தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஜூன் 14, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 14, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்று மாலை, சென்னை, மயிலாப்பூர் லஸ்சில் உள்ள பிளாட்பார பழைய புத்தகக் கடைக்கு சென்று, இன்ட்ரஸ்டிங்கான புத்தகம் ஏதாவது கிடைக்கிறதா என்று துழாவிக் கொண்டிருந்தேன்.

'பாழி' என்ற நாவல் கிடைத்தது; எழுதியவர் கோணங்கி. இந்த புத்தகம் வெளிவந்த போது, 'ஆஹா... ஓஹோ...' என, புத்தகத்தை புகழ்ந்து தள்ளினார் நண்பர் ஒருவர். 'வெறும், 1,000 பிரதிகள் அச்சடிக்க, ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்திருக்காங்கப்பா... அவ்ளோ உயர்தரப் பதிப்பு...' என்றெல்லாம் கூறினார். புத்தகத்தின் ஒரிஜினல் விலை, 185 ரூபாய் என்பதால், அப்போது புத்தகத்தை வாங்க வசதிப்படவில்லை; இப்போது கடைக்காரரிடம் விலை கேட்டேன்... '10 ரூபாய்...' என்றார்.

'இவ்வளவு மலிவா...' என்று நினைத்தபடி, ஓரிரு பக்கங்களைப் புரட்டிய பிறகு தான் தெரிந்தது, புத்தகம் சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறது என்று!

புத்தகத்தில் இருந்து சாம்பிளுக்கு ஒரு பகுதி...

சிறகுகள் முளைத்த பச்சை நிற தானியாள், நிர்வாணத்தில் நவக்கதிர்கள் மூடி அசைந்திருக்க, நீரில் பதிந்த கோடுகளை அசைக்கிறாள். சுரோனிதக் கிளைகளில் ஏறிய சொற்கைப் பரல்கள் அதிர, மனித குலத்தின் ஆற்றொண்ணா துயரங்களின் புயலாய் அலைகிறாள், கர்ப்பம் சுமந்து! எங்கும் பாறைகள் சுழன்று சுழியும் உள் அடுக்கில், பளிங்குக் கலம் ஒன்று சுழிகிறது வேகமாய். இசையின் கோடுகள் வடிவம் மாறி, காலத்தின் பின் முன்னாக இரு பக்கமும் நகர்ந்து செல்லும் பரவாத சிசு...

- இதே ரீதியில் புத்தகம் முழுவதும் போகிறது. மொத்தம், 498 பக்கங்கள்!

எடுத்த இடத்திலேயே, புத்தகத்தை வைத்தேன்.

'ரொம்ப நாளா இடத்தை அடச்சிக்கிட்டு கிடக்குது சார்... சும்மாவே எடுத்துக்கங்க...' என்றார் சென்னை தமிழில் புத்தகக் கடைக்காரர்.

'நாளைக்கு வர்றேன்...' என்று கூறி, ஓடியே வந்துவிட்டேன்.

இது தான் இன்றைய, 'இலக்கிய' எழுத்தாளர்களின் பாணி போலும்!

ஆங்காங்கே.. அவ்வப்போது படித்த, கேட்ட செய்திகளை அவிழ்த்து விடுகிறேன்...

* சென்னையின் பிறந்த நாள் எது தெரியுமா? ஆகஸ்ட் 4, 1639. அன்று தான், சென்னப்ப நாயக்கன், சென்னை மாநகரை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்ததாக, 'சென்னை வரலாறு' நூல் கூறுகிறது.

* சிதம்பரம் நடராஜர் கோவில் விமானத்தின் கூரையில், 21 ஆயிரம் பொன் ஓடுகளை, 72 ஆயிரம் பொன் ஆணிகளால் பொருத்தியுள்ளனர். நாம் தினம், 21 ஆயிரம் தடவை மூச்சு விடுவதாகவும், நம் உடம்பில், 72 ஆயிரம் நரம்புகள் இருப்பதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.

* முன் காலத்தில், தமிழக எல்லைகளாக வட வேங்கடம் - குமரியாக இருந்தது. வட வேங்கடம் (திருப்பதி) ஆந்திராவோடு சேர்ந்து விட்டதால், தற்போது, திருத்தணி வட எல்லையாக இருப்பதால், தமிழ்நாட்டில் வடக்கே குமரனும் (முருகன்), தெற்கே குமரியும் (கன்னியாகுமரி) எல்லை தெய்வங்களாக இருந்து, தமிழகத்தை காத்து வருகின்றனர். வடக்கே குமரனும், தெற்கே குமரியும் இருப்பது பொருத்தமல்லவா!

* சென்னை பிராட்வே சாலையை அமைத்தவர் பாபம்ஸ் பிராட்வே! அவர் பெயரால் அது, 'பாபம்ஸ் பிராட்வே' என்று அழைக்கப்பட்டு வந்தது. பின், பாபம்ஸ் தொலைந்து வெறும் பிராட்வேயாக உள்ளது.

* திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர் கும்பினிப்பேட்டை. ஆனால், இந்த ஊருக்கும், பிரிட்டிஷாருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. தெருவின் ஒரு பக்கம் ஆந்திராவையும், மறுபக்கம், தமிழ்நாட்டையும் சேர்ந்தது. இந்த விசித்திர ஊர், அரக்கோணத்திலிருந்து, 7 கி.மீ., தொலைவில் உள்ளது.

