
ஏ.ராஜன், பரங்கிப்பேட்டை: ஒருவன் வாழ்க்கையில் உயரும் போது, எதை அவசியம் கடைபிடிக்க வேண்டும்?
நிதானம். உயரும் போது கிடைக்கும் புகழும், பணமும் கண்ணை மறைக்கும்; ஆணவத்தை கொடுக்கும். ஆணவம் கொண்ட எவரும் உருப்பட்டது இல்லை; வாழ்வின் கடைசி கட்டத்தில் துன்பங்களை அனுபவித்தே சாவான்!
டிகோவிந்தன், வடபழனி: சாதாரண பாட்டாளி, ஓடி ஓடி சம்பாதித்தாலும் கோடீஸ்வரனாக முடிவதில்லையே...
முடியாது. உடல் உழைப்பு மட்டுமே பாட்டாளியை பணக்காரனாக்காது; மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும். அது, பல சமயங்களில் கைக்கொடுத்து, பையை நிறைக்கும்.
எஸ்.முருகன், கள்ளக்குறிச்சி: நிலம் பார்த்து நடக்கும் பெண்கள் இன்னும் இருக்கின்றனரா?
சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு நடந்தாலே செயினை பறித்துக் கொண்டு ஓடுகின்றனர்; இடி ராஜாக்கள் இடித்துத் தள்ளுகின்றனர். இத்தனையும் நடக்கும் போது, இப்படி ஒரு கேள்வி தேவையா?
கே.வசந்தசேனா, சுப்பிரமணியபுரம்: ஒரு ஆணும், பெண்ணும் உடல் தொடர்பில்லாமல் தோழமை உணர்வோடு பழக முடியாதா?
முடியும்; பெண்ணால் மட்டும். அதுவும் ஆண் சபலப்படுத்தாமல் இருக்கும் வரை! ஆனால், 90 சதவீத ஆண்கள், 'சபலிஸ்டு'களாகத் தானே இருக்கின்றனர்!
எஸ்.கே.திருஞானம், திண்டிவனம்: குடும்பம் நடத்த இக்காலத்தில் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்?
எவ்வளவு சம்பாதித்தாலும் செலவு செய்து விடும் பழக்கம் இல்லாமல் இருந்தாலே, அவரவர் இப்போது சம்பாதிக்கும் பணமே போதுமானதாக இருக்கும். சம்பாதிக்கும் பணத்திற்குள் வாழ்க்கையை செம்மையாக அமைத்துக் கொள்பவனே அறிவாளி!
எஸ்.முத்துக்குமரன், கோவளம்: ஹை - கிளாஸ், மிடில் - கிளாஸ், லோ - கிளாஸ் இவர்களில் யாருக்கு கனவுகள் அதிகம்?
எப்பவும் நடுவில் சிக்கித் தவிப்பவர் மிடில் கிளாஸ் வர்க்கத்தினர்தான்! 'ஆசை இருக்கு தாசில் பண்ண... அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க...' எந்த பாட்டியோ சொன்ன பழமொழி இது!
ப.தமயந்தி, காஞ்சிபுரம்: சொந்தக் காலில் நிற்க பழகிக் கொண்டிருக்கும் நம் பெண்களிடம், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரித்து வருகிறதா, குறைந்து வருகிறதா?
குறைந்து வருகிறது என்றே பலரும் நினைக்கின்றனர்; இது தவறு. நம் சமூக கட்டமைப்பில் குழந்தைகள், பெற்றோரிடமோ, வாலிப வயதினர் பெரியவர்களிடமோ, மாணவர்கள், ஆசிரியரிடமோ கேள்வி கேட்கக் கூடாது என்ற அவல நிலை உள்ளது. கேள்வி கேட்டால், 'எதிர்த்து பேசுகிறான், திமிர் வந்து விட்டது' என்று பொருள் கொள்கின்றனர். சம்பாதிக்கும் பெண், நியாயமானவற்றுக்கு விட்டுக் கொடுக்கிறார்; நியாயமற்றது குறித்து கேள்வி கேட்கும் போது, விட்டுக் கொடுக்க மறுக்கிறார். இதனால், சம்பாதிக்கும் திமிர் போன்ற பட்டங்கள் கட்டப்படுகின்றன.
பி.எடிசன், முத்தியால்பேட்டை: பொறாமை படாமல் வாழ முடியுமா?
முடியுமே... ஆனால், ஆசைப்படாமல் வாழ முடியாது; அப்படி வாழ்பவன் துறவியாகி விடுகிறான்.

