/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கதாநாயகனின் கதை! - சிவாஜி கணேசன் (11)
/
கதாநாயகனின் கதை! - சிவாஜி கணேசன் (11)
PUBLISHED ON : டிச 14, 2014

'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற நாடகத்தில், சத்ரபதி சிவாஜியாக நடித்த என்னை, 'சிவாஜி கணேசன்' என்று அழைத்தார் ஈ.வெ.ரா.,
விழுப்புரம் சின்னையா மன்றாயரின் மகனான வி.சி.கணேசன், அன்று முதல், சிவாஜி கணேசன் ஆகிவிட்டேன். இச்சம்பவம், என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பமாக அமைந்தது.
சென்னையில் சக்தி நாடக சபை சார்பில், நாடகங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, 'சம்சார நவுகா' என்ற நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார் பி.ஆர்.பந்துலு. அதில், அவரது நடிப்பு என்னை கவர்ந்து விட்டது. அன்று
முதல் அவரது விசிறியாகி விட்டேன்.
பி.ஆர்.பந்துலுவுக்கு மட்டுமல்ல, ராதா அண்ணன் நடிப்புக்கும் நான் விசிறி!
சக்தி நாடக சபையிலிருந்த முக்கிய நடிகர்கள் பலர் விலகி விடவே, எனக்கு அதில் சேர அழைப்பு வந்தது; அதில் சேர்ந்தேன்.
அப்போது அதன் முக்கிய நாடகங்களில், 'விதி' என்ற நாடகமும் ஒன்று. வேலூரில் இந்நாடகத்தைப் பார்த்த பி.ஏ.பெருமாள், கம்பெனி நடிகர்களை வைத்தே இதைப் படமாக்க விரும்பினார். ஆனால், என்ன காரணத்தினாலோ அது நடைபெறவில்லை.
கடந்த, 1950ல், திருச்சியில் எங்கள் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தான், என் வாழ்க்கையில் மற்றொரு பெரிய திருப்பம் ஏற்பட்டது.
சினிமாவில் நடிக்க வைப்பதற்காக கிருஷ்ணன், பஞ்சு மற்றும் பெருமாள் போன்றோர் திருச்சியிலிருந்து என்னை சென்னைக்கு
அழைத்து வந்தனர்.
அவர்கள் முயற்சியால், பராசக்தி கணேசனாகி விட்டேன். ஆனாலும், என்னை இந்தத் தொழிலுக்கு இழுத்து வந்த கட்டபொம்மனை மறக்க முடியவில்லை. ஒரு நாளாவது கட்டப்பொம்மனாக நடித்து விட வேண்டுமென்ற எண்ணம், என்னை விட்டு அகலாதிருந்தது. இந்த என் எண்ணம் தான், சிவாஜி நாடக மன்றத்தில், 'கட்டபொம்மன்' நாடகம் உதித்ததற்கு காரணம்.
ஒரு நாள், கோவில்பட்டியில் நாடகம் நடத்திவிட்டு, கட்டபொம்மன் தூக்கில் தொங்கிய கயத்தாறு வழியாக திருநெல்வேலிக்கு காரில் போய்க் கொண்டிருந்தோம். எங்கள் தலைவர் சக்தி கிருஷ்ணசாமியும் உடன் இருந்தார். அவரிடம் என் வெகுநாளைய ஆசையைக் கூறி, கட்டபொம்மன் கேரக்டரை ஒரு சிறந்த நாடகமாக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.
அவர் நாடகத்தை எழுதி முடித்ததும், படித்துப் பார்த்தேன். நாடக அமைப்பும், அவர் எழுத்தும், தரமாகவும், புதுமையாகவும் இருந்தன. என் வெகுநாளையத் துடிப்புக்கு இரட்டிப்பு ஊக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், மற்றொரு எண்ணமும் பிறந்தது.
'சிவாஜி நாடக மன்றக் குழு'வில் ஏறக்குறைய, 60 கலைத் தொழிலாளர் இருந்தனர். அவர்களில் ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலோர் குடும்பம், குழந்தைகள் என உள்ளவர்கள்; அவர்கள் நாடக வருமானத்தையே பெரிதாக எதிர்பார்க்கும் நிலையில் இருந்ததால், அவர்கள் ஊதியத்தை அதிகமாக்க நினைத்தேன். ஆனால், அடிக்கடி நாடகம் நடந்தால் தான் அவ்வாறு செய்ய முடியும். அதனால், கட்டபொம்மன் நாடகத்தை எந்த குறையும் இல்லாமல், சிறப்பாக நடத்துவதற்காக புதிதாகவே தயாரிக்கத் திட்டமிட்டேன்.
'வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகத்தைத் தயாரிக்க ஏறக்குறைய, 20 மாதங்கள் ஆயின.
சக்தி கிருஷ்ணசாமியால் நாடகம் எழுதி முடிக்கப்பட்டதும், அதற்கான காட்சிகளின் சித்திரங்களை வரைய, தர்மராஜ் என்பவர் நியமிக்கப்பட்டார்.
ஆடை, அணி தயாரிப்புக்கென, டெய்லர் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். காட்சி ஜோடனைக்கும், உடைத் தயாரிப்புக்குமாக ஓராண்டு ஆனது. அதற்கென, 50 ஆயிரம் ரூபாய் செலவழிக்கப்பட்டது.
பின், ஓரிரு மாதங்கள் நாடகத்துக்கான ஒத்திகை நடைபெற்றது. பத்து நாட்கள் அண்ணாமலை மன்ற மேடையில் நாடக ஒத்திகையும், கடைசி நாள், முழு அமைப்போடு நாடக ஒத்திகையும் நடைபெற்றது.
ஆக., 28, 1957ம் ஆண்டு, புதன்கிழமை, 'வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகம் முதன்முதலாக சேலம் கண்காட்சி கலையரங்கத்தில் அரங்கேற்றப்பட்டது. அதற்கு தலைமை தாங்கியவர், டாக்டர் மு.வ., அவர் நாடகத்தைப் பெரிதும் வியந்து, புகழ்ந்து பாராட்டினார். மக்கள் ஆதரவு, நாளுக்கு நாள் எதிர்பாராத வகையில் பெருக்கெடுத்தது. முயற்சியும், உழைப்பும், ஆசையும் வீணாகவில்லையென்ற உவகை, என் மனதை நிறைத்தது.
அதைத் தொடர்ந்து, சென்னையில் பல நாடகங்கள் நடந்து விட்டன. ஓய்வில்லாத படப்பிடிப்பிற்கிடையிலும், 25 நாட்களுக்குள்,
16 நாடகங்கள் நடந்தன.
பல நாடகங்களில், அதிக வேலையுள்ள பெரும் பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறேன். கட்டபொம்மன் நாடகத்தில் இயற்கையாக எழும் உணர்ச்சி, நாடக முடிவில் எத்தகைய களைப்பை, சிரமத்தை உண்டாக்கும் என்பதை நினைத்த போது பயமாக இருந்தது என்றாலும், என் குழுவினர்களோடு ஒன்றுபட்டுச் செயல்படுவதில் காணும் இன்பமும், மக்களின் பாராட்டுதலை நேருக்கு நேர் பெறும் வாய்ப்பும், எனக்கு, எதிலும் பெற முடியாத ஒரு தனி மகிழ்ச்சியைத் தந்தது.
— தொடரும்.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.

