
அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் நண்பர் ஒருவர் சென்னை வந்திருந்தார். இரவு விருந்துக்கு, லென்ஸ் மாமா சகிதம் சென்றிருந்தோம்.
அமெரிக்க நண்பர், 'எலிபண்ட் பஞ்ச்' ஒன்று ஆர்டர் செய்தார். அது ஒரு, 'காக்டெயில் டிரிங்க்!' யானை லேசாக மிதித்தால் எப்படி கிறக்கம் வருமோ, அதே போன்ற கிறக்கம் இந்த உ.பா.,வில் வரும் என்பதால், இதற்கு, 'எலிபண்ட் பஞ்ச்' என்ற பெயராம்! எல்லா வகை உ.பா.,லும், 'ஸ்மால் ஸ்மால்' போட்டு, அதன் மீது கிரஷ்ட் ஐஸ் நிரப்பி சாப்பிட வேண்டுமாம்... நண்பர் கூறிய வியாக்கியானம் இது!
வழக்கம் போல, நான் ஆரஞ்சு ஜூஸ் சொல்ல, 'எனக்கும் அதுவே!' என்றார் லென்ஸ் மாமா. ஆச்சரியத்துடன், நானும், நண்பரும் மாமாவை நோக்க, 'இந்த டாக்டருங்களுக்கு என்ன பொழுது போக்கு...
'ரத்தத்துலே கொழுப்பு சேர்ந்து போச்சு. மாரடைப்பு வந்துரும் அது, இதுன்னு பயம் காட்றாங்க. உ.பா.,வை மூணு மாசம் சுத்தமாக நிறுத்தணுமாம். அப்புறம் திரும்ப, 'பிளட் டெஸ்ட்' பண்ணித்தான், 'ரிசல்ட்' சொல்வாங்களாம்...' என, அலுத்துக் கொண்டார்.
லென்ஸ் மாமாவுக்கு, அட்வைஸ் செய்த டாக்டருக்கு மனசுக்குள்ளேயே நன்றி செலுத்தி, நேரிலும் நன்றி தெரிவிக்க வேண்டும் என நினைத்து, அமெரிக்க நண்பரிடம், 'டாக்டர்ன்னு மாமா சொன்னதும், உலகத்திலேயே இள வயதில் டாக்டரான அம்பாட்டியின் குடும்பம் தான் நினைவுக்கு வருகிறது...
'சிறிது காலத்துக்கு முன், வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டில் அம்பாட்டி குடும்பமே கம்பி எண்ணியதே... அதைப் பற்றி அமெரிக்கர்களும், அங்கு வசிக்கும் நம் இந்தியர்களும் என்ன பேசிக்கிட்டாங்க?' எனக் கேட்டேன்.
யானை அவரை, 'உதைக்க' ஆரம்பித்திருந்தது; இரண்டு, மூன்று மிடறுகள் உள்ளே சென்று இருந்தன.
'கேவலப்பட்டுப் போனோம்பா. இந்த மாதிரி வரதட்சணைப் பழக்கம் நம்மிடையே இருக்கிறது என்பதே, அம்பாட்டி குடும்பத்தினர் போலீசில் சிக்கிய பின் தான், பல அமெரிக்கர்களுக்கே தெரிய வந்தது.
'எதற்காக வரதட்சணை வாங்குகிறோம் என்பதே அவங்களுக்கு புரியல; நம்மாலும் அவர்களுக்கு விளங்க வைக்க முடியல.
'உங்கள் ஊர் வழக்கப்படி, பெண் தானே வீட்டு வேலைகள், சமையல் வேலை, குழந்தை பராமரிப்பு, கூட்டுக் குடும்பம் என்றால் கணவனின் வீட்டார் அனைவருக்கும் பணிவிடை செய்யணும். அப்புறமும், கணவனுக்கு வேண்டிய நேரம் எல்லாம் விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உடல் அயற்சியாய் இருந்தால் கூட, இன்பம் தர ஒத்துழைப்புக் கொடுக்கின்றனரே...
