PUBLISHED ON : ஜூன் 07, 2015

விக்ரமுடன் இணையும் கவுதம் மேனன்!
வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் மற்றும் என்னை அறிந்தால் படத்தில் அஜித்தை போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த கவுதம் மேனன், மீண்டும் விக்ரமை வைத்து போலீஸ் படமெடுக்க உள்ளார். அதனால், சிம்பு நடிக்கும், அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கி வரும் அவர், அப்பட வேலைகள் முடிந்ததும், விக்ரம் பட வேலைகளில் இறங்க உள்ளார். மேலும், இதற்கு முன், சாமி படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்த விக்ரம், 'இப்படம், அதை விட பிரமாண்டமாக இருக்க வேண்டும்...' என்று சொன்னதையடுத்து, ஹாலிவுட் படங்களுக்கு இணையாக, அப்படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார்.
— சினிமாபொன்னையா
அதிரடி ரோலில் ரம்யாகிருஷ்ணன்!
ராஜமவுலி இயக்கியுள்ள வரலாற்று காவியமான, பாகுபாலியில் அனுஷ்கா நடித்துள்ள தேவசேனா கதாபாத்திரத்தின், 'பர்ஸ்ட் லுக்' வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அதேபடத்தில் சிவகாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரம்யாகிருஷ்ணனின், 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி, செம கலக்கு கலக்கியிருக்கிறது. ஏற்கனவே, படையப்பா நீலாம்பரியாக கெத்தாக நடித்திருந்த ரம்யாகிருஷ்ணன், இப்படத்தில், அதைவிட பன்மடங்கு தில்லான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதனால், தெலுங்கில் வீழ்ந்து கிடந்த ரம்யா கிருஷ்ணனின் மார்க்கெட், மறுபடியும் நிமிர்ந்துள்ளது. பட்டறை வாய்த்தால் பணி வாய்க்கும்!
— எலீசா
ரசூல் மாதிரி காதலர் கேட்கும் ஆண்ட்ரியா!
மலையாளத்தில் பகத்பாசிலுடன் இணைந்து ஆண்ட்ரியா நடித்த படம், அன்னயும் ரசூலும். இப்படத்தின் விளம்பரத்திற்காக ஆண்ட்ரியாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பகத்பாசில் செய்தி வெளியிட்ட போது, தன் இமேஜை கெடுத்து விட்டதாக எகிறி குதித்தார் ஆண்ட்ரியா. ஆனால், தற்போது, 'அப்படத்தில் பகத்பாசில் நடித்த ரசூல் கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடிக்கும்; காரணம், அவர் அந்த அளவுக்கு உருகி உருகி காதலிப்பார். அதனால், அந்த ரசூல் மாதிரி ஒருவர் தான், எனக்கு கணவராக வர வேண்டும்...' என்றார். இதையடுத்து, அவர் பகத்பாசிலை தான் அப்படி குறிப்பிட்டுள்ளார் என்று இணையதளங்களில் செய்திகள் வெளியானதையடுத்து, 'நான் அந்த கதாபாத்திரத்தில் நடித்த பகத்தை குறிப்பிடவில்லை; ரசூல் என்கிற கதாபாத்திரத்தை தான் குறிப்பிட்டிருந்தேன்...' என்று தெளிவுபடுத்தி உள்ளார். ஆடினது ஆலங்காடு, அமர்ந்தது தக்கோலம், மணக்கோலம் பூண்டது மணலூர்!
— எலீசா
டல்லடிக்கும் பாபநாசம்!
கமல் நடித்து வெளியான, உத்தமவில்லன் படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. இதனால், பாபநாசம் படத்தின் வியாபாரம் டல்லடிக்கிறது. அதனால், கமல் நடிக்கும், தூங்காவனம் படத்தை தயாரிப்பதாக சொன்ன இரு நிறுவனங்கள் பின்வாங்கி விட்டதால், தற்போது, ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பிலேயே அப்படத்தை தயாரித்து, நடிக்கிறார் கமல். மேலும், இப்படத்தின் நாயகியாக, த்ரிஷாவை நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கும் கமல், மெயின் வில்லனாக நடிக்க பிரகாஷ்ராஜை அழைத்த போது, ஒரு தெலுங்கு படத்தை தவிர்த்து, கமலுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். மேலும், மனிஷா கொய்ராலாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
ஓ காதல் கண்மணி பட நாயகி இதுவரை கிளாமராக நடித்ததில்லை. ஆனால், தற்போது, அவரது ஆபாச படங்களும் வாட்ஸ் - அப்பில் பரவி வருகிறது. இதனால், அதிர்ச்சியடைந்திருக்கும் நடிகை, 'அந்த புகைப்படத்தில் இருப்பது என் உடல் அல்ல...' என்று மறுப்பு தெரிவித்திருப்பதோடு, 'இனிமேல் எந்த ஓட்டல்களிலும் தங்கப் போவதில்லை...' என்றும் முடிவெடுத்துள்ளார்.
கோலிவுட்டுக்கு வந்து விட்ட அகர்வால் நடிகை, தன் டோலிவுட் கதாநாயகர்களுடன் மீட்டிங்கை குறைத்து விட்டார். இதனால், அவருக்கு திரைமறைவில் சிபாரிசு செய்து வரும் மகதீரா நடிகர், அம்மணியிடம் கோபித்துக் கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த நடிகை, சைக்கிள் கேப்பிள், ஐதராபாத்துக்கு விரைந்து, அவருக்கு பார்ட்டி வைத்து கூல் செய்த பின்பே, கோலிவுட்டுக்கு திரும்பியுள்ளார்.
சினி துளிகள்!
* மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து, நடிப்புக்கு டாடா காட்டிய நஸ்ரியா, மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு கதை கேட்டு வருகிறார்.
* 'விஜய்யுடன் நான் நடித்த, குஷி படம் தான் என்னை வெற்றிப்பட நடிகையாக்கியது...' என்கிறார், 36 வயதினிலே ஜோதிகா.
* 'சரியான துணை கிடைத்தால் தான், திருமணம் செய்வேன். இல்லையேல் கடைசி வரை திருமணமே செய்து கொள்ள மாட்டேன்...' என்கிறார் ஸ்ருதிஹாசன்.
* துப்பாக்கி மற்றும் ஜில்லா படங்களை அடுத்து மீண்டும் விஜய்யுடன் டூயட் பாடும் ஆசையில் இருக்கும் காஜல் அகர்வால், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு கல்லெறிந்து வருகிறார்.
* நித்யாமேனன் கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும், பெங்களூரையே தன் தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறார்.
* பொல்லாதவன் மற்றும் ஆடுகளம் படங்களையடுத்து, தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கும், சூதாடி படத்தில், பார்த்திபனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
அவ்ளோதான்!
