தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜூன் 07, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.சந்திரா, ஜடயம்பாளையம்: சொகுசா பகல் தூக்கம் போடுவோரைக் கண்டா பொறாமையா இருக்கு... என்ன செய்ய?

பொறாமைப்படாமல் நீங்களும் மதிய உணவுக்குப் பின், அரையே அரை மணி நேரம், 'கொர்' விடுங்கள். 40 வயதைத் தாண்டியவர் என்றால், இந்த குட்டித் தூக்கம் புது தெம்பைக் கொடுக்கும் என்கின்றனர் நரம்பியல் வல்லுனர்கள்!

வி.நெல்லையப்பன், புதுவலசை: அரசு ஊழியம் செய்யும் பெண்கள் கூட, 'கை நீட்ட' ஆரம்பித்து விட்டானரே...

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பர். இதற்கு எதிர்பதம் உங்களுக்கு தெரிந்து இருக்கும். மேலதிகாரிகளின் நிர்பந்தம், இவர்களை லஞ்சம் - அன்பளிப்பு வாங்கத் தூண்டுவதாகவே எண்ணுகிறேன!

எம்.விக்னேஷ், கோவை: எனக்கு நிறைய பேனா நண்பர்கள் உண்டு. டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுடன் பேனா நட்பு வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். அவர் முகவரியை கூறுங்களேன்...

என்னைப் போல சாதாரணர்களுக்கு கடிதம் அனுப்பினால், அக்கறையுடன் நாங்களே பதில் எழுதுவோம். ஆனால், பெரும்புள்ளிகள், சினிமாக்காரர்கள், விளையாட்டு வீரர்களுக்குக் கடிதம் எழுத, ஏன் படிக்கக் கூட நேரம் இருக்காது. ஒரு சிலரிடம் இருந்து பதில் வந்தால், அது, அவர்களது பி.ஏ., அல்லது பதில் எழுதும் குமாஸ்தாவிடமிருந்து வந்ததாகத் தான் இருக்கும்!

ஆர்.சக்திவேல், உலகாபுரம்: நதிகளை இணைப்பதன் மூலம் குடிநீர் தேவை, விவசாயப் பயன்பாடு போக வேறு என்ன நன்மை கிடைக்கும்?

நீர் வழிப்பாதை கிடைக்குமே! ஒரு ஹார்ஸ் பவர் சக்தியில், 150 கிலோ சரக்கை சாலை வழியாக கொண்டு சென்றால், ரயிலில், 500 கிலோவையும், நீரில், 4,000 கிலோவையும் கொண்டு செல்லலாம். இதனால், கோடிக் கணக்கில் எரிபொருள் செலவு மிஞ்சுமே!

வி.டி.வேணுகோபாலன், கரிக்கலாம்பாக்கம்: கடன் வாங்கி விழா கொண்டாடி, திண்டாடி நிற்போரை என்ன செய்வது?

திண்டாடட்டும் என, விட்டு விட வேண்டியதுதான். இவர்கள் தம் பொருளாதார நிலையை நன்கு அறிந்திருந்தும், வீண் பெருமைக்காக செலவு செய்கின்றனர்; அதனால், இவர்கள் திண்டாட வேண்டியதுதான். கடன் வாங்கி சபரிமலை செல்கின்றனர். விரதமிருந்து உள்ளூர் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்தால், சபரிமலை ஐயப்பன் கோவித்துக் கொள்வாரா என்ன!

ஏ.சுலைமான், தாராபுரம்: இந்தியாவில் தீவிரவாதம் பெருகக் காரணம் என்ன?

வேலை வாய்ப்பு இன்மை! வேலையும், வருமானமும் இன்றி தவிக்கும் இளைஞர்களை தீவிரவாத இயக்கங்கள், சுலபமாக மூளை சலவை செய்து, தம் பக்கம் இழுத்துக் கொள்வதால், தீவிரவாதம் பெருகுகிறது!

ம.குலசேகரன், மாடம்பாக்கம்: நான் ரொம்ப பிசியான சிறு தொழிலதிபர். சிலர், அவசியமே இல்லாமல், தினமும் என்னை வந்து பார்த்து, தொந்தரவு தருகின்றனர். இதிலிருந்து தப்ப ஒரு வழி சொல்லுங்களேன்...

ரொம்ப சிம்பிள்... பார்க்க வருவோரிடம் கடன் கேளுங்கள்... அது, கவுரவ குறைச்சலாகத் தெரிந்தால், நன்கொடை புத்தகம் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாமல் ஆஜராகுபவர்களிடம் அதை நீட்டுங்கள்... உங்கள் தெருப் பக்கம் கூட ஒருத்தனும் வர மாட்டான்!

க.ஜார்ஜ் ஸ்டீபன், உடுமலைப்பேட்டை: கணக்கில் பணம் இல்லாமல்,'செக்' கொடுப்பதும், வங்கியில் செலுத்திய வேகத்திலேயே அது திரும்புவதும் தொடர் கதையாக இருக்கிறதே...

உண்மைதான்; இது போன்ற நபர்களுடன்,'டீல்' செய்யாமல் இருந்தால், படுகுழியில் விழாமல் தப்பலாம்! இந்தியாவில் மொத்தம், 20 லட்சம், 'செக்' மோசடி வழக்குகள் நடக்கின்றன. இதில், சிக்கி உள்ள தொகை, 50 ஆயிரம் கோடி!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us