தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : மே 31, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 31, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இந்திரா பிரியதர்சினி' நூலில்: முன்னாள் பாரத பிரதமர் இந்திரா, பெரோசை காதலித்தார். நேருவின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. காஷ்மீரில் தேனிலவு முடித்து, லக்னோவில் தனிக்குடித்தனம் ஆரம்பித்தனர். பெரோசுக்கு, 'நேஷனல் ஹெரால்டு' என்ற பத்திரிகையில் மேனேஜர் வேலை கிடைத்தது. வீட்டு வேலைகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாதர் பிரிவின் பணிகளை கவனித்து வந்தார் இந்திரா.

'வெள்ளையனே வெளியேறு' தீர்மானம் கொண்டு வரப்பட்ட மும்பை மாநாட்டில், இந்திராவும், பெரோசும் கலந்து கொண்டனர். பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்; பெரோஸ் தலைமறைவானார். இதனால், லக்னோ வீட்டில் தனியாக வாழ்ந்தார் இந்திரா. பின், பெரோஸ் கைது செய்யப்பட்டு, சிறை வாசம் அனுபவித்து, விடுதலையானார்.

சுதந்திரத்திற்கு பின், சில ஆண்டுகள், பிரதமர் நேருவின் இல்லத்தில் தன் மனைவியுடன் வசித்து வந்தார் பெரோஸ். ஆனால், சுயமரியாதையும், தன்மானமும் கொண்ட அந்த இளைஞர், மாமனார் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கியிருப்பதை விரும்பவில்லை. அதனாலேயே பார்லிமென்ட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும்,

எம்.பி.,க்களுக்கான குவார்ட்டசுக்கு சென்று விட்டார். அவ்வப்போது, தம்பதிகள் பெரோஸ் வீட்டிலோ, நேரு வீட்டிலோ சந்தித்துக் கொண்டனர்.

சாதாரணமாக, அரசின் தவறுகளை, ஊழல்களை எதிர்க்கட்சியினர் தான் அம்பலப்படுத்துவர். ஆனால், ஆளுங்கட்சி எம்.பி.,யான பெரோஸ், நிதி இலாகா லஞ்ச ஊழலை அம்பலப்படுத்தி, பார்லிமென்ட்டில் பரபரப்பை உண்டாக்கினார். நிதியமைச்சர் ராஜினாமா செய்ய நேரிட்டது. 1960ல் பெரோஸ் மாரடைப்பால் காலமானார்.

சீனாவில் கூறப்படும் ஒரு நாடோடி கதை இது:

ஒருநாள் காலையில், சீனர் ஒருவர், தன் வீட்டிற்கு பின்புறமாக வந்தபோது, தன் மனைவி இறந்து கிடப்பதை பார்த்தார். அவளை புலி அடித்துக் கொன்றிருந்தது.

சில நிமிடங்களுக்கு முன் தான் அச்சம்பவம் நடந்திருக்க வேண்டும். உடனே அவர் வீட்டிற்குள் ஓடி, விஷப் பாட்டிலை எடுத்து வந்து, மனைவியின் உடல் மீது அவ்விஷத்தை பூசி விட்டு போனார்.

அன்று மாலை, மனைவியின் உடலை தின்ன வந்த புலி, விஷம் தடவிய உடலை தின்றதால், அவள் அருகிலேயே இறந்து விட்டது.

அவர், புலியின் தோலை ஒரு வியாபாரியிடமும், புலியின் நகங்களையும், பல்லையும் சுற்றுலா பயணிகளிடமும் விற்றார். கிடைத்த பணத்தில் ஒரு அழகிய பெண்ணை மணந்து கொண்டார்.

'அண்ணாவின் சிந்தனைகள்' நூலிலிருந்து, அண்ணாதுரை எழுதிய குட்டிக் கதை:

இனிய குரல்; எடுப்பான இசை. ஆனால், பாடியதோ, மன்றத்தில் உள்ளோரை கேவலப்படுத்தும் தூற்றாக இருந்தது. ஏன் இராது... ஒரு இசைவாணன், சபையினர் முன், 'தூ... தூ போ நாயே...' என்று பாடினால், இசையின் இனிமைக்காக எத்தனை பேர் பொறுமையுடன் கேட்பர்... சபையின் எதிர்ப்பை பார்த்த இசைவாணர், 'சுருதி கலையவில்லையே... தாளமும் தவறவில்லையே... தமிழர் விரும்பும் தமிழ் இசை தானே பாடுகிறோம்...' என்று விசாரம் அடைந்தார்.

இரண்டாம் அடி பாடும் போதுதான் கோபத்துக்கு பதில், சபையினர் சிரிக்க ஆரம்பித்தனர். காரணம், 'ஆதி நாள் சுந்தரர்க்கு அன்புடனே...' என்ற இரண்டாம் அடியை பாடிய போது தான், இது, தூற்றல் அல்ல; தோத்திரம் என்பதை சபை உணர்ந்தது. 'தூது போனாயே, (சிவபெருமான் சுந்தர மூர்த்திக்காக பரவை நாச்சியாரிடம் தூது போனார்) என்ற முதலடியை, நம் வித்வத்தை விளக்க வேண்டும் என்பதற்காக நிறுத்தி, நிதானமாக நிரவல் செய்து, எழுத்தெழுத்தாக்கி, 'தூ தூ போ நாயே...'என்று பாடி, பாசுரத்தின் பொருளையே பாழாக்கி விட்டோமே... அதனாலன்ரோ சபையினருக்கு நம்மீது ஆத்திரம் ஏற்பட்டது...' என்று இசைவாணர் உணரவும் முடிந்தது.

சமீபத்திய வெளியீடான, 'பெரியார் கருத்துரைகள்' நூலில், ஈ.வெ.ராமசாமி கூறியுள்ள கருத்துகளில் இரண்டு: இன்றைய ஆசிரியர்களைப் பற்றி எனக்கு அதிக மதிப்பு கிடையாது. இந்நாட்டில், யாருக்காவது கல்வி அவசியம் என்றால், அது, ஆசிரியர்களுக்கே! பயன் இல்லாததும், பொறுப்பில்லாததுமான பதவி இருக்கிறதென்றால், அது ஆசிரியர் பதவியே!

இன்று, தொழிலாளர் இயக்கங்கள், தொழிலாளர்கள் கையில் இல்லை. தொழிலாளியாக இல்லாதவரும், அதைக் கொண்டு வயிறு வளர்ப்பவர்கள் கையிலும் தான் உள்ளது. தொழிலாளர் சங்கம் ஏற்பட்ட நாள் தொட்டு, அரசியல் கட்சிக்காரர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு தொழிற்சங்கத்தை வைத்து, பலன் பெற்று, பொறுக்கித் தின்கின்றனர்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us