தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சொல்லுவதெல்லாம் உண்மை!

சொல்லுவதெல்லாம் உண்மை!

சொல்லுவதெல்லாம் உண்மை!


PUBLISHED ON : ஜூன் 07, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமீபத்தில், சென்னை, தாம்பரம் வள்ளுவர் குருகுலம் உயர்நிலைப் பள்ளியின் திறந்த வெளி அரங்கில், ஏ.வி.கிரி எழுதிய, 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது. அரசியல் தலைவரோ, சினிமா பிரபலமோ, பல்கலை துணைவேந்தரோ, தொழிலதிபரோ எழுதிய புத்தகம் அல்ல; இருந்தாலும், 1,280 பேர் அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்து, மூன்று மணி நேரம் நிகழ்ச்சி முடியும் வரை இருந்து ரசித்தனர்.

ஏ.வி.கிரி எழுதிய பல கவிதைகள், 'தினமலர் - வாரமலர்' இதழ் மற்றும் பல பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளன. 136 பக்கங்களில், நல்ல காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட அப்புத்தகத்தின் விலை ரூ.30 என இருந்தது. அதன்கீழே இரு வரிகள் நம் கவனத்தை ஈர்த்தன. அது: 'இது கவிதையின் விலை அல்ல; காகிதத்தின் விலை!'

அவரது சிறப்புப் பேட்டி இதோ:

* 'சொல்கேளான்' என்ற பெயர் எப்படி வந்தது?

என் தந்தை, பெரிய பக்திமான்; மதுராந்தகத்தில் மர வியாபாரியாக இருந்து, பெரிய செல்வந்தராக இருந்தவர். சிவன் கோவிலுக்கு நிறைய அறப் பணிகள் செய்திருக்கிறார். நெருங்கிய உறவினரே, என் தந்தையை ஏமாற்றி, சொத்துக்களை, அபகரித்துக் கொண்டார். எல்லாவற்றையும் இழந்து துறவியாகி, திருவண்ணாமலை சென்று விட்டார்.

சிறு வயது முதலே அவருக்கும், எனக்கும் பக்தி விவகாரத்தில் முரணான கருத்துக்கள் தான். அவர் சொல்வதை நான் கேட்பதில்லை. அதனால், அப்பா எனக்கு வைத்த பட்டப்பெயர், 'சொல் கேளான்!'

இப்பெயர் எனக்கு பிடித்துப் போனதால், அதையே என் புனைப் பெயராக வைத்துக் கொண்டேன். இப்பெயர் இலக்கிய உலகில் எல்லாரையும் என்னை திரும்பிப் பார்க்க வைத்தது.

இப்பெயரை நான் விரும்பியதற்கு மற்றொரு காரணமும் உண்டு...

ஈ.வெ.ராவின் நூல்களை படித்த காலத்தில், 'அவர் சொன்னார், இவர் சொன்னார், நான் சொன்னேன் என்று எதையும் கேட்காதீர்கள்; உங்கள் அறிவுக்கு பட்டது எதுவோ அதை சிந்தித்து, அதையே ஏற்றுக் கொள்ளுங்கள்...' என்று கூறியிருந்தார் ஈ.வெ.ரா., அதனாலேயே, 'சொல் கேளான்' எனும் பெயரில் எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு.

* நீங்கள் ஒரு கவிஞராக உருவெடுத்தது எப்படி?

மதுராந்தகத்தில் என் தந்தையாரின் மரக் கடைக்கு, இலக்கிய வீதி இனியவன் மரம் வாங்க வருவார். அப்போது, அவருடன் நட்பு ஏற்பட்டது. அவர் கதை, கட்டுரைகள் எழுதுவார். அவருடைய நட்பால், நிறைய புத்தகங்கள் படிக்க நேர்ந்தது. அதன் விளைவாக, எனக்கும் எழுதும் ஆர்வம் வந்து, முதலில் கதைகள் எழுதினேன். பின், கவிதைகள் எழுதுவது சுலபமாக இருந்தது. விளையாட்டாக எழுதியதை நண்பர்கள் பாராட்டியதால், கவிஞனானேன்.

* உங்கள் அடுத்த லட்சியம் என்ன?

அரசியல்வாதிகள் செய்கிற அவலங்களை எழுதி, மக்கள் நலமாக வாழ, ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை விரிவாக எழுதப் போகிறேன். நிச்சயம் இதற்கு எதிர்ப்புகள் வரும்; எதிர்ப்பு இல்லாமல் சாதனை இல்லை.

'சொல்வதெல்லாம் உண்மை' கவிதை நூல் வெளியீட்டு விழாவோடு, அன்று மாலை, தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவும் நடைபெற்றது.

* எஸ்.எஸ்.எல்.சி., பள்ளி இறுதி ஆண்டு தேர்வில் மூன்று முறை பெயில் ஆனவர், 'சொல்கேளான்' ஏ.வி.கிரி. பள்ளி படிப்பில் இவருக்கு நாட்டம் இல்லை; குத்துச்சண்டை, சிலம்பம் இரண்டிலும் நல்ல பயிற்சி உண்டு.

