PUBLISHED ON : டிச 21, 2014

ஜி.ரமேஷ், ராஜபாளையம்: படித்து பட்டம் பெற்றவர்கள் கையில் ஆட்சி இருந்தால் நாடு எப்படி இருக்கும்?
இதோ, இன்று எப்படி இருக்கிறதோ அதே லட்சணத்தில் தான் இருக்கும். இப்போ ஆட்சி பொறுப்பில் இருக்கும் அமைச்சர்களில், 90 சதவீதம் பேர் டபுள் டிகிரியும், அதற்கு மேல் சட்டமும் பயின்றவர்கள் தானே! மெத்தப் படிக்காதவர் ஒருவர், 50 ஆண்டுகளுக்கு முன், ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் இங்கு இருந்த போது, லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடாமல், மக்களுக்காக ஆட்சி செய்ததாக பெரியவர்கள் கூறக் கேட்டுள்ளேன்!
எஸ்.சுப்பிரமணி, கடலூர்: ஆண்களின் 14 வயது காதல், 21 வயது காதல் - இதில் எது நீடிக்கும்?
இரண்டுமே, 'பெயிலியர்' ஆகக் கூடும். ஆண்களுக்கு, 26 - 27க்கு பிறகுதான் மென்டல் மெச்சூரிட்டி - மன முதிர்ச்சி ஓரளவேனும் வரும். அதன்பின், இம்முயற்சியில் இறங்கினால் நலம் என்று லென்ஸ் மாமா கூறுகிறார்; நமக்கு அனுபவம் இல்லாததால், அவரிடம் கேட்டு பெறப்பட்ட பதில் இது!
எஸ்.வெள்ளைச்சாமி, கடலூர்: அறிவு, அடக்கம், அழகு - இம்மூன்றில் பெண்களுக்கு மிக முக்கியமாக எது தேவை?
அறிவு! இக்காலப் பெண்களுக்கு அறிவு மிகத் தேவை. அறிவை வளர்த்துக் கொள்ளும் பெண்ணிடம் அடக்கம் போன்ற பண்புகள் தானாக வந்து ஒட்டிக் கொண்டு விடாதோ!
க..ஆறுச்சாமி, திருப்புவனம்: அறிவு, தன்மை, புரட்சி, மனிதாபிமானம், பணிவு போன்ற சொற்களின் கலவை தான் உங்கள் பெயர் என்கிறானே என் நண்பன்...
உங்கள் நண்பருக்கு கோடி நன்றி. பெயர் காரணம் கேட்டு எழுதுபவர்களுக்கு ஏற்ற பதில் சொல்ல உதவி இருக்கிறாரே!
வி.பிரபா, கண்டமங்கலம்: விளையாட்டு தொடர்பான கேள்விகளே உங்களுக்கு வருவதில்லையா? அது சம்பந்தப்பட்ட பதில் எதுவுமே தருவதில்லையே...
தெரியாத சப்ஜெக்டுகளில் மூக்கை நுழைப்பதில்லை; இந்தியாவின் குக்கிராமங்களில் கூட கிரிக்கெட் பாப்புலராக உள்ளது. ஆனால், எனக்கு கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாது. இதைப் போலவே மற்ற விளையாட்டுகளிலும் ஏனோ ஆர்வமில்லை!
ஆர்.ரேவதி, மரக்காணம்: கல்லூரியில் படிக்கும் என் மகள், ஆண் நண்பர்களுடன் பழகுவதைப் பார்க்கும் போது மிகவும் பயமாக உள்ளது. என் பயத்தை அவளிடம் எப்படி கூறுவது?
இக்காலப் பெண்களுக்கு, ஆண்களுடன் பழகுவதற்கான எல்லை நன்றாகவே தெரியும். பொத்திப் பொத்தி வளர்ப்பதால் தைரியமற்றுப் போய், எதிர்காலத்தில் ஊரை, உலகத்தை, கொடுமைக்கார புருஷன் வாய்த்தால் அவனை எதிர்கொள்ளத் தெரியாதவர்களாக, தெம்பற்றவர்களாகி விடுகின்றனர். உங்கள் பயத்தை விட்டொழியுங்கள்!
எஸ்.பி.நடராஜன், அஸ்தினாபுரம்: ஒருவன் முட்டாளாவது எப்போது?
தன்னிடம் சிரிக்க சிரிக்க பேசுபவர்கள் எல்லாம் தனக்கு வேண்டியவர்கள் என, நம்ப ஆரம்பிக்கும் போது!
