sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

எம்.ஆர்.ராதா- கலகக்காரனின் கதை (17)

/

எம்.ஆர்.ராதா- கலகக்காரனின் கதை (17)

எம்.ஆர்.ராதா- கலகக்காரனின் கதை (17)

எம்.ஆர்.ராதா- கலகக்காரனின் கதை (17)


PUBLISHED ON : ஜூன் 07, 2015

Google News

PUBLISHED ON : ஜூன் 07, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவாஜிக்கு மேக்-அப் போட வேண்டியிருந்ததால், ராதாவுக்குத் தன் உதவியாளரை அனுப்பினார் கஜபதி. அவர் போட்ட ஒப்பனையில் ராதாவுக்கு திருப்தி இல்லை. அதனால், போனில் கஜபதியை அழைத்து, 'சீக்கிரம் வாய்யா... மேக்-அப் சரியில்ல; ஷூட்டிங் நிக்குது. உடனே கிளம்பி வா...' என்று உத்தரவிட்டார். ராதா சீனியராயிற்றே... சிவாஜியும் உடனே கஜபதியை அனுப்பி வைத்தார். இப்படி, இருவருக்கும் இடையே மாட்டி விழிக்க ஆரம்பித்தார் கஜபதி.

ராதாவுக்கு அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தம் ஆக ஆரம்பித்தன. 'என்னோட கால்ஷீட், சம்பள விவகாரங்களை எல்லாம் நீயே பாத்துக்க... கணேசன்கிட்ட சொல்லிட்டு இங்கயே வந்துரு...' என்று சொல்லி, கஜபதியைத் தன் மேலாளராக நியமித்தார் ராதா. கஜபதியும், சிவாஜியை விட்டு விலகி ராதாவிடமே முழு நேரப் பணி செய்ய ஆரம்பித்தார்.

பீம்சிங் இயக்கத்தில், சரவணா பிலிம்ஸ் தயாரிப்பில், சிவாஜி - சரோஜாதேவி நடிப்பில், பாகப்பிரிவினை 1959ல் வெளியானது. அல்டாப்பு சிங்காரம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நகைச்சுவை வசனங்களை அள்ளி வீசி, அப்ளாஸ் வாங்கினார் ராதா. படம் பெரிய அளவில் வெற்றியடைந்தது.

சரோஜாதேவி அப்போது தான் அறிமுகமாகி இருந்தார். அவருக்கும் வரிசையாகப் படங்கள் ஒப்பந்தம் ஆகிக் கொண்டிருந்தன. பாகப்பிரிவினை படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்தார் சரோஜாதேவி. காட்சிப்படி, சரோஜாதேவி, துடைப்பத்தால் ராதாவைத் துரத்தித் துரத்தி அடிக்க வேண்டும். ராதாவுக்கும், சரோஜாதேவிக்குமான முதல் காட்சியே இது தான். மாட்டேன் என்று மறுத்தார் சரோஜாதேவி.

ராதா, இம்மாதிரியான காட்சிகளில் நடிக்க இமேஜ் பார்க்க மாட்டாரே... 'பொண்ணு பெங்களூரு, பீல்டுக்கு புதுசு; அதுதான் மாட்டேன்னு சொல்லுது...' என்று ராதாவிடம் சொன்னார் பீம்சிங்.

'யாரந்த பெங்களூரு பொண்ணு?' என்றார் சத்தமாக ராதா. அவரின் குரலைக் கேட்டதிலேயே அதிர்ந்து போனார் சரோஜா தேவி.

'அடிக்க மாட்டேன்னு சொன்னியாமே...' என்றார் ராதா.

'நீங்க சீனியர் நடிகர்; என்னால முடியாது...' என்று பிடிவாதமாக மறுத்து விட்டார் சரோஜா தேவி. பீம்சிங்கும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.

'பொண்ணைப் பாத்தா பாவமா இருக்கு; விட்டுடலாம்...' என்றார் ராதா. காட்சி மாறியமைக்கப்பட்டது. உள்ளிருந்து, 'என்னை அடிக்காதே... என்னை அடிக்காதே...' என, ராதாவின் அலறல் கேக்கும். சரோஜா தேவி கையில் துடைப்பத்துடன் வெளியே வருவார். பின்னாலேயே வருவார் ராதா. அவரது தலையிலெல்லாம் துடைப்பக்குச்சி சொருகப்பட்டிருக்கும்.

