
இரண்டு பாகமாக உருவாகும் தனுஷின், வடசென்னை!
விஸ்வரூபம் படத்தின் முதல் பாகத்தை இயக்கி நடித்த போதே, இரண்டாம் பாகத்திற்கு தேவையான, 50 சதவீத காட்சிகளை படமாக்கினார் கமல். அவரைப் போன்றே, பாகுபலி படத்தின் முதல் பாகத்தை படமாக்கும் போதே, இரண்டாம் பாகத்திற்கான, 40 சதவீத காட்சிகளை படமாக்கினார் ராஜமவுலி. அதைத் தொடர்ந்து, தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும், வடசென்னை படமும் ஒரே நேரத்தில் இரு பாகங்களாக உருவாகி வருகிறது.
மேலும், முதல் பாகத்தை வெளியிட்டு, சில மாதங்கள் கழித்து இரண்டாம் பாகத்தை வெளியிடவும், முடிவு செய்துள்ளார். அத்துடன், தனுஷுக்கு இந்தி சினிமா வரை ரசிகர்கள் இருப்பதால், இந்தியா முழுக்க இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். தனுஷின் கேரியரில் முதன் முறையாக பிரமாண்ட பட்ஜெட்டில், இப்படம், உருவாகிறது.
— சினிமா பொன்னையா
அனுஷ்காவுக்கு திருமணம்!
பாகுபலி மற்றும் ருத்ரம்மா தேவி படங்களை முடித்த கையோடு திருமணம் செய்து கொள்வதாக பெற்றோரிடம் கூறியிருந்த அனுஷ்கா, தற்போது, இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்து வருவதுடன், மேலும் சில படங்கள் சம்பந்தமாகவும் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால்,
அவரது பெற்றோரோ, '33 வயதாகி விட்டது; அதனால், உடனே திருமணம் செய்தாக வேண்டும்...' என்று அனுஷ்காவுக்கு தீவிரமாக வரன் பார்க்கத் துவங்கியுள்ளனர். அவர்கள் எதிர்பார்ப்பது போன்று வரன் செட்டாகி விட்டால், அடுத்த ஆண்டு துவக்கத்தில், அனுஷ்காவுக்கு கெட்டி மேளம் கொட்டி விடுவர். காலத்தே பயிர் செய்!
— எலீசா
கடைக்கண் பார்வையில் விழுந்த கீர்த்தி சுரேஷ்!
நெற்றிக்கண் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை மேனகா. அவரது மகளான கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழில் அரை டஜன் படங்களில் நடிக்கிறார். இதில், அவர் நடித்து வெளியான முதல் படமான, இது என்ன மாயம் தோல்வியடைந்து விட்டதால், தன் மார்க்கெட் வீழ்ந்து விடாமல் இருப்பதற்காக இதுவரை கிளாமருக்கு தடா போட்டிருந்தவர், சமந்தா போன்று துகிலுரிந்து நடிப்பதற்கு, பச்சை கொடி காட்டியுள்ளார்.
இதனால், இதுவரை கீர்த்தி சுரேஷை கண்டு கொள்ளாமல் இருந்து வந்த மேல் தட்டு கதாநாயகர்களின் கடைக்கண் பார்வை, இப்போது அவர் மீது விழத் துவங்கியுள்ளது. இன்னமும் கெடுகிறேன் பந்தயம் என்ன என்பது போல்!
— எலீசா
விஜயகாந்த் பாணியில் விஜயசேதுபதி!
ரஜினி மற்றும் கமல் நடித்த படங்களின் தலைப்புகளை தற்போதைய இளவட்ட கதாநாயகர்களின் படங்களுக்கு அதிகமாக பயன்படுத்தி வருவதை தொடர்ந்து, விஜயகாந்த் நடித்த, ஈட்டி பட தலைப்பில், தற்போது, அதர்வா ஒரு படத்தில் நடித்துள்ளார். அதையடுத்து, அவர் நடித்த, சேதுபதி ஐ.பி.எஸ்., என்ற பட தலைப்பில், சிறிய மாற்றம் செய்து, கா.சேதுபதி என்ற படத்தில், விஜயசேதுபதி நடிக்கிறார். இப்படத்தில், விஜயகாந்த் போன்று, காக்கிசட்டை அணிந்து, போலீசாக நடிக்கும் விஜயசேதுபதி, அவரது பாணியிலேயே, ஆக் ஷன் கோதாவில் இறங்குகிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
வம்பு நடிகர், தளபதி பக்கம் சாய்ந்து விட்டதால், பிரியாணி நடிகர், தல பக்கம் வந்திருக்கிறார். அத்துடன், வம்பு நடிகர் பற்றி, தவறான கருத்துக்களை, தலயிடம் சொல்லி, அவர் மனதை மாற்றி வரும், 'பிக்கப்' நடிகர், தன் நண்பரான, சண்டக்கோழிக்கு ஆதரவாகவும், தல நடிகரை திருப்பி விடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சுமார், 250 கோடி ரூபாயில் படமெடுத்து, இந்தியாவின் பிரமாண்ட இயக்குனராகி விட்ட அந்த தெலுங்கு இயக்குனரை பின் தள்ளி, மீண்டும், தானே முன்னணி பிரமாண்ட இயக்குனராகி விட வேண்டும் என்று, எந்திரன் இயக்குனர் வரிந்து கட்டி திரிகிறார். அதன் காரணமாக, அவரது அடுத்த படத்தை, 600 கோடி ரூபாயில் தயாரிக்கயிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இந்த பிரமாண்ட சண்டையினால், தயாரிப்பாளர்கள் கலவரமடைந்துள்ளனர்.
சினி துளிகள்!
* அனுஷ்கா சென்னை வரும்போது, அவரை, தன் காரிலேயே, 'ஸ்பாட்'டுக்கு கொண்டு விடும், டிரைவர் வேலையும் செய்கிறார் ஆர்யா.
* ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கும் படத்தில், வில்லன் வேடத்தில் நடிக்க இதுவரை எந்த பாலிவுட் கதாநாயகரும் உடன்படவில்லை.
* 'நயன்தாரா இடத்தை எப்போதோ பிடித்து விட்டேன்...' என்று பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளார் சமந்தா.
* புலி படத்தை உலகமெங்கும், 3,500 தியேட்டர்களில் வெளியிட விஜய் தரப்பு திட்டமிட்டுள்ளது.
* வடிவேலு நடித்த, கைப்புள்ள என்ற கதாபாத்திரத்தின் பெயர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் தலைப்பாகியுள்ளது.
அவ்ளோதான்!