'இதற்கெல்லாம் ஆண்கள் அல்லவா பணம் கொடுத்து, மணம் செய்து கொள்ளணும்... இங்குள்ள அமெரிக்கப் பெண்களிடம் திருமணம் செய்து கொள்ள வரதட்சணை கேட்டுப் பாருங்க... கிழிந்த பழைய செருப்பால் நாலு சாத்து சாத்துவர் என, நாக்கைப் பிடுங்கி சாகும்படி பல அமெரிக்க நண்பர்களும் பேசிட்டாங்கப்பா...' என்றார் பரிதாபமாக!
கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த நான், லென்ஸ் மாமாவை கவனித்தேன். அவரது கவனம் எல்லாம், 'எலிபண்ட் பஞ்ச்'ல் இருந்தது. கலவையான அதன் வண்ணமும், அதில் இருந்து எழும்பும் வாசமும் மாமாவை கலங்கடிக்கச் செய்து கொண்டிருப்பதைப் புரிந்து, 'மாமா... நீங்க எதுவுமே பேசலியே...' என்றேன். சுதாரித்துக் கொண்டவர், 'எஸ் எஸ்... இப்போ நீங்கெல்லாம் அமெரிக்காவுலே, 'செட்டில்' ஆனவங்க. அங்கே உங்களுக்குள்ளே நடக்கும் திருமணங்களில் வரதட்சணை பிரச்னை கிடையாது தானே... ஏன்னா, நீங்கள் எல்லாம் வெல் எஜுகேட்டட்...' என்றார்.
தலையைக் குனிந்து கொண்ட அமெரிக்க நண்பர், சிறிது நேரம் எதுவுமே பேசவில்லை. பின்னர், 'உலகின் எந்த மூலையில் நாம் இருந்தாலும், நம் பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்க முடியுமா... பெண்ணும், பையனும் அமெரிக்காவிலேயே பிறந்து, வளர்ந்து, படித்து இருந்தாலும், அவர்களது பெற்றோர் அங்கேயே, 50 வருடங்களாக வாழ்ந்து இருந்தாலும், வரதட்சணை வாங்கத் தான் செய்றாங்க...' என்றார்.
வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும், உயர் படிப்பு படித்தவர்களிடையே தான் அதிக அளவில் நிலவுகிறது என்பதற்கு உதாரணமாக, எம்.எஸ்சி., பி.எட்., படித்த கன்னியாகுமரி மாவட்ட வாசகி ஒருவர் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி இதோ:
என் அம்மா, பி.இ., எம்.இ., முடித்து, நல்ல வேலையில் இருக்கும் சில வரன்களைப் பார்ப்பதாக அறிகிறேன். வரன்கள், ௨௦ லட்சம், ௩௦ லட்சம் ரூபாய் என்று கேட்கும் போது, தன் இயலாமையை நினைத்து, கோபம் கொண்டு, யாரிடமாவது சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார் என் அம்மா, என எழுதியுள்ளார். (௩௦ லட்சம் ரூபாய் என்பதை பேப்பரில் எழுதிப் பார்க்கத் தான் முடியும், நம்மில் பலருக்கு!)
இந்தியாவின் மெத்தப் படித்தவர்கள் வாழும் தலைநகர் புதுடில்லியில் தான் வரதட்சணை கொடுமையால் நிகழும் இறப்புகள் அதிகம். ஆனால், படிப்பறிவு மிகக் குறைவாக உள்ள அருணாசலப்பிரதேசத்தில் வரதட்சணை சாவுகள் ரொம்பவே குறைவு.
இந்தியா முழுவதும் ஆண்டுக்கு, 6,000 வரதட்சணை இறப்புகள் நடக்கின்றன என, மத்திய உள்துறை அமைச்சகம் சொல்கிறது. ஆனால், சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் சுபத்ரா சவுத்ரி என்பவர் என்ன கூறுகிறார் தெரியுமா?
