PUBLISHED ON : மே 31, 2015

பொ.சுப்பிரமணியன், நத்தம்: தமாஷான செய்தி ஏதும் சொல்லுங்களேன்...
சிரிப்பு சம்பந்தப்பட்ட செய்திதான் இது... ஒரு நாளில், ஒரு மனிதன் சிரிப்புக்காக எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்பது குறித்து, மேரிலாண்ட் பல்கலைக் கழக ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா? வெறும், 15 நிமிடங்கள் தான். இது, எல்லாருக்குமல்ல, இதய நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே!
எஸ்.ராம்பிரபு, ஆலங்குளம்: இலக்கை எட்ட முடியவில்லை என்றால் பயணத்தை மாற்றி கொள்ள வேண்டுமா அல்லது இலக்கை மாற்ற வேண்டுமா?
இலக்கை மாற்றினால், கடைசி வரை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியது தான்! கொள்கை பிடிப்பு இல்லாதவர்கள் தான் இலக்கை மாற்றிக் கொண்டே இருப்பர். பிடித்த பிடியில் உறுதி இருந்தால், நிச்சயம் இலக்கை அடையலாம்!
ஹெச்.ரசியாபேகம், பல்லடம்: பேசும் மொழிக்கும், எழுதும் மொழிக்கும் வித்தியாசம் இருப்பது ஏன்?
மொழியியல் வல்லுனரிடம் தான் கேட்க வேண்டும். ஆனால், எனக்கு தெரிந்து, பேசுவதும், எழுதுவதும் ஒன்றாகவே இருப்பது போர்த்துகீசிய மொழி! உலகிலேயே இம்மொழியில் மட்டும் தான் இப்படி எனக் கூறக் கேட்டுள்ளேன்.
ஏ.விருமாண்டி, மேலூர்: உலகிலேயே, 'காஸ்ட் ஆப் லிவ்விங்' அதிக செலவு பிடிக்கும் நாடு - நகரம் எது?
ஜப்பான்தான் அதிக செலவு பிடிக்கும் நாடு! உலகின், 134 நகரங்களில் எடுத்த கணக்கில், ஜப்பானின் தலைநகர் டோக்கியோ முதல் இடத்தையும், இன்னொரு நகரான ஒசாகா - கோபி இரண்டாவது இடத்தையும் பிடிக்கின்றன. நம் நாட்டின் டில்லி, 123வது இடத்தில் இருக்கிறது. இங்கே நம் நாட்டில், 'சீப் லிவ்விங்!'
கே.ராம்ராஜ், புதுநகர்: ஒரு தனி மனிதன் எப்போது அறிவு கெட்டுப் போகிறான்?
பொருள், பதவி இருப்பவரை சுற்றியுள்ள ஜால்ரா கூட்டங்களின் புகழுரை, முகஸ்துதி ஆகியவற்றை நம்புபவன் அறிவை இழப்பான்; கெட்டும் போவான். முகஸ்துதிக்கு ஒரு நாளும் அடிமையாகக் கூடாது!
ஆர்.சபாபதி, சென்னை: வேலை தேடி வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா?
ஆண்டுதோறும் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில், 24 லட்சம் இந்தியர்கள் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றுள்ளனர். இவர்களில், 56 சதவீதம் பேர், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள்!
க.வேல்முருகன், பாதிரிகுப்பம்: நான் சுகமாக வாழ, எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
உங்களிடம் கோப குணம் இருந்தால், அதை எப்பாடு பட்டேணும் விரட்டி அடியுங்கள். கோபமுள்ளவர்களிடம் எப்போதும் கவலை இருந்து கொண்டே இருக்கும்; கவலை உள்ளவர்கள் சுகமாக வாழ முடியாது!
எஸ்.லட்சுமி, கடலூர்: பிரச்னைகளே இல்லாமல் வாழ முடியுமா?
அப்படிப்பட்ட வாழ்வில், த்ரில் இல்லை; போரடித்து விடும்; சிந்தனை மழுங்கி விடும். மூக்கு என்று ஒன்று இருந்தால், சளி இருக்கத் தானே செய்யும்... அது போல, பிரச்னைகளுடன் வாழ்வதும், அதை சமாளிப்பதும் தான் வாழ்க்கை! பிரச்னைகளைக் கண்டு பயந்து ஓடாமல், அதை சமாளிக்கும் திறனை, மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்!