நாளடைவில் சரோஜாதேவி மேல் ராதாவுக்குத் தனிப் பாசம் ஏற்பட்டது. பீம்சிங்கிடம், 'சின்னப் பொண்ணு; ராத்திரிலாம் ஷூட்டிங் இருந்ததால களைப்பா இருக்கும். முதல்ல அவங்களுக்கு ஷாட்டை வைச்சு அனுப்பி விடுப்பா. பாவம்...' என்பார்.

அதேபோன்று, சரோஜா தேவி பேசும் தமிழ் சரியில்லை என்ற கருத்தும் அன்று இருந்தது. 'நீ கொஞ்சி கொஞ்சிப் பேசறதே நல்லாத்தான் இருக்கு; இந்தத் தமிழையும் ரசிப்பானுங்க பாரு...' என்பார் ராதா.

பாகப்பிரிவினை படத்தில் ஒரு காட்சியில், நம்பியார், சிவாஜியிடம், 'குழாப்புட்டு சாப்பிடுங்க...' என்பார். இடையில் புகுந்து ராதா, 'வெளிநாட்டுக்காரன் நீராவியிலே ரயிலு விடுறான்; கப்பல் விடுறான்; விமானம் விடுறான்... நம்மாளு, இன்னும் நீராவியிலே கொழக்கட்டை தான் விடுறான்...' என்பார். இந்த வசனம் மிகவும் புகழ் பெற்றது.

பாகப்பிரிவினை பட வெற்றி விழா நடந்தது. விழாவிற்கு வந்திருந்த இந்தி நடிகர் சுனில் தத், நடிகர்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்தார். அவரை வரவேற்ற சிவாஜியிடம், 'ராதா எங்கே?' என்று விசாரித்தார். பின்னால் இருப்பதாக சிவாஜி சொன்னதும், அங்கு சென்றார் சுனில் தத்.

அங்கே, அண்டர்வேர், முழுக்கை பனியனுடன் சமையல் செய்து கொண்டிருந்தார் ராதா. 'இவரா அவர்...' என்று வாயடைத்துப் போனார் சுனில் தத்.

ராதாவின் அருகில் சென்ற சுனில் தத், கைகுலுக்கி, ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். அவர் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்த ராதா, 'என்னடா சொல்றான் இவன்...' என்று அருகில் இருப்பவரிடம் கேட்டார். அதற்குபின் தான், ராதாவுக்கு ஆங்கிலம் தெரியாது என்ற உண்மை, சுனில் தத்துக்குத் தெரிய வந்தது. பாகப்பிரிவினை படத்தில் தெளிவான உச்சரிப்புடன், ஆங்கிலம் பேசி அசத்தியிருப்பார் ராதா. அதை நம்பி ஏமாந்து போனார் சுனில் தத்.

அடுத்து, தாமரைக்குளம் படம் வெளியானது. முக்தா சீனிவாசன் இயக்கியிருந்தார். இதிலும், ராதாவுடன், சவுகார்ஜானகி நடித்திருந்தார். புலிப்பட்டி ஜமீன்தார் மைனர் ரங்கதுரை என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசம் செய்திருந்தார் ராதா.

அக்காலத்தில், ராதா என்றாலே நடுங்கும் நடிகைகள் மத்தியில், அவரிடம் தைரியமாகப் பேசுபவர் நடிகை சவுகார் ஜானகி மட்டும் தான். படித்தவர் என்பதால், ராதாவுக்கு சவுகாரைப் பிடிக்கும்.

ஒருமுறை சவுகார் ஜானகியிடம், 'உன் காருக்கு ஒரு கேலன் பெட்ரோல் சும்மா போட்டுத் தர்றேனே...' என்று விளையாட்டாக கூறினார் ராதா.

உடனே, 'நான் விரும்புறது உங்க நடிப்பை; ஓசி பெட்ரோலை இல்ல...' என்று, பட்டென்று தைரியமாக பதில் கூறினார் சவுகார்.

ராதா நடித்து 1959ல் வெளிவந்த இன்னொரு படம், உலகம் சிரிக்கிறது. அதில், கையில் தீச்சட்டி வைத்தபடி, அவர் ஆடும் ஆட்டம் வெகுவாகப் பேசப்பட்டது. 1960ல் ராதா நடித்த ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்தன. அதில், கைராசி மற்றும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு படங்கள் முக்கியமானவை.

