தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஜூன் 14, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 14, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.மணிகண்டன், சிதம்பரம்: என் நண்பனுக்கு நல்லவனாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

அவருக்கு கடன் கொடுக்காதீர்கள்; அவரிடம் இருந்தும் கடன் வாங்காதீர்கள்!

கு.வடிவேல், குன்றத்தூர்: எந்த முடிவையும் என்னால் விரைந்து எடுக்க முடியவில்லையே...

பரவாயில்லை... கவலைப்படாதீர்கள்! வேகமான முடிவுகள் சில நேரங்களில் தீங்கையே விளைவிக்கும்; வேகமாக முடிவெடுப்பதை விட, விவேகமாக முடிவெடுப்பதே நன்மை பயக்கும்!

கே.ஷீலா, அஸ்தினாபுரம்: கணவனிடம் எல்லா ரகசியத்தையும் சொல்வது தான், நல்ல மனைவிக்கு அழகு என்கிறேன் நான்... என் சிநேகிதியோ மறைக்க வேண்டும் என்கிறாள். இதில், எது சரி?

உங்கள் தோழி சொல்வதே சரி; மறைக்க வேண்டியதை மறைக்கா விட்டால், குடும்ப ஓடம் புயலில் சிக்கி, சின்னாபின்னமாகி விடும்!

பொ.ஜெயராமன், கீழ்புவனகிரி: என் நண்பன் சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் மிக்கவன்; இதனால், வெற்றி பெற்ற சிறு தொழிலதிபராக இருக்கிறான். ஆனால், தலைகனம் பிடித்தவன் என பெயர் எடுத்திருக்கிறானே...

என்னதான் சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும், விடாமுயற்சியும், ஊக்கமும், ஜெயிக்கும் வல்லமையும் வாய்க்கப் பெற்று இருந்தாலும், தன்னடக்கம் வேண்டும். இல்லை என்றால், கண்ணை மறைக்கும் பணம், கெட்ட பெயரை வாங்கித் தந்து விடும்!

அ.சீனிவாசன், புதூர்: சம்பாதிக்கும் பெண்களுக்கு ஆணவமும், அதிகாரமும் அதிகம் என்பது ஆண்களின் பொதுவான கருத்தாக இருக்கிறதே...

பிள்ளைப் பூச்சிகளாக, வாயே திறக்காதவர்களாக, தான் சொல்வதற்கு எல்லாம், 'ஆமாம்' போடுபவர்களாக பெண்கள் இருக்க வேண்டும் என்பது, ஆண்களின் எண்ணம். ஆனால், சம்பாதிக்கும் பெண், சுய காலில் நிற்பவள்... அவள் அனாவசியத்திற்கு எல்லாம் ஆமாம் போட மாட்டாள்; தட்டிக் கேட்பாள்; பதில் சொல்வாள். இதெல்லாம் பிடிக்காத ஆண்கள், உடனே கொடுத்து விடுகின்றனர் பட்டம்!

பி.கிருஷ்ணகுமாரி, உறையூர்: மனதில் உள்ள ரகசியங்களைப் பரிமாறிக் கொள்ள ஏற்ற தோழியை எப்படி தேர்ந்தெடுப்பது?

சிறந்த தோழி, 40 பக்க நோட்டு; அதில் எழுதுங்கள்... ஒரு முறைக்கு இருமுறை படியுங்கள்; தீயிட்டு கொளுத்தி விடுங்கள். அந்தரங்க தோழியாக எவரையும் கருத முடியாத காலம் இது!

டி.எடிசன், வடபழனி: சமூகத்தில், நாலு பேர் மதிக்கும்படி நல்லவனாக வாழ ஆசைப்படுகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

உங்கள் மனசாட்சி சொல்வதை கேளுங்கள்... மாமனிதனாகி விடுவீர்கள்! மனசாட்சி, ஒரு போதும் கெட்டதை சொல்லாது; உங்கள் ஆசை நிறைவேறும்!

வி.எஸ்.வெங்கடேஷ், உலகாபுரம்: பணம் மற்றும் புகழுடன் வாழ ஆசைப்படுகிறேன்; இதற்கு என்ன செய்ய வேண்டும்?

திறமை மற்றும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனம் இருந்தால், பணம் மற்றும் புகழுடன் வாழலாம். இதைக் கோட்டை விட்டவர்கள் பின்னர் வருந்துகின்றனர்!

சி.கவிதா, திருவிநாயகபுரம்: சொர்க்கம், நரகம் என்றெல்லாம் சொல்கின்றனரே... அவை எங்குள்ளன?

சொர்க்கமும், நரகமும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளே தான் இருக்கிறது. அவரவர் நடவடிக்கைப்படி சொர்க்கத்திலும் வாசம் செய்யலாம்; நரகத்தில் விழுந்து உழலவும் செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us