* சொல்கேளான் ஏ.வி.கிரியின் முயற்சியில், தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றம், 2010ல் துவங்கப்பட்டது. இதில், 260 அங்கத்தினர்கள். 48 பெண்கள்; 212 ஆண் அங்கத்தினர்கள். ஒவ்வொரு மாதமும், கடைசி ஞாயிறு மாலை, 4:00 மணிக்கு தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளி வளாகத்தில் சந்திக்கின்றனர். இதில், 10 வயது சிறுவர் - சிறுமியரும் உண்டு.

* ஏ.வி.கிரிக்கு திக்குவாய் பிரச்னை இருந்தது. தீவிர சிகிச்சை மற்றும் விடாமுயற்சி மூலம் திக்குவாய் பிரச்னையை வென்றிருக்கிறார். இலக்கிய கூட்டங்கள், நகைச்சுவையாளர் மன்றங்களின் கூட்டங்கள், சென்னையில் எங்கு நடந்தாலும், அங்கு சென்று, எந்த தயக்கமும், கூச்சமின்றி பங்கு கொண்டு பேசுவார். அப்பிரச்னையை முழுவதுமாக வென்றிருக்கும் கிரிக்கு, திக்குவாய் பிரச்னை இருந்தது என்று சொன்னால், இப்போது யாரும் நம்ப மாட்டார்கள்.

* 'ஸ்ரீ தனலட்சுமி கேன்டில் ஒர்க்ஸ்' என்ற மெழுகுவர்த்தி தயாரிக்கும் நிறுவனத்தை, தாம்பரத்தில் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

* சொல்கேளான் கிரி, தன் மெழுகுவர்த்தி தொழிற்சாலையை, ஒரு தொழிற்பேட்டைக்கு மாற்றிய போது, அதற்கான உரிமம் வர, மிகவும் தாமதமாகி விட்டது. ஆறு மாதங்கள், பல வழிகளில் முயன்றும், உரிமம் கிடைக்கவில்லை. வங்கி வட்டி ஏறிக் கொண்டிருந்தது. பொறுத்துப் பார்த்தவர், கவிதை ஒன்றை எழுதி, ஒரு நாளிதழின் முதல் பக்கத்தில், 'முதல்வரின் பார்வைக்கு' என்று ஒரு விளம்பரம் தந்திருந்தார். அதில், வங்கி வட்டி அதிகமாவதை குறிப்பிட்டு, 'அணில் தாங்குமோ அம்மிக்குழவி' என்று முடித்திருக்கிறார்.

'கார் தொழிலுக்கும், கலைத்துறைக்கும் கலங்கரை விளக்காயிருக்கும் முதல்வர், சில்லரை கைத் தொழில்கள் கல்லறைக்கு போகாமலிருக்கு வழி காட்டுவாரா... விரைந்து உரிமம் வழங்கி மகிழ்வூட்டுவாரா...' என்று முடித்திருந்தார்.

இக்கவிதை, பத்திரிகையில் வெளியான நான்கு தினங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிமம் வழங்கியிருக்கின்றனர்.

* சொல்கேளான் ஏ.வி.கிரி மெழுகுவர்த்தி தயாரிப்பாளர் சங்கத்தலைவராக இருந்த போது, மெழுகு தட்டுப்பாடு பிரச்னை ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரியை சந்திக்க, நேரம் கேட்டு கடிதம் எழுதினார். இவர்களை சந்திக்க அதிகாரி மறுத்து விட்டார். அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், 'நீங்கள் பெரிய அரசு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்தாலும், அரசு ஊழியர்; இரண்டு சட்டி வைத்து, மெழுகுவர்த்தி தயாரித்தாலும் நாங்கள் தொழிலதிபர்கள். எங்களை சந்திக்க வேண்டியது உங்கள் கடமை...' என்று குறிப்பிட்டிருந்தார்.

இரண்டாவது நாளே இவர்களை சந்திக்க அந்த அதிகாரி அனுமதி வழங்கினார். பேனா முனை எவ்வளவு வலிமையானது என்பதற்கு இது சான்று!

* சொல்கேளான் ஏ.வி.கிரிக்கு, 'தினமலர்' - 'வாரமலர்' அந்துமணியின் எழுத்துக்கள், ரொம்பவும் பிடிக்கும். 'அந்துமணி எழுத்துகளில், எப்போதும் உண்மை இருக்கும்; ஒளிவு, மறைவு இல்லாமல் எழுதுவார்...' என்கிறார்.

* வாசகர்களின் படைப்புகள், 'தினமலர் - வாரமலர்' இதழில் வெளியாகும் போது, அதற்கு வாசகர்களிடமிருந்து வரும் விமர்சனக் கடிதங்களை நகல் எடுத்து, படைப்பாளிக்கு அனுப்பி, கவுரவம் செய்யும், 'தினமலர் - வாரமலர்' இதழின் பணி பாராட்டிற்குரியது. என்று கூறினார்.

எஸ்.ரஜத்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us