sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நீ நீயாக்கப்படுவாய்!

/

நீ நீயாக்கப்படுவாய்!

நீ நீயாக்கப்படுவாய்!

நீ நீயாக்கப்படுவாய்!


PUBLISHED ON : டிச 07, 2014

Google News

PUBLISHED ON : டிச 07, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் மாவட்டத்தின் வறண்ட நிலப்பரப்பில் குளமும், குன்றுமாக பாலைவனச் சோலையாக இருந்தது அரசடிக் குப்பம். ஊருக்கு ஒரு குளம் இருப்பதே அதிசயம். ஆனால், இங்கே இரு குளங்கள். அக்குளங்களின் நடுவே சாலை; பெரிய குளத்தின் கீழ்ப்புறத்தில், மலை போன்ற பெரிய குன்று.

'இந்த ஊரில் இவ்வளவு பெரிய மணற்குன்றா...' என்று, அவ்வழியே செல்லும் ஒவ்வொருவருக்கும் தோன்றும். இந்த மணற் குன்றுக்கு, ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு.

செங்களராஜன் என்னும் குறுநில மன்னன், திருவண்ணாமலையில் உறையும் அண்ணாமலையார் மேல் மிகுந்த பக்தி கொண்டவன். இதனால், ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை தீபம் வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, தன் மனைவி, அமைச்சர், படை, பரிவாரங்களுடன் புறப்பட்டுச் சென்று, அவ்வூர் அரசனுடன் சேர்ந்து தீப தரிசனத்திற்குத் தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து கொடுத்து, தீப தரிசனம் முடித்து திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

இந்நிலையில், அடுத்து வந்த கார்த்திகை தீப தரிசனத்திற்கு, தன் மனைவி கர்ப்பிணியாக இருந்ததால், அவளை ஊரிலேயே இருக்கும்படி கட்டளையிட்டு, தான் மட்டும் திருவண்ணாமலைக்குச் சென்று விட்டான் செங்களராஜன்.

ஆனால், திருவண்ணாமலையார் மீது கொண்டிருந்த அளவு கடந்த பக்தியின் காரணமாக, 'தீபத்தைத் தரிசிக்காமல் விடுவது, தன் பிறப்பின் சாபக்கேடு...' என்று கருதினாள் ராணி. அதனால், 'கணவரின் கட்டளையையும் மீறக் கூடாது; அதே சமயம் தீப தரிசனத்தையும் தரிசிக்க வேண்டும்...' என்று நினைத்து, பாதுகாப்பிற்காக விட்டுச் சென்ற அமைச்சர் பெருமக்களுடனும், ஆலோசனை நடத்தினாள்.

அதன்படி, திருவண்ணாமலைக்கு இணையான ஒரு மணற்குன்றினை அமைத்து, அதன் மீது நின்று பார்த்தால் தீபம் தெரியும் வகையில் கல்மேடை அமைத்து, ராணியின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டது. இதன்பின், செங்களராஜன் ஆளுகைக்குட்பட்ட அனைத்து கிராமங்களைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் தலைநகரான அரசடிக்குப்பத்திற்குத் தட்டு, கூடை, மண்வெட்டி, பாரை எடுத்து வர வேண்டும் என்றும், மணற்குன்று அமைக்க பாடுபடுவோருக்கு, ஒரு கூடை மண்ணுக்கு, ஒரு கூடை தானியம் தரப்படும் என்றும், அவ்வாறு உருவாக்கும் மணற்குன்றின் மேல் நின்று திருவண்ணாமலை தீபத்தை அரசியார் இங்கிருந்தே காண ஆசைப்படுகிறார் என்றும் முரசு அறிவிக்கப்பட்டது.

அரசியின் மசக்கை கால ஆசை என்பதால், மக்கள் அனைவரும் அரசடிக்குப்பத்தில் குவிந்தனர். அவர்கள் வெட்டிக் கொட்டிய மண், மலையாகவும், மண் எடுக்கப்பட்ட அந்த இரு பள்ளங்களும் குளங்களானது.

இன்றும் கார்த்திகை திருநாளின் போது, மேள, தாளங்கள் முழங்க, பொம்மை அரசியார் தன் பரிவாரங்களுடன் அந்த மண் மலைக்குன்றில் ஏறி, தீபத்தை தரிசித்த பின்னரே கிராமத்தில், 'சொக்கப்பனை' எரிய விடப்படுகிறது.

