
எஸ்.எம்.பாண்டியன், மேட்டுப்பாளையம்: தங்கள் கணவர், பிற பெண்களுடன் பேசுவதைக் கூட மனைவிமாரால் சகித்துக் கொள்ள முடியாது. ஆனால், சினிமா நடிகர்கள் பல நடிகைகளுடன் கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்து நடிக்கின்றனரே... அவர்களது மனைவியர் இதை எப்படி ஜீரணித்துக் கொள்கின்றனர்? அவர்களுக்கு, 'பொசசிவ்னஸ்' கொஞ்சம் கூடக் கிடையாதா?
கண்களை மறைத்து விடும் குணம் கொண்டது பணமும், புகழும்! தம் கணவரால் பெற்ற செல்வமும், அதனால், கிடைக்கும் வசதி வாய்ப்பு, சுகங்கள், பலவற்றையும் விட்டுக் கொடுக்கும் குணத்தை, மனப்பான்மையைக் கொடுத்து விடுகிறது நடிகர்களின் மனைவிமாருக்கு!
மு.ஜெகன், திண்டிவனம்: அரசின், வி.ஆர்.எஸ்., திட்டத்தில் வெளியேறியவர்கள் வாழ்வு வளமாக உள்ளதா, அதை, இனி வரும் காலங்களில் பெற்றுக் கொள்வது உசிதமா?
வளத்தில் குறைச்சல் இல்லை; ஆனால், தமக்கென ஒரு பொழுது போக்கு இல்லாதவர்கள், அதை வளர்த்துக் கொள்ள தெரியாதவர்கள் பரபரப்பு உலகில் இருந்துவிட்டு, இப்போது நேரத்தை போக்கத் தெரியாமல் அவதிப்படுகின்றனர்!
ஜி.அருணாசலம், கொடுங்கையூர்: தனிமனித சுதந்திரம் என்றால் என்ன?
இந்தச் செயல்கள் எல்லாம் மற்றவர்கள் நமக்கு செய்து விடக் கூடாது என்று எச்செயல்கள் பற்றி எல்லாம் எண்ணுகிறீர்களோ, அவற்றை நீங்கள் அவர்களுக்கு செய்யாதிருப்பது தான் தனி மனித சுதந்திரம்!
எம்.முபாரக், பூந்தமல்லி: பெண் தோழியை செல்லமாக அடித்துப் பேசலாமா?
செமத்தியா திரும்ப கிடைக்கும் எனத் தோன்றினால், கையை பின்புறம் கட்டிக் கொள்ளுங்கள்!
கோ.ஷ்யாம், ராமேஸ்வரம்: மகனை விலைபேசி பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணங்களை, புனிமான பந்தங்களாக உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?
கை நீட்டி காசு வாங்கிய பின், அங்கே புனிதம் எங்கிருந்து வரும்! இதில், பெற்றோரை குற்றவாளியாக முதன்மைப்படுத்துவதும் தவறு. விலை போகும் ஆண்மகன் புத்தியை, 'சேட்' கடையிலா வைத்திருக்கிறான்?
எம்.மாணிக்கவல்லி, பரங்கிப்பேட்டை: இந்திய உணவுகளுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு உண்டா?
நல்ல வரவேற்பு உண்டு; ஆனால், வெள்ளைக்காரர்கள் காரம் அதிகம் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால், பதார்த்தங்கள், 'சப்' என்றே இருக்கும். இங்கிலாந்தில் ஏறக்குறைய, 30 ஆயிரம் இந்திய உணவகங்கள் இருக்கின்றன. இவற்றின் மூலம் பல ஆயிரம் இந்தியர்கள் பிழைக்கின்றனர்.
என்.முகம்மது அப்துல் நாசீர், அழகப்பன் நகர்: கொரிய நாட்டில் நாய்கறி சாப்பிடுவதாக தொலைக்காட்சியில் பார்த்தேன். அது, மனித சமுதாயத்துக்கு ஒத்துக் கொள்ளுமா?
கொரியா ஏன் போகின்றீர்கள்... நமது, 'செவன் சிஸ்டர்'சில் நாகாலாந்து, மணிப்பூர், மேகலாயா, மிஜோராம் மாநிலங்களில் கூட நாய் கறி சாப்பிடுகின்றனர். நாயை கொல்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே பட்டினி போடுவர்; வெறும் தண்ணீர் மட்டும் தான். கொன்ற பின், அதன் உடலினுள் அரிசியை திணித்து, தீயில் வேக வைத்து சாப்பிடுகின்றனர். கொரியர்கள், பூனையைக் கூட விட்டுப் வைப்பதில்லை.

