
ஜூலை, 1934ல், 'களிராட்டை' எனும் மாத இதழில் வெளிவந்துள்ள செய்தி:
ஜூன் 25ம் தேதி காந்திஜி, பூனா முனிசிபல் மண்டபத்துக்குப் போகும் சமயத்தை எதிர்பார்த்திருந்த கொலைகாரன், காந்திஜி வரும் மோட்டார் வண்டி என நினைத்து, அதில் வெடிகுண்டை எறிந்தான்; ஆனால், வண்டியில் காந்திஜி இல்லை. அதில், பயணம் செய்த ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டது.
வண்டி, சற்று தாமதித்து வந்ததால், உயிர் தப்பினார் காந்திஜி.
எதிர்ப்பாளர்களின் பிரசாரத்தால் வெறியடைந்த ஒருவன் தான் இக்காரியத்தை செய்திருப்பான் என்பது பலரது அபிப்பிராயம்.
இது குறித்து காந்திஜியின் அறிக்கை:
இன்று நடந்த வருத்தப்படத்தக்க சம்பவத்தால், ஹரிஜன இயக்கத்திற்கு நன்மையே ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இயக்கத்திற்கு உழைப்போரின் உயிர்த் தியாகத்தினால் தான், அவ்வியக்கத்திற்கு நன்மை ஏற்படும். கடவுளின் அபாரமான சக்தியில், எனக்கு நம்பிக்கை உண்டு. அவனுடைய கைங்கரியத்துக்கு, நான் இந்த உடலுடன் இருப்பது அவசியம் என்று அவன் விரும்பும் மட்டும், என்னுயிரை எவரும் எடுத்துவிட முடியாது. நான் உயிருடன் இருப்பது, அவன் பணிக்கு எவ்விதப் பயனுமில்லை என்று அவன் நினைக்கும் பட்சத்தில், மண்ணுலகில் உள்ள எந்த சக்தியும், என் மரணத்தை தடுக்க முடியாது.
- என்று தெரிவித்து உள்ளார். கொலை காரனை கண்டு பிடித்து கொடுப்போருக்கு, 1,000 ரூபாய் வெகுமதி அளிப்பதாக, பூனா போலீசார் அறிவித்தனர்.
எழுத்தாளர், வ.ரா., என்றழைக்கப்படும் வ.ராமசாமி, ஐயங்கார் வகுப்பைச் சேர்ந்தவர். இவரால் தான், பாரதியாரின் பெருமை முதன் முதலாக வெளியுலகிற்கு தெரிந்தது. பாரதியின் சகவாச தோஷமோ என்னவோ, இவரும் முற்போக்குவாதியாக இருந்தார். பாரதியைப் போலவே, அதை, தன் எழுத்துகளில் வெளிப்படுத்தினார். ஒருமுறை, இவர், ஈ.வெ.ரா.,வைப் பாராட்டி எழுதியிருந்தார். அது குறித்து அண்ணாதுரை, 'அக்ரகாரத்தில் ஒரு அதிசய ஈ.வெ.ரா...' என, இவரை போற்றி எழுதினார்.
ஈ.வெ.ரா.,வைப் பற்றி, வ.ரா., அப்படி என்ன எழுதினார் என்று தெரிந்து கொள்ள, ரொம்ப காலமாக முயன்றேன். சமீபத்தில் தான், வ.ரா., எழுதிய அந்த கட்டுரை கிடைத்தது. அதில்:
தேர் இல்ல; திருவிழா இல்ல; தெய்வம் இல்ல; சாமியைக் குப்புற போட்டு வேட்டி துவைக்கலாம் என்கிறார், ஈ.வெ.ரா., இவரைக் காட்டிலும் பழுத்த நாத்திகன் எவரும் இருக்க முடியாது. இவரை, பாதகன் என்று சிலர் உறுமுகின்றனர்; வீட்டைக் கட்டி வைக்கோலை திணிப்பதைக் காட்டிலும், வீட்டைக் கட்டாமலே வைக்கோலைப் போடலாம் என்று சிக்கன யோசனை சொல்வது தவறா...
அழுகி, புழு நெளியும் உடலுடன் இருப்பதைக் காட்டிலும், உயிர் விடுவது உத்தமம் என்ற அபிப்பிராயம் கொடுத்தால், சாகச் சொல்கிறார் என்று திட்டுவதா... கண்டவர்களுக்கெல்லாம் குனிந்து சலாம் செய்து, மண்ணோடு மண்ணாய் ஒட்டி மார்பால் ஊர்ந்து செல்ல வேண்டாமென்று சுயமரியாதையை ஊட்டினால், பாவி, நமஸ்காரத்தைக் கண்டிக்கிறான் என்று பேசுவதா? மனசாட்சிக்கும், தொண்டுக்கும் பக்தரான
ஈ.வெ.ரா.,வை நாத்திகன் என்று அழைக்கும் அன்பர்கள், நாத்திகம் எது என்பதைத் தெரிந்து கொள்ளவில்லை.
அநீதியை எதிர்க்க திறமையும், தைரியமும் அற்ற கோழைகளாய், சொரணையற்றுக் கிடந்த தமிழர்களின் உள்ளத்தின் அடி தெரியும்படி கலக்கிய பெரும் பேரு ஈ.வெ.ரா.,வையே சேரும். அவரது அழகுப் பிரசங்கத்தை, ஆணித்தரமான சொற்களை, அணி அணியாய் அலங்காரம் செய்யும் உவமானங்களை, உப கதைகளை, அவரது கொச்சை வார்த்தை உச்சரிப்பை, வர்ணனையை, உடல் துடிதுடிப்பை பார்க்கவும், கேட்கவும் மக்கள் வெகு தூரத்திலிருந்து வந்து, வண்டு மொய்ப்பது போல அவரை மொய்ப்பர்.
அவர் இயற்கையின் தவப்புதல்வர்; மண்ணை மணந்த மணவாளர்; மண்ணோடு மண்ணாக உழலும் கங்கையின் பிரவாகம் அவர் என்பதில் சந்தேகமில்லை. செய்ய வேண்டும் என்று தோன்றியதை தயங்காமல் செய்யும் தன்மை அவரிடம் காணப்படுவது போல் தமிழகத்தில் வேறு எவரிடமும் இல்லை. தமிழகத்தின் வருங்காலப் பெருமைக்கு, முன்பே வரும் பிள்ளை தூதுவன் ஈ.வெ.ரா.,
வருங்கால வாழ்வியல் அமைப்பு அவர் கண்ணில் அரைகுறையாகப் பட்டிருக்கலாம். அதனாலேயே மலைகளையும், மரங்களையும் வேரோடு பிடுங்கி யுத்தம் செய்த மாருதியைப் போல, அவர் தமிழகத்தின் தேக்கமுற்ற வாழ்வோடு போர் புரிகிறார். இதைக் கண்டு நாம் வியப்படையாமல் இருக்க முடியாது!
- இப்படி எழுதியுள்ளார் வ.ராமசாமி!
நடுத்தெரு நாராயணன்