ஊர் பெரியவர்கள் பொம்மை அரசியாருக்கு அண்ணாமலை தீபத்தை, மேற்கு புறமாக நின்று சம்பிரதாயத்திற்குக் காட்டும் போது, என் போன்ற இளசுகள், 'எங்கே தெரிகிறது தீபம்? அங்கே திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கோபுர வெளிச்சம் தான் தெரிகிறது...' என்போம். ஆனாலும், இன்றளவும் ஐம்பது மைலுக்கு அப்பால் உள்ள சிதம்பரத்தின் நான்கு பிரதான கோபுரங்களும், பதினைந்து மைலுக்கு அப்பால் உள்ள திருவதிகை வீரட்டீஸ்வரர் கோவிலின் கோபுரமும் தெளிவாகத் தெரிவது நிதர்சனம்.

கால வெள்ளத்தில் பகை மன்னர்களின் படையெடுப்பால், அரசன் கட்டிவைத்த சிவன் கோவில், மணற்குன்று, அதனால் ஏற்பட்ட குளங்களையும் தவிர்த்து, மற்ற அனைத்தும் அழிந்து விட்டன. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்தான் நம் கதாநாயகனின் பூர்விகம். அவன் கதையை அவன் மூலமே கேட்போம்...

என் அம்மா, குழந்தைப் பருவத்தில் சோறூட்டும்போதே பெரிய புராணக் கதைகளையும் கூறி வளர்த்ததால், நாயன்மார்களின் தொண்டும், பண்பும், வைராக்கியமும் என் ரத்தத்தில் கலந்து விட்டன.

அது முதற்கொண்டு எங்கு ஆன்மிக சொற்பொழிவு நடந்தாலும், முதல் ஆளாக அங்கு இருப்பேன். எங்கள் பகுதியில் நான் இல்லாமல் ஒரு சொற்பொழிவும், பட்டிமன்றமும், திருவிழாவும் நடந்ததில்லை.

இதன் விளைவாக மாமிசம் உண்ணும் கூட்டத்தில் இருந்து விலக ஆரம்பித்தேன். அதற்கு தகுந்தாற்போன்று அமைந்தான் என் வகுப்புத் தோழனும், எங்கள் ஊர் சிவன் கோவில் குருக்கள் மகனுமாகிய சுவாமிநாதன்.

பள்ளிக்கூடம் செல்லும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் அய்யர் வீட்டில் இருப்பது, சந்தோஷமாக இருந்தது. ஆரம்பத்தில் அய்யர் தன் மகனிடம், 'ஆச்சாரமில்லாத ஒரு சத்திரியன் ஆத்து பிள்ளையாண்டானை, பூஜை அறை வரை அழைச்சிண்டு வர்றியே... இது உனக்கே நல்லாயிருக்காடா அம்பி... வீட்ல வயசுக்கு வந்த பெண் இருக்கிறாள்ன்னு நோக்கு கொஞ்சமாவது நினைப்பு இருக்காடா அபிஷ்டு...' என்று கோபித்துக் கொள்வார். அய்யர் என்னை ஒரு புழுவைப் போலப் பார்ப்பார். என் நட்பின் பொருட்டு, அதையெல்லாம் பொறுத்துக் கொள்வான் சுவாமிநாதன்.

ஒரு நாள், சிவன் கோவிலில் ஊர் பெரியவர்கள் எல்லாம் கூடி காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

உற்சவ மூர்த்தியான சிவன் சிலையில், கை ஒன்று உடைந்து விட்டதாம்; அதைப்பற்றிய விவாதம் நடந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் ஒருவர், 'திருவிழா ஆரம்பிக்க போகிற இந்த நேரத்தில உற்சவ மூர்த்திக்கு இது போல் நடந்தது சாமி குத்தம். ஊருக்கு என்ன ஆகப் போகுதோ... முதலில் அதற்கு பரிகாரம் செய்யணும்...' என்றார்.

மற்றொருவரோ, 'திருவிழாவிற்குள் சாமி சிலையை மாற்றிவிடணும்...' என்றார்.

