தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தடித்த தோல் தேவைப்படும் தருணங்கள்!

தடித்த தோல் தேவைப்படும் தருணங்கள்!

தடித்த தோல் தேவைப்படும் தருணங்கள்!


PUBLISHED ON : ஜூன் 07, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'என் மகன் மானஸ்தன்; சொல் பொறுக்க மாட்டான்...' என்று, தம் மகனைப் பற்றி பெருமையாகச் சொன்னார் ஒரு தந்தை. உடனே, அவர் மகனைப் பற்றிய ஒரு முடிவிற்கு வந்தேன்; இவருடைய மகன் எந்த வேலையிலும் நீடித்து இருக்க மாட்டார் என்று!

இது உண்மை தான் என்பது, இந்த மானஸ்தனின் தாய்மாமனைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் சந்தித்த போது தெரிய வந்தது. 'சரியான கிறுக்கு பயனுங்க அவன்... சும்மா ரோஷம் பொத்துக்கிட்டு வந்து என்னங்க புண்ணியம்... இவனோட வேலைக்கு சேர்ந்தவனெல்லாம் எங்கேயோ உயரத்துக்கு போயிட்டான். இவன் ஒவ்வொரு கம்பெனியா படையெடுத்துக்கிட்டிருக்கான்...' என்றார்.

பின், ஒருமுறை அந்த மானஸ்தனுடன் பேசிய போது, 'ஒரு நிறுவன வளாகத்திற்குள் கவுரவம் பாராமல் சொல் பொறுத்தால், வெளி உலகில், பலரின் சொல்லுக்கு ஆளாகாமல், கவுரவமாக வாழ முடியும்; பரிசீலியுங்கள்...' என்றேன்.

இப்போது மனம் மாறி, நீண்ட நாட்களாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிகிறார் மானஸ்தன்.

ராணுவத்தில் சேர்ந்தால், அதன் சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு தானே ஆக வேண்டும்! மேலதிகாரிகள் அன்பாகவா வேலை வாங்குவர்... ரோஷத்தை இவர்களிடம் காட்டினால் என்ன ஆகும்?

ரோஷத்தை போர்முனையில் காட்ட வேண்டும் என்பதற்காகவே, இவர்கள் இப்படி உசுப்புகின்றனரோ என்று கூட எண்ணுவது உண்டு.

பன்னாட்டு நிறுவனங்களில் வேலையில் சேர்ந்து, பெருஞ்சம்பளம் வாங்க ஆசைப்பட்டு விட்டால், அவர்களது வேலை கலாசாரத்திற்கு ஈடு கொடுக்க வேண்டாமா...

'எதற்கும் விடுமுறை கிடையாது; உன் சொந்த பிரச்னைகளை இங்கே கொண்டு வராதே! கடிகாரம் பார்த்து தான் உள்ளே அனுமதிப்போம். (விரல் பதிக்கும் பயோ மெட்ரிக் முறை) ஆனால், வீடு திரும்புவதற்கும், வேலையை முடிப்பதற்கும் கடிகாரத்தை நீ நிமிர்ந்து பார்க்கக் கூடாது. முன் பணமா... மூச்! வேலையை விட்டு எந்த நிமிடமும் உன்னை தூக்குவோம்; எவரையாவது முறைத்தாயானால், அன்று மாலையே உனக்கு மாலை போட்டு அனுப்பி விடுவோம்...' என்றெல்லாம் எழுதப்படாத விதிகளை கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய உதவுவது தடித்த தோலே!

ராணுவம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் மட்டுமல்ல... பொது இடங்களில் கூடத் தடித்த தோல் தேவை.

ரயிலில், பயணச்சீட்டு பரிசோதகர், 'அடையாள அட்டைன்னா அது ஒரிஜினலா இருக்கணும்; இது கூட தெரியாம பயணம் செய்ய வந்துட்டீங்க...' என்று சக பயணிகள் முன், நம்மை வாங்கு வாங்கினால், இங்கே நமக்கு உதவுவது தடித்த தோல் தானே தவிர ரோஷம் அல்ல!

வீட்டுப் பெரியவர் கத்துகிறார்... 'என்ன விளையாடுறியா...' என்று ஆரம்பித்து, மற்றவை உங்கள் கற்பனைக்கு! அச்சமயங்களில், அவர் காட்டிய அன்பு, பிற சந்தர்ப்பங்களில் அவர் தந்த ஆதரவு போன்றவற்றை நினைவுக்கு கொண்டு வந்து இதயத்தை நிரப்ப வேண்டும்; இப்படி செய்தால், தடித்த தோல் உடல் மீது தானாக பரவி விடும்.

'சரி சரி... கத்திட்டு போங்க...' என்கிற மனநிலை வ(ள)ரும்.

அழைப்பு (கால்)டிரைவர் தாமதமாக்கி விட்டால், வாடிக்கையாளர் கத்துகிறார்; அவரது கோபம் நியாயம். இவரும் ஒரு (தற்காலிக) முதலாளி. கொடுக்கிற கைக்கு வாங்குகிற கை பதில் சொல்லி தான் ஆக வேண்டும் என்கிற மனச் சமாதானம், கால் டிரைவருக்கு வந்து விட்டால், அவர் முழு டிரைவராக ஆகி விடலாம்.

தடித்த தோல் இல்லையென்றால், உணர்ச்சி வசப்பட்டால், ஜீரண நீர்கள் சரி வர சுரக்காது, தோலின் நிறம் கெடும், ரத்த அழுத்தம் கூடி, சர்க்கரை நிலை உயரும், நாடித்துடிப்பு கன்னாபின்னாவென எகிறும் என, மருத்துவ உலகம் கூறுகிறது.

ஆக, பல தருணங்களில் தடித்த தோலும் நல்லதே!

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us