பும் அமைந்தது. நூலை எழுதியவர் ரா.கனகலிங்கம் என்பவர்.
நூலில் இருந்து ஒரு பகுதி...
ஒருநாள் பாரதியார் வீட்டுக்குச் சென்றிருந்தேன். என்னைக் கண்டதும் பாரதியார், 'உனக்குத் தம்பலா வீடு தெரியுமா?' என்று கேட்டார். 'தெரியும்!' என்றேன். 'அப்படியானால் அந்த வீட்டுக்குப் போய் வருவோம்...' என்றார்.
நான் திடுக்கிட்டுப் போனேன்.
புதுச்சேரியில் தோட்டி சமூகத்திற்கு தலைவராக விளங்கினார் தம்பலா. அவர் சாராயக் கடை, கஞ்சாக் கடை இவைகளைக் குத்தகை எடுத்துப் பொருள் சம்பாதித்தவர். 1906ம் ஆண்டில் நடைபெற்ற, 'லெமேர்' தேர்தலில் அவர் வோட்டர்களை பயமுறுத்தியது பிரசித்தமான செய்தி. அக்காலத்தில், புதுவையில் தம்பலா என்றால், அழுத பிள்ளை வாய் மூடும் என்பர்.
தம்பலாவின் வீட்டுக்குச் சென்றதும், அவ்வீட்டின் ஒட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டார் பாரதியார். அவர் (தம்பலா) பாரதியாரைக் கண்டவுடன் வரவேற்று, தாழ்மையுடன் கும்பிடு போட்டு நின்றார். தமக்கு எதிரேஇருந்த ஒட்டுத் திண்ணையில் தம்பலாவை உட்காரச் சொன்னார் கவிஞர். பாரதியார் எவ்வளவோ வற்புறுத்தியும் கேளாமல், தோளில் போட்டிருந்த துண்டை விரித்துப் போட்டுத் தரையிலே உட்கார்ந்து கொண்டார் அவர்.
'நான் யார் தெரியுமா?' என்று கேட்டார் பாரதியார். தம்பலா, 'தெரியுங்கோ! நீங்கள் சுதேசிங்கோ!' என்றார். 'அப்படியானால் நீர் பரதேசியா?' என்று பாரதியார் பளிச்சென்று கேட்டார்.
கடைசியாக, 'உம்முடைய வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு உம்மிடம் இரண்டொரு வார்த்தையாவது பேச வேணும் என்ற அவா இருந்தது; இன்று பூர்த்தியாகி விட்டது. நாங்கள் போய் வருகிறோம்!' என்று எழுந்தார் பாரதியார்.
அப்படிப் பிரிந்து விட மனமில்லாதவர் போல், தம்பலாவும் எங்களுடன் கொஞ்ச தூரம் ரஸ்தா வரையில் வந்து, பாரதியாருக்கு நமஸ்காரம் செய்து விட்டுத் திரும்பினார்.
அப்போது என்னை நோக்கி, 'கனகலிங்கம்... தம்பலா நம்மிடம் எவ்வளவு நல்லவனாக நடந்து கொண்டான் பார்த்தாயா? தேர்தல் காலங்களில் ஜனங்களை அடிப்பதும், இம்சிப்பதுமாய் இருந்தான் என்று கேள்விப்பட்டுத்தான் நான் இவனிடம் சினேகம் செய்ய மனமில்லாமல் இருந்தேன்!' என்று சொன்னார் பாரதியார். எந்தக் காரணத்தை முன்னிட்டும் சிலரை ஒதுக்கி வைப்பது தவறு என்று பாரதியார் கருதினார்... ஒதுக்கி வைப்பதோ, ஒடுக்கி வைப்பதோ அவர்களுக்கும் கேடு, பிறருக்கும் கேடு என்பது பாரதியாரின் கொள்கை.
— பாரதியாரைப் பற்றி, இன்னும் பல சுவையான சம்பவங்கள் புத்தகத்தில் இருக்கிறது. புத்தகம் படித்ததில் பொழுது நன்றாகவே போனது அன்று.
***