'அது சாத்தியமில்லை; ஒரு வாரத்திற்குள் சிலைக்கு ஆர்டர் கொடுத்து, சிலை செய்து வந்து, திருவிழா நடப்பதென்பது முடியாத காரியம்...' என்றார் பிரிதொருவர்.

'ஊனப்பட்ட சிலைய எக்காரணம் கொண்டும் வச்சுக்கக் கூடாது; மாற்றியே ஆகணும். அது எத்தனை ஆண்டு பாரம்பரிய சிலையானாலும் பரவாயில்ல...' என்று தீர்மானமாகச் சொன்னார் ஊர் நாட்டாண்மை. எல்லாரும் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வது போல் தலையசைத்தனர்.

உடைந்த சிலையை மாற்றியே ஆக வேண்டுமென்று முடிவாகி விட்டது. என் தாத்தா, பாட்டி காலம் முதல் எங்கள் காலம் வரை, திருவிழாக் காலங்களில் உயிருள்ள கடவுளாகவே கருதப்பட்ட உற்சவ மூர்த்தி, இப்போது மாற்றப்பட உள்ளதை நினைக்கும் போது எனக்கு அழுகை வந்தது. அப்போது நாட்டாண்மையின் பேரன், கையில் கட்டுடன் அழுது கொண்டே அங்கு வந்தான். 'என்ன ஓய்... உம் பேரன் கையில் கட்டு?' என்றார் கோவில் அர்ச்சகர்.

'விளையாடும் போது கீழே விழுந்ததில், எலும்பு உடைஞ்சிடுச்சு; நேத்து தான் புத்தூருக்குச் போய் கட்டு போட்டுட்டு வந்தோம். அதான் வலி பொறுக்க முடியாமல் அழுறான்...' என்றார் நாட்டாண்மை.

இதைக் கேட்டதும் எனக்கு எங்கிருந்து தான் அத்தனை வேகம் வந்ததோ, 'இந்தப் பையனை தூக்கி வெளியில போடுங்க; இவன் இனிமேல் நமக்கு தேவையில்ல. ஊனப்பட்டவன் ஒரு போதும் ஊரில் இருக்க கூடாது...' என்றேன்.

'இந்த சனியனையெல்லாம் யார் உள்ள விட்டது... வாய்க்கொழுப்பை பாத்தியா... இந்த வயசுல, ஊர் பெரியவங்க மத்தியில நாட்டாமை செய்யுது...' என்றனர் கூட்டத்தினர்.

ஆனால், நாட்டாண்மை அமைதியாக, 'அந்தப் பையன பேச விடுங்க; அவன் என்ன தான் சொல்றான்னு பாப்போம்...' என்றவர், என்னைப் பார்த்து, 'நீ சொல்ல வந்ததை தைரியமாகச் சொல்...' என்றார்.

'ஐயா... குழந்தையும், தெய்வமும் ஒண்ணுன்னு சொல்வாங்க. ஆனா, உங்க வீட்டு குழந்தைக்கு ஒரு நியாயம், ஊர் உற்சவமூர்த்திக்கு ஒரு நியாயமா... உற்சவ மூர்த்தியின் கையை சரி செய்து, திருவிழாவை நடத்தலாம்...' என்றேன்.

'அவன் சொல்வது சரிதான்; அவன் யோசனைபடியே நடக்கட்டும்...' என்றார் நாட்டாண்மை. அய்யர் ஓடிவந்து என் கையை பிடித்து, 'பேஷா சொன்னேடா அம்பி... நீ சாட்சாத் அந்த ஆண்டவனாகவே என் கண்ணுக்கு தெரியுற...' என்றார்.

அய்யருக்கும் இக்கருத்தில் உடன்பாடு இருப்பதால், உற்சவ மூர்த்தியின் கையை சரி செய்து, திருவிழாவை நடத்துவது என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மறுநாள் காலை சுவாமிநாதனை கூட்டிக் கொண்டு பள்ளிக்கூடம் செல்வதற்காக, அய்யர் வீட்டுக்கு சென்றேன். என்னை எப்போதும் ஒரு புழுவைப் போல் பார்க்கும் அய்யர், ஒருவித பாசத்துடன் பார்த்தார். இருவரும் பள்ளிக்கு கிளம்பினோம். அப்போது அய்யர் சுவாமிநாதனைப் பார்த்து, 'வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன்னாடி, ஹயக்கீரிவ மந்திரத்த தவறாமல் சொல்லுப்பா...' என்றார்.

