
எஸ்.இருதயராஜ், சிவகங்கை: மனம் சோர்வுறும் போது, என்ன புத்தகங்கள் படிக்கலாம்?
ராமகிருஷ்ண பரமஹம்சர் அருளியது... மூன்று தடி தடி வால்யூம்கள்... உங்கள் ஊரில் உள்ள புத்தகக் கடைகளில் கிடைக்கும். தினமும் கொஞ்ச நேரமாவது படித்தால், வாழ்க்கை தத்துவம் புரியும்; எப்படி வாழ வேண்டும் என்று தெரிய வரும்; மன அமைதி நிச்சயம் கிடைக்கும்.
ஜி.திருமலைராஜ், சூளைமேடு: 'சுள் சுள்' என, எதற்கெடுத்தாலும் எனக்கு கோபம் வருகிறதே...
ரத்த சோகையும், நரம்பு தளர்ச்சியும் உங்களுக்கு இருக்க வாய்ப்புண்டு; மருத்துவரை அணுகுவது நல்லது.
டி.அர்ஜுன்,கொடுங்கையூர்: நம்பிக்கையானவர்களிடம் கூட சில நேரங்களில் சந்தேகம் ஏற்படுகிறதே...
நீங்கள், அவரை இன்னும் முழுமையாக அறிந்து, புரிந்து கொள்ளாதது ஒரு காரணமாக இருக்கலாம். உங்கள் நம்பிக்கைக்குரியவரைப் போட்டுக் கொடுத்து, தான் பலனடைய நினைப்பவரின் பேச்சுக்கு நீங்கள் செவிமடுத்தது அடுத்த காரணமாக இருக்கலாம். ஆனால், ஒரு போதும் அவசர முடிவெடுத்து விடாதீர்கள்; தீர ஆராய்ந்து செயல்படுங்கள்!
சி.எஸ்.கண்ணன், பொள்ளாச்சி: சுற்றுலா செல்ல ஆசை; ஆனால், அது வீண் செலவு என்று பிறர் சொல்கின்றனர். என்ன செய்ய?
வீண் செலவே அல்ல; குறுகிய மனப்பான்மையை போக்கி, அறிவை விசாலமாக்கும் தன்மை கொண்டது சுற்றுலா. கோவையும், பொள்ளாச்சியுமே உலகம் என எண்ணிக் கொண்டிருக்கும் பலரும், சுற்றுலாவாக புதிய இடங்களுக்கு செல்லும் போதுதான் வெளியுலகம் தெரிய வரும். இதனால் ஏற்படும் நன்மைகளை, பின்னர் அனுபவபூர்வமாக உணர்வீர்கள்.
என்.ஷ்யாம்சுந்தர், அனுப்பானடி: இயல்பாகவே நகைச்சுவை குணம் பெண்களிடம் அதிகமா, ஆண்களிடம் அதிகமா?
பெண்களைக் காணும் போதும், அவர்களுடன் பேசும் போதும் நகைச்சுவை பொங்கிவிடும் ஆண்களிடம்!
மு.ஜெயந்தன், மாதம்பட்டி: எதிர்காலத்தில், சவுகரியமாக, சந்தோஷமாக வாழ போகிறவர்கள் யார்?
அடுத்தவன் நம்மை மதிக்க வேண்டும், உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்காக, ஆடம்பர செலவு செய்யாமல், எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்போர் அனைவரும் சந்தோஷமாக, சவுகரியமாக இருப்பர். செலவை குறைக்க முடியாமல் கடன் வாங்கி செலவு செய்பவர்களின் வாழ்க்கை, கடைசியில் தற்கொலையில் தான் முடியும்!
வி.ராமலிங்கம், விழுப்புரம்: செய்யும் வேலையில் கடமை தவறாமல் பணியாற்றுபவர்கள் எந்தத் துறையில் அதிகம்?
எந்தெந்த துறையில் தினமும் மாமூல் மற்றும் 'கவனிப்புகள்' கிடைக்கிறதோ, அங்கெல்லாம் சுறுசுறுப்பாக, கடமை தவறாமல் வேலை நடக்கிறது.