வரதட்சணையைத் தொடர்புபடுத்தி பதிவு செய்யப்படுபவை, 40 சதவீத இறப்புகள் தான். ஆனால், உண்மையில், ஆண்டு தோறும், 12 முதல், 15 ஆயிரம் வரதட்சணைச் சாவுகள் இந்தியாவில் நடக்கின்றன.
— என்ன சிந்தனை? உங்கள் மகனுக்கு எவ்வளவு வாங்கலாம் என்றா?
இது, ஒரு விடாக்கண்டன், கொடாக்கண்டன் கதை:
ஒரு குருவிடம், 'வழக்காடுதல்' கற்றுக் கொள்ள சென்றான் ஒரு இளைஞன். அவனை சிறந்த வழக்கறிஞராக்குவதாக உறுதியளித்து, அதற்கு தட்சணையாக, ஒரு பெரும் தொகை கேட்டார் குரு.
அந்த இளைஞன், பாதி தொகையை அப்போதே தந்து விடுவதாகவும், மீதி தொகையை தான் எடுத்துக் கொள்ளும், முதல் வழக்கில் ஜெயித்தால் மட்டுமே தர முடியும் என்றான்.
தன் மாணவன் நிச்சயம் ஜெயிப்பான் என்ற நம்பிக்கையில், குருவும் அதற்கு ஒப்புக் கொண்டார். அதன்படியே ஒரு ஒப்பந்தமும் எழுதி, இருவரும் கையெழுத்திட்டனர்.
இளைஞன் அங்கேயே தங்கி கல்வி கற்றான்; கல்வி முடிந்ததும் குருவிடம் விடைபெற்று சென்று விட்டான்.
இரண்டு, மூன்று மாதமாகியும், அவனிடம் இருந்து எந்த பணமும் வராததால், குருவே அவனைத் தேடிச் சென்றார். அவனோ, தான் இதுவரை எந்த வழக்கையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றும், அதனால், ஒப்பந்தப்படி இப்போது பணம் தர முடியாது என்று சொல்லி விட்டான்.
எப்போது கேட்டாலும், அவன் இதையே சொல்வதால் பொறுமை இழந்த குரு, 'இந்த இளைஞன் எனக்கு தருவதாக சொன்ன தொகையை தராமல் ஏமாற்றுகிறான்...' என்று, அவன் மீது ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அந்த இளைஞன் சந்தித்த முதல் வழக்கு இதுதான்.
'குருவுக்கு இவன் பணம் தர வேண்டும்...' என்று நீதிபதி தீர்ப்பளித்தால், முதல் வழக்கில் சிஷ்யன் தோற்றவனாகிறான். அதனால், ஒப்பந்தப்படி பணம் தர வேண்டியதில்லை. 'பணம் தர வேண்டாம்...' என்று தீர்ப்பு வந்தால், தீர்ப்புப்படி சிஷ்யன் பணம் தர வேண்டியதில்லை. எப்படிப் பார்த்தாலும் இவன் பணம் தர வேண்டியதில்லை - இது இளைஞன் தரப்பு வாதம்.
'பணம் தர வேண்டும்' என்று தீர்ப்பு வந்தால், தீர்ப்புப்படி சிஷ்யன் பணம் தர வேண்டும். 'பணம் தர வேண்டாம்' என்று தீர்ப்பு வந்தால், இவன் வழக்கில் ஜெயித்தவனாகிறான். எனவே, ஒப்பந்தப்படி பணம் தர வேண்டும். எப்படிப் பார்த்தாலும் சிஷ்யன் பணம் தர வேண்டும். - இது குரு தரப்பு வாதம்.
எத்தனை கோடி குழப்பம் வைத்தாய் இறைவா!

