தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜூன் 14, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 14, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிக்னிக்கும், சமூக சேவையும்!

சமீபத்தில், மாநகராட்சி பூங்காவிற்கு, என் குழந்தைகளுடன் சென்றேன். பூங்கா நுழைவாயிலில், நோட்டீஸ் போர்டில், 'சேவை நோக்கமாக, பூங்காவை தூய்மைப்படுத்திய அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு நன்றி!' என்று எழுதப்பட்டிருந்தது.

இதுபற்றி பூங்கா ஊழியர் ஒருவரிடம் விசாரித்த போது, 'ஒருநாள் அருகிலுள்ள அரசுப் பள்ளி ஆசிரியைகள் இருவர் எங்களிடம் வந்து, புத்துணர்வு பயணமாக, எங்கள் பள்ளி மாணவ - மாணவியரை பூங்காவிற்கு அழைத்துச் வந்துள்ளோம். இன்று, ஒருநாள் அனுமதி தர வேண்டும்...' என்றனர்.

உடனே, எங்களது அதிகாரியிடம் பேசினேன்; அவரும் அனுமதி வழங்கினார்.

'காலை, 10:00 மணிக்கு உள்ளே நுழைந்த மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியைகள், முதல் வேலையாக, அங்கே கிடந்த பாலித்தின் பைகள், கப்புகள், தண்ணீர் பாட்டில்கள், உடைந்த மரக் கிளைகள் மற்றும் சருகுகளை சுத்தம் செய்தனர். இரண்டு மணி நேரத்தில் பூங்கா தூய்மையாகியது. மதிய உணவுக்கு பின், சிறிது நேரம் விளையாடிய பின், எங்களுக்கு நன்றி தெரிவித்து கிளம்பிச் சென்றனர்.

'நம்மை சுற்றியுள்ள இடங்களை நாம் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் செயல்பட்ட அம்மாணவர்களையும், குறிப்பிட்ட பள்ளியையும் பெருமைப்படுத்தும் விதமாக, எங்கள் அதிகாரி தான், நோட்டீஸ் போர்டில் எழுதி வைக்கச் சொன்னார்...' என்றார்.

பள்ளிக் குழந்தைகளை 'பிக்னிக்' அழைத்து சென்றதோடு அவர்களுக்கு சேவை மனப்பான்மையையும் புகுத்திய அந்த ஆசிரியைகளைப் பாராட்டத் தோன்றியது.

ஆர்.கவிதா, மதுரை.

தாயிற் சிறந்ததொரு...

புதிதாக மாற்றலாகி வந்த எங்கள் கம்பெனி கிளைமேலாளருக்கு, வாடகைக்கு வீடு பார்க்க, வீட்டு புரோக்கரை அழைத்து சென்றிருந்தேன். புரோக்கரிடம், மேலாளர், 'எங்க வீட்ல மனைவி, ஒரு குழந்தை மற்றும் எங்க அம்மான்னு நான்கு பேர் இருக்கோம். அதுக்கு தகுந்த மாதிரி வீடு வேணும். முதல் மாடியா இருந்தாக் கூட பரவாயில்ல; ஆனா, வீட்டுக்கு பக்கத்துல பட்டரை, பண்ணை, தொழிற்சாலை இருக்கக் கூடாது. அதைவிட நூறு மீட்டர் தூரத்திற்கு கோவில், தேவாலயம், மசூதி இல்லாம பாத்துக்கங்க...' என்றார்.

'என்ன சார்... கோவில் இல்லாத ஊரில குடியிருக்க வேண்டாம்ன்னு சொல்லுவாங்க; நீங்க என்னடான்னா அப்படியே உல்டாவா சொல்றீங்களே...' என்றார் புரோக்கர்.

அதற்கு மேலாளர், 'எங்க அம்மாவுக்கு உடம்புக்கு முடியல. அதனால, பெரும்பாலும் ராத்திரி அவங்களுக்கு தூக்கம் வர்றது இல்ல; அதிகாலையில கொஞ்ச நேரமும், மதியம் சிறிது நேரமும் தான் அசந்து தூங்குவாங்க. அருகில் வழிபாட்டு தலங்கள் இருந்தா, பூஜை, வழிபாடு, திருவிழான்னு ஒலி பெருக்கி சத்தம் இருக்கும். அதனால, அவங்க உடல்நிலை இன்னும் பாதிக்கும். அவங்களோட கடைசி காலத்தில அமைதியாவும், நிம்மதியாவும் இருக்கணும்ன்னு என் மனைவி தான் இந்த நிபந்தனைகளை போட்டிருக்காங்க...' என்றார்.

புரோக்கர் சென்றதும் மேலாளரிடம், 'இந்தக் காலத்தில தன் சுயநலத்திற்காகவும், சந்தோஷத்திற்காகவும் பெற்றோரை தனியா விட்டுட்டு தனிக்குடித்தனமோ அல்லது வெளியூரோ ஓடிப் போயிடுறாங்க. ஆனா, நீங்க உங்க அம்மா மேலேயும், உங்க மனைவி, மேலேயும் காட்டுற அக்கறை, உண்மையிலேயே ரொம்ப உணர்வுப்பூர்வமாக இருக்கு சார்...' என்றேன்.

அவர் சிரித்தபடி, 'இந்த உலகத்துல அம்மாவ விட பெரிய கடவுள் எதுங்க... அவங்களுக்கு செய்ற பணிவிடைக்கு மேல ஒரு வழிபாடு இருக்கா...' என்றார்.

அவரது வார்த்தைகளை யோசித்த போது, என் தாயை நேசிக்க வைத்தது!

எஸ்.அழகுசுந்தர், மாடக்குளம்.

திருமண மண்டபத்தில்...

நண்பர் வீட்டுத் திருமணத்திற்கு சென்றிருந்தேன். பொதுவாக, திருமண மண்டபம் என்றால், அலங்கார விளக்குகள், தோரணங்கள் மற்றும் பலூன்களை கட்டி வைத்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால், நண்பர் வீட்டு திருமணத்தில், புதுமையாக, பாசிட்டீவான, உற்சாகமூட்டும் பொன்மொழிகளை எழுதி வைத்திருந்தனர்.

மணமேடைக்கு நேர் எதிரில், மணமக்களை வாழ்த்துவது போல், 'மணவிழா காணும் மணமக்கள் மணிவிழா காண வாழ்த்துகள்...' மற்றும் 'இறைவனை வேண்டினால் பிறப்பது ஆண் குழந்தை; இறைவனே வந்து பிறந்தால் பெண் குழந்தை...' போன்ற வாசகங்களும், வரவேற்பு இடத்தில், 'அன்பளிப்பு பொருளின் மதிப்பை காட்டிலும், அன்பளிக்கும் விதமே மதிப்பு மிக்கது...' என்றும் பொன் மொழிகளை எழுதி வைத்திருந்தனர்.

நல்லன பார்ப்பதும், நல்லன கேட்பதும் அரிதாகி விட்ட அவசர யுகத்தில், இம்முயற்சி பாராட்டும்படி இருந்தது.

உமா அரசு, திருப்பத்தூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us