* மதுரை மாவட்டத்தில் சில வட்டாரங்களில் மாந்தோப்புகளில் மாம்பழங்களை விலைக்கு எண்ணிப் போடும் போது, 'போலீஸ் மாங்காய் ஐந்து...' என்று கொசுறு போடுவது வழக்கம். மாம்பழம் ஏற்றிச் செல்லும் போது வழியில் தென்படும் போலீஸ்காரர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு இந்த மாங்காய்களாம்!

* காரைக்குடியில் ஒரு கோவிலின் நுழைவாயிலில், 'நடையன்கள் இங்கே பாதுகாக்கப்படும்...' என்று எழுதப்பட்டுள்ளது. காலணி, மிதியடி என்ற வழக்கமான சொல்லுக்குப் பதிலாக, புதுமையாக இப்படி நடையன்கள் என்று எழுதியுள்ளதாக நினைக்க வேண்டாம்... செட்டி நாட்டில், காலணிகளை, நடையன்கள் என்று தான் சொல்வராம்!

* வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி ஆகிய ஐந்து ஆறுகள் இங்கே பிரிவதால், இவ்வூர் திரு + ஐ (ஐந்து) + ஆறு என்றாகி, அது, திருவையாறு என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில், நாத பிரம்மம் தியாகராஜர் சமாதி உள்ளது.

* நெல்லை மாவட்டத்தில் தான் எத்தனை சமுத்திரங்கள்... ஆனால், அவற்றில் ஒன்றில் கூட அலைகளைக் காண முடியாது. காரணம், அனைத்தும் ஊரின் பெயர்கள்! அம்பா சமுத்திரம், கோபால சமுத்திரம், வடமலை சமுத்திரம், ரவண சமுத்திரம் மற்றும் ரங்க சமுத்திரம்.

அன்று அலுவலகம் வந்திருந்த குப்பண்ணாவின் ஜோல்னா பையை குடைந்தேன். குஷ்வந்த் சிங் எழுதிய புத்தகம் ஒன்று கிடைத்தது. புத்தகத்தைப் பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.

அதில் ஒரு அத்தியாயத்திற்கு, 'மோகத்தை வெல்லும் வழி' என, தலைப்பிட்டு இருந்தார்.

அந்தத் தலைப்பைப் பார்த்ததுமே, மகாகவி, 'மோகத்தை கொன்று விடு; அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு...' எனப் பாடியது நினைவுக்கு வர, 'இந்த பஞ்சாபி எழுத்தாளர் மோகத்தை வெல்ல, என்ன வழி சொல்லப் போகிறார் என்று பார்ப்போம்...' என எண்ணி, படிக்க ஆரம்பித்தேன்...

'தியானம் மற்றும் மிகச் சக்தி வாய்ந்த, 'ஓம்' எனும் மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம், குண்டலினி சக்தியை எழுப்பி, மோக உணர்ச்சியை அடக்க முடியும்...' என்கிறார், மிஸ் அலைஸ் கிருஸ்டன் என்ற ஆங்கில பெண்மணி.

'வழக்கமாக சில பிரம்மச்சரிய பிராக்டீஸ்கள் செய்வதன் மூலமும், சிற்றுண்டி வேளையில் ஐந்து நிமிடம், மோக உணர்வை அடக்குவதன் மூலமும், மிஸ் அலைஸ் சொல்கிற மாதிரி எல்லாம் மோகத்தை அடக்கிவிட முடியும் என்று தோன்றவில்லை.

'காமத்தை வெல்வதற்கு இரண்டு வழிகள் தான் உள்ளன. ஒன்று: யோகிகள் சொல்லும் வழி; மற்றது: என் வழி. 'பத்மாசனமிட்டு, மூக்கையும், மனச் சலனங்களையும் அடக்க விரும்புவோர் உடனே யாராவது ஒரு சாமியாரைப் பாருங்கள்; இல்லை என் வழிக்கு வருவதென்றால், நான் சொல்வதை கேளுங்கள்...

'நான் ஒன்றும் குரு அல்ல; இருந்தாலும், ஒரு மாற்று வழி சொல்கிறேன்... அது, உல்லாசமான பாதை... துன்பம் கம்மி; தமாஷ் அதிகம்.

'அதாவது, எப்போதெல்லாம் மனதில் மோக இச்சை மேலோங்குகிறதோ, அப்போதெல்லாம், உடனே அதைத் தீர்த்து விடுங்கள்.

'உங்கள் வயதையும், உடம்பையும் பொறுத்து, குண்டலினியை எழுப்பினால், எப்படி மோக வேட்கை அடங்குமோ, அப்படியே இதிலும் கொஞ்ச காலத்திற்கு மோகம் அடங்கும்.

'மறுபடியும் அது, தன் நச்சுத் தலையை நீட்டினால், வேறென்ன... மறுபடியும் முன்போலவே செய்து, அதை மண்டையில் அடியுங்கள்!'

- மோகத்தை எந்த வழியில் அடக்கப் போகிறீர்கள்?

சாமியார் வழியிலா, ஆசாமியார் - குஷ்வந்த் சிங் வழியிலா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us