'நான் மறந்தாலும் இவன் விடமாட்டான்; இவனும், நானும் சேர்ந்தே சொல்வோம்...' என்றான் சுவாமிநாதன்.

'இவனா... இவனுக்கு என்ன தெரியும்? ஹயக்கீரிவ மந்திரத்தை எங்கே சொல்லு பாப்போம்...' என்று என்னை பார்த்து கேட்டார் அய்யர்.

ஞானானந்த மயம் தேவம்

நிர்மல ஸ்படிகாக்ரிதம்

ஆதாரம் ஸ்ர்வ வித்யானாம்

ஹயக்கீரிவ உபாஸ்மஹே! என்று சொல்லி முடித்ததும், 'இதற்கு அர்த்தம் தெரியுமாடா அம்பி?' என்று கேட்டார் அய்யர். எனக்கு தெரிந்ததை சொன்னேன். 'இதை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தது?' என்று கேட்டார்.

'நீங்கள் தான்...' என்றேன்.

'நான் ஒருநாள் கூட உனக்கு சொல்லி தரலையே...' என்றார் ஆச்சரியத்துடன்

'நீங்கள் சுவாமிநாதனுக்கு சொல்லிக் கொடுக்கும் போது, காதில் வாங்கிப்பேன். அதையே திரும்ப திரும்ப சொல்லிப் பழகிக்கிட்டேன்...' என்றேன்.

இதைக் கேட்டதும், அய்யர் கண்கள் கசிய, 'டேய் சுவாமிநாதா... நீ நல்ல பிள்ளையாண்டானைத் தான் நண்பனாக தேர்ந்தெடுத்துருக்கிற...' என்றவர், 'அம்பி... நீ எப்போ வேண்டுமானாலும் எங்க ஆத்துக்கு வந்து போகலாம்...' என்று, என் தலைமேல் கைவைத்து ஆசீர்வதித்தார்.

நாட்கள் சிட்டாகப் பறந்தோடின. என் விருப்பப்படி வாழ்க்கை அமையவில்லை; என் சமூகம் சார்ந்த வாழ்க்கைக்கு தள்ளப்பட்டு, எங்களுக்கே உரிய சண்டை, சச்சரவு, வெட்டு, குத்து, கோர்ட்,கேஸ் என்று என் வாழ்க்கை மாறிப் போனது. ஆனாலும், என் அடி மனதில் அய்யர் வீட்டில் நடக்கும் கிருஷ்ண ஜெயந்தியில், கிருஷ்ணனின் சின்னப் சின்னப் பாதங்களை வரைந்து, கிருஷ்ணனை வீட்டிற்குள் அழைப்பது, நவராத்திரி கொலு வைப்பது போன்ற விசேஷங்கள் எனக்கு மகிழ்ச்சியளித்தன.

'இந்த இளம் வயதிலேயே, வாழ்க்கையின் அத்தனை துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்தாகி விட்டது. இனி, ஊர் விவகாரங்களில் தலையிடுவது இல்லை; ஒதுங்கி வாழ்வது...' என்று எனக்குள்ளேயே தீர்மானித்து, பெரும்பாலான நேரங்களில் மவுனமாகவும், தியானத்திலும் கழிக்கலானேன். சுவாமிநாதனை மட்டும் அவ்வப்போது சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன்.

அப்படித்தான் ஒருநாள் சுவாமிநாதனை சந்திக்க அவர்கள் வீட்டிற்கு சென்ற போது, 'அய்யோ... அம்மா...' என்று வீட்டுக்குள் இருந்து சத்தம் வந்தது. வேகமாக வீட்டிற்குள் ஓடினேன். அங்கே ஒரு முரட்டு மனிதன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தான். சுவாமிநாதன் கையில் ரத்தம் தோய்ந்த கத்தி இருந்தது.

'டேய்... என்னடா இது?' என்று பதறினேன்.

அவனால் எதுவும் பேச முடியவில்லை. அவன் தங்கை காயத்ரி தான் அழுது கொண்டே திக்கித் திணறி கூறினாள்...

