
எம்.விஜயலட்சுமி, போடிநாயக்கனூர்: வசதியான, ஆடம்பரமான மாப்பிள்ளையை எதிர்பார்த்து, வரும் வரன்களைத் தட்டி கழிக்கிறாள் என் தோழி; இதனால், வயதும் கூடிக் கொண்டே போகிறது...
மலையாளத்தில், ஒரு சொல் வழக்கு உண்டு. 'சாடிச் சாடி, தம்பூதிரி தீட்டத்தில் சாடி!' என்பர். கேரளாவில் சாலைகள் குண்டும், குழியுமாக இருக்கும்; எப்போதும் மழை வேறா... ஆங்காங்கே நீர் தேங்கி இருக்கும். பட்டு வேட்டி கட்டிய நம்பூதிரி, சகதி பட்டுவிடக் கூடாதே என, தாவித் தாவிச் சென்றாராம். ஆனால், கடைசியில் காலை வைத்தது மனிதக் கழிவில்! இக்கதையை உங்கள் தோழியிடம் சொல்லுங்கள்... உடனே, திருமணத்திற்கு சம்மதிப்பார்!
எஸ்.வின்சன்ட்ராஜா, கீழ்புவனகிரி: விடலைப் பருவம் வரை பெற்றோரை அண்டி இருக்கும் மைந்தர்கள், மங்கை ஒருத்தியை கைப்பிடித்த பின், பெற்றோரை புறக்கணிக்கின்றனரே... இவர்களை திருத்துவது எப்படி?
ஏன் திருத்த வேண்டும்... இது, 'நேச்சுரல் பிராசஸ்!' இப்படியாக ஒரு நிகழ்விற்கு ஆரம்பம் முதலே பெற்றோர் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்; காலம் மாறுகிறது.
பி.கோபிநாத், மதுராந்தகம்: உலகிலேயே,'காஸ்ட்லி'யான நகரம் ஜப்பான் தலைநகர் டோக்கியோ என்பார்களே... இப்போது அந்நகர் எந்த இடத்தில் உள்ளது?
இப்போதும் அதே நகர் தான் நம்பர் ஒன்! உலகிலுள்ள, 144 நகரங்களில், இரண்டாவது இடத்தை லண்டனும், மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை மாஸ்கோ, ஒசாகா(ஜப்பான்) மற்றும் ஷாங்காய் (சீனா) ஆகியவை பிடிக்கின்றன.
என்.அருண்குமார், உலகாபுரம்: எந்த மாதிரி நண்பர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்வது நல்லது?
பணத்தோடு, பண்பையும் இழக்க நேராமல் இருக்க உதவுபவர்களிடம் பழகுவது நல்லது!
க.தான்யா, புதூர்: கனவு, தூங்கும் போது வர வேண்டுமா, கண்ணை மூடிக் கொண்டிருக்கும் போதா?
கண்களை அகலத் திறந்து கனவு காண வேண்டும். அக்கனவுகளால் தான் வாழ்வு நெறிப்படும்; வாழ்க்கை தரம் செம்மைப்படும். நீங்கள் சொன்ன இரண்டு செயல்களின் போதும் வரும் கனவுகளால் ஒரு பயனும் இல்லை.
கே.டி.முத்துக்குமார், உடுமலைப்பேட்டை: பத்திரிகை நிருபர் ஆவதற்கு என்ன படித்திருக்க வேண்டும்? வேறு என்ன தகுதிகள் வேண்டும்?
படிப்பு முக்கியம் அல்ல; எல்லா விஷயங்களைப் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். தமிழில் பிழையின்றி, பாமரரும் புரிந்து கொள்ளும் அளவில் எழுத தெரிந்து இருக்க வேண்டும். சின்ன சின்ன விஷயங்களைக் கூட கூர்ந்து நோக்கும் பக்குவம் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக பயம் மற்றும் கூச்ச சுபாவம் இருக்கக் கூடாது!
ஆர்.பி.கண்ணதாசன், குன்றத்தூர்: பெண்களைப் போல ஆண்களும் சுய உதவி குழு அமைத்து பயன் பெறலாமே...
ஆண்கள் இணைந்து அமைத்த கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு தொழிற்கூடங்களின் இன்றைய நிலை என்ன? ஆண்களின், 'ஈகோ' அவர்களை சேர்ந்து செயல்பட விடாது. பெண்களுக்கோ, இயற்கையிலேயே விட்டுக் கொடுக்கும் சுபாவமும், இணைந்து செயல்படுவதில் கிடைக்கும் பங்களிப்பு தாராளமாக இருக்க வேண்டுமென்ற மனப்பான்மையும், தளராத உழைப்பும் இருப்பதால், அவர்களின் சுய உதவி குழுக்கள் ஜொலிக்கின்றன!