ஒரு நாள் இரவு, கைராசி படப்பிடிப்பு நடந்தது. இரவு, 9:00 மணிக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார் ராதா. வேறு படங்களில் நடித்து விட்டு, இரவு 9:00 மணிக்கு செட்டுக்கு வந்தார். அவரது முகத்திலேயே களைப்பு தெரிந்தது.

காட்சியை ராதாவிடம் விளக்கினார் இயக்குனர், கே.சங்கர். உதவி இயக்குனர் ஒருவர், ராதாவுக்கான வசனங்களை அவரிடம் படித்துக் காட்டினார். இரண்டு, மூன்று முறை படிக்கச் சொல்லி கேட்ட ராதா, டேக்குக்குப் போகலாம் என்றார்.

டேக் ஆரம்பமானாது. ராதா நடித்தார். இன்னொரு டேக் என்றார் சங்கர். ராதா மீண்டும் நடித்தார். ஓ.கே., என்று சொல்லிவிட்டார் சங்கர். பின், தனியாக கஜபதியை அழைத்து, 'அண்ணன் ரொம்ப டயர்டா இருக்காரு போல; நான் வேற மாதிரி எதிர்பார்த்தேன். ஆனால், அண்ணன் இன்னொரு மாதிரி நடிச்சுக் கொடுத்துட்டாரு. சீன் நல்லா வந்துருக்கணும். சரி பரவாயில்ல...' என்றார். பொதுவாகப் பெரும்பாலான இயக்குனர்கள், ராதாவிடம் நேரடியாகக் கருத்துச் சொல்லத் தயங்குவர். கஜபதி வழியாகத் தான் விஷயத்தைத் தெரிவிப்பர்.

ஷூட்டிங் முடிந்து ராதா வீட்டுக்குக் கிளம்பினார்.

மறுநாள் காலையில் கஜபதி, ராதாவிடம் முந்தைய இரவு சங்கர் கூறியதை சொன்னார்.

'அப்படியா... சரி உனக்கு சங்கர் வீடு தெரியுமா?'

'இங்க தான் கோடம்பாக்கத்துல இருக்குண்ணே...'

'புரொடியூசர் வீடு?'

'அதுவும் அங்க தான் இருக்கு...'

'சரி... வா போகலாம்...' என்று கஜபதியை அழைத்து கிளம்பினார். அப்போது, சங்கர் வீட்டுக்கு, அப்படத்தின் தயாரிப்பாளர் வாசுமேனனும் வந்திருந்தார். உள்ளே நுழைந்தார் ராதா.

'ஏம்ப்பா சங்கரு... நேத்து எடுத்த காட்சி திருப்தியா வரலையாமே?' என்று கேட்டார்.

'அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணே...' என, தயங்கினார் சங்கர்.

'நான் சொல்லுறத செய்... இன்னிக்கு சாயந்தரம் ஷூட்டிங் வைச்சுக்கலாம்; அதுக்கான ஏற்பாட்டைப் செய்துரு. இன்னிக்கு ஆகுற தயாரிப்புச் செலவ, நான் தந்துடறேன்...' என்றார் ராதா.

'அய்யய்யோ... அதெல்லாம் வேண்டாம்...' என்று பதறி மறுத்தார் தயாரிப்பாளர் வாசுமேனன்.

'இல்ல... இத செஞ்சுத்தான் ஆகணும்...' என்று, பிடிவாதமாகக் கூறினார் ராதா. மாலையில் படப்பிடிப்பு நடந்தது. அதே காட்சியில், சங்கர் எதிர்பார்த்ததை விட பிரமாதமாக நடித்தார் ராதா. சொன்னபடி தயாரிப்புச் செலவையும் கொடுத்தார்.

— தொடரும்.

நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,

சென்னை.


'அண்ணே... முதல்ல லெப்டுல இருந்து நீங்க வர்றீங்க; உங்கள, 'க்ளோசப்'ல காட்டுறோம். ரைட்ல திரும்பிப் பேசறீங்க. அப்புறம் லாங் ஷாட்ல...' என்று, சோமு என்ற இயக்குனர், ராதாவிடம் காட்சியை விளக்கிய போது, 'இதெல்லாம் என்கிட்ட ஏன் மேன் சொல்லுற... லென்சை மாத்துறது எல்லாம் உன் வேலை; உன் வேலைய எதுக்கு எங்கிட்ட சொல்லுற... டயலாக்க மட்டும் சொல்லு...' என்பது போல் அனைத்து இயக்குனர்களிடமும் சொல்வார் ராதா.

- முகில்






      Dinamalar
      Follow us