'பக்கத்து ஊர் ரவுடி ஒருத்தன், நான் காலேஜுக்கு போகும்போதும், வரும் போதும் கேலி, கிண்டல் செய்வான். இன்னைக்கு எப்படியோ வீட்டுல யாரும் இல்லாதத தெரிஞ்சுண்டு ஆத்துக்கே வந்து வம்பு செஞ்சான். நல்ல வேலையாக அந்த நேரம் பார்த்து சுவாமிநாதன் வந்துட்டான்.

'அந்த ரவுடி என் தாவணியை பிடித்து இழுத்து வம்பு செய்யவே, சுவாமிநாதன் அவனை கோபத்தோடு தள்ளி விட்டான். அந்தப் பாவி அவன் வைத்திருந்த கத்தியை எடுத்து குத்த வந்தான். படக்கென்று அந்த கத்தியை பிடிங்கி, சுவாமிநாதன் அவனை குத்திட்டான்...' என்றாள் அழுதபடி.

நான் சுவாமிநாதனைப் பார்த்தேன். அவனோ, 'தன்னை தாக்க வரும் பசு மாட்டையே கொல்லலாம் என்று மனுநீதி சொல்றது...' என்று உளறிக் கொண்டிருந்தான்.

நான் ஒரு தீர்மானத்திற்கு வந்தேன். அவன் கையிலிருந்த கத்தியை வாங்கியபடி, 'எனக்கொரு சத்தியம் செய்து கொடு...' என்றேன். அந்தநிலையில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. என் கையை அழுத்திப் பிடித்தான். அதையே சத்தியமாக எடுத்துக் கொண்டு, 'நான் சொல்றத எதையும் மறுத்துப் பேசாம இரு...' என்று சொல்லி, போலீசுக்கு போன் செய்து, 'அய்யர் வீட்டில ஒரு கொலை நடந்து விட்டது; உடனே வாங்க...' என்றேன்.

அடுத்த அரைமணி நேரத்தில் போலீஸ் வந்தது. போலீசாரிடம் இறந்தவனை காட்டி, 'இவன் ஒரு திருடன்; இவங்க வீட்டில் கோவில் நகை இருப்பது தெரிந்து, இவர்களை தாக்கி, நகைகளை கொள்ளையடிக்க முயற்சித்தான். எதேச்சையாக வந்த நான், அவனை தடுத்த போது, என்னை கொலை செய்ய வந்தான். அதனால், என்னை தற்காத்துக் கொள்ள அவனை குத்தி விட்டேன்...' என்றேன்.

என்னை கைது செய்து ஜீப்பில் ஏற்றியது போலீஸ். அந்நேரம் வெளியே சென்றிருந்த அய்யரும், மாமியும் வந்தனர்.

'என்ன இருந்தாலும் சத்திரியன் அவன் புத்தியை காட்டிட்டான் பாத்தியா... அந்தத் திருடனை அடிச்சு விரட்டாமல், இப்படியா கத்தியால குத்திக் கொலை செய்வா... வீடெல்லாம் ஒரே ரத்தக்கறை. இனி, நான் எப்படி பூஜை செய்வேன்; அபிஷ்டு... அபிஷ்டு...' என்று முணுமுணுத்தபடி ரத்தக் கறையை கழுவினார் அய்யர்.

தன் மகள் வாழ்க்கையே கறை படிய காத்திருந்ததோ, தன் மகன் தான் கொலைகாரன் என்பதோ பாவம் அய்யருக்கு தெரியாது.

சுவாமிநாதனும், காயத்ரியும் என்ன செய்வதென்று தெரியாமல், சுவர் மூலையில் சாய்ந்து, அழுது கொண்டிருந்தனர். வெளி உலகத்தில் சத்திரியனான நான், சத்திரியனாகவே இருந்து விட்டு போகிறேன்.

என் பக்தியும், தியானமும் இனி சிறைச்சாலையில் தொடரும்.

ரா. மணிவாசகம்

வயது : 53,

கல்வித் தகுதி: எம்.ஏ.,

பணி: இயக்குனர், வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. சமூக சேவை செய்வது, சமூக விழிப்புணர்வு கருத்துகளை வலியுறுத்தும் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.






      Dinamalar
      Follow us