
ராணி மைந்தன் எழுதிய, 'சாவி - 85' நூலிலிருந்து: பக்தவத்சலம் அப்போது தமிழக முதல்வராக இருந்தார். பதவியை துறந்து, கட்சி பணியாற்ற வேண்டும் என்ற, 'காமராஜர் திட்ட'த்தின் கீழ், முதல்வர் பதவியில் இருந்து காமராஜர் விலகிய பின், முதல்வராக பொறுப்பேற்றார் பக்தவத்சலம். 'தமிழக மக்களிடையே நல்ல பண்புகளும், பழக்க வழக்கங்களும் வளர வேண்டுமானால், நம் புராண இதிகாசக் கதைகளை கதாகாலட்சேபம், நாடகம் வாயிலாக, பட்டி தொட்டியெங்கும் பரப்பும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்...' என்ற யோசனையை, திருவையாற்றில் வெளியிட்டார் முதல்வர் பக்தவத்சலம்.
டில்லியில், காமராஜருடன் தங்கியிருந்த போது, பக்தவத்சலம் கூறிய இந்த யோசனை பற்றி சாவி குறிப்பிட்டு, 'இதற்கு நீங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும்...' என்று கேட்டுக் கொண்டார். 'என்ன செய்யலாங்கறீங்க?' என்று கேட்டார் காமராஜர்.
'நீங்க அனுமதி கொடுத்தால், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில், வாரியார் சுவாமிகளை வைத்து, ராமாயணக் கதை சொல்ல சொல்லலாம்; எஸ்.வி.சகஸ்ரநாமத்தை, அரிச்சந்திரா நாடகம் போடச் சொல்லலாம். அப்புறம், இதை தமிழகம் முழுவதும் கொண்டு போகலாம்...' என்று, சாவி சொன்ன யோசனை, காமராஜருக்கு ரொம்பவும் பிடித்துப் போயிற்று.
'சரி, நீங்களே செய்யுங்க; ஒரு கமிட்டி போட்டுக்குங்க...' என்று, கணமும் தாமதியாமல் அனுமதி வழங்கி விட்டார் காமராஜர்.
சென்னை வந்ததும், இதற்கென ஒரு கமிட்டியை அமைத்தார் சாவி. 'சத்திய சபா' என்று பெயர் சூட்டப்பட்டது. அதன் தலைவராக இருக்கச் சம்மதித்தார் காமராஜர். செயலர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் சாவி. வாசன் உபதலைவராகவும், ரத்னம் ஐயர், லிப்கோ சர்மா போன்றோர், கமிட்டி அங்கத்தினர்களாகவும் நியமிக்கப்பட்டு, அடுத்த நாளே வேலை வேகமாக ஆரம்பிக்கப்பட்டது.
திட்டமிட்டபடி, காங்கிரஸ் மைதானம் மேடு, பள்ளங்கள் திருத்தப்பட்டு, மின் விளக்குகள் பொருத்தப்பட்டு விழாக் கோலம் பூண்டது. ஏ.வி.எம்.செட்டியார், முகப்பு வாயிலை, பிரபல ஓவியர் சேகரை கொண்டு, அலங்கரித்துக் கொடுத்தார். அவ்வையார் படத்துக்காக உருவாக்கப்பட்ட, மிகப்பெரிய பிள்ளையார் சிலையை, ராமாயணக் கதை நடக்கும் இடத்தில் வைத்துக் கொள்ள அனுமதி வழங்கினார் வாசன்.
பக்தவத்சலம் கொடியேற்றி வைக்க, விழாவைத் துவக்கி வைத்தார், அப்போது சென்னை கவர்னராக இருந்த மைசூர் மகாராஜா. ராமாயணக் கதைகளை, கலகலப்பாக சொல்ல துவங்கினார் வாரியார். தொடர்ந்து, 40 நாட்கள்... இடையிடையே, சகஸ்ரநாமத்தின் நாடகங்கள், தினமும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போய், மைதானம் நிரம்பி வழிந்தது. எவ்வளவு பேர் வந்தும் என்ன... கதை கேட்க, காமராஜர் வராமலிருக்கிறாரே என்ற குறை சாவிக்கும், வாரியாருக்கும், மற்ற கமிட்டி அங்கத்தினர்களுக்கும் இருந்தது.
ஒருநாள் திடீரென, 'இன்று கதை கேட்க காமராஜர் வருகிறார்...' என்று டெலிபோனில் தகவல் வந்தது.
இதை வாரியாரிடம், சாவி சொல்ல, வாரியாருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அன்று, அனுமன் ஆற்றல் பற்றி, விஸ்தாரமாகப் பேசினார் வாரியார்...
'தன்னிடம் எந்தக் காரியத்தை ஒப்படைத்தாலும், அதை வெற்றிகரமாகச் சாதிக்க கூடியவர் அனுமர். காரணம், அவர் ஒரு பிரம்மசாரி. பிரம்மசாரிகள் எப்போதுமே, தங்களிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்புகளை, வெற்றிகரமாக செய்யக் கூடிய ஆற்றலும், வல்லமையும் பெற்றவர்கள்...' என்று, அவர் சொல்லிக் கொண்டிருந்த தருணத்தில், அரங்கத்துக்குள் நுழைந்தார் காமராஜர்.
காமராஜர் வரும் திக்கு நோக்கி ஆவலோடு திரும்பிப் பார்த்து, ஆரவாரித்தனர் கூட்டத்தினர். 'நான் அனுமனைச் சொல்கிறேன்... நீங்கள் யாரை எண்ணி மகிழ்கிறீர்களோ...' என்று வாரியார், தமக்கே உரிய பாணியில் ஒரு போடு போடவும், கூட்டத்தினர் செய்த ஆரவாரமும், எழுப்பிய கரவொலியும் அடங்க வெகு நேரமாயிற்று!
கடந்த, 1968ல் ராஜாஜியின், 90வது பிறந்த நாள் விழாவின் போது, வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார் இந்திரா. அது:
'தங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்; தாங்கள் செய்ய விரும்பும் அனைத்தையும் செய்ய முடியாவிட்டாலும் கூட, தாங்கள் இவ்வளவு செயல் ஊக்கத்துடன் இருப்பது, நம் பொது வாழ்வுக்கு நன்மையூட்டுகிறது. நிறைந்த, 100 ஆண்டுகள் தாங்கள் எங்களுடன் இருப்பீர்களாக!'
இது பற்றி ராஜாஜி கூறும் போது, 'இந்த வார்த்தைகள் இந்திராவிடமிருந்து வந்தவை; அவருக்கு நன்றி. அவருக்கு ஆண்டவன் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன். மலையிலிருந்து செதுக்கி எடுத்த துண்டுக்கு, மலையின் குணங்கள் உண்டு. அன்புக்கு உகந்த நேரு என்ற மலையிலிருந்து பிறந்த துண்டுதான் இந்திரா என்பதற்கு, இவ்வாழ்த்து நிரூபணம்...' என்றார்.
நடுத்தெரு நாராயணன்

