
இலங்கைக்கு செல்வதற்கு, முன்கூட்டியே விசா எடுக்கத் தேவையில்லை. கொழும்பு விமான நிலையத்தில் இறங்கிய பின், அங்கேயே விசா வாங்கி, ஊருக்குள் செல்லலாம்.
அலுவலக விஷயமாக, முதல் நாள் சென்று, மறுநாள் திரும்பும் விதமாக கொழும்பு பயணம்; யாரையும் உடன் அழைத்துச் செல்ல அவகாசமும் இல்லை. இந்த அழகில், உடல்நலமும் பூரண சுகம் இல்லை!
ரூம் ரிசர்வ் செய்ய, 'தாஜ் சமுத்திரா'வுக்கு இ -மெயில் ஒன்று அனுப்பினேன். வழக்கம் போலவே, 60 சதவீத கட்டணக் கழிவில், கடலைப் பார்த்து அமைந்த அறையை ஒதுக்கி, கன்பர்மேஷன் அனுப்பினர்.
கையோடு எடுத்துச் சென்ற டிரான்சிஸ்டரை ஆன் செய்துவிட்டு, சந்திக்கச் சென்று இருந்த நண்பருக்கு போன் போட்டு, ஓட்டல் அறைக்கு வரச் சொன்னேன்.
அந்த நண்பர், இலங்கையில் உள்ள தனியார் வானொலியில் பணியாற்றுகிறார். ஒலிபரப்புத் துறையில், 25 ஆண்டுகள் அனுபவம்.
ரிசப்ஷனில் இருந்து அள்ளி வந்திருந்த வீரகேசரி, ஐலண்ட் போன்ற நாளிதழ்களை பார்த்தபடியே, வானொலி கேட்டுக் கொண்டிருந்தேன்.
அப்போது, 'மரண அறிவித்தல்' என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பானது. 'இளைப்பாறிய இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மரணமடைந்தார்...' என்ற அறிவிப்பு ஒலிபரப்பானது.
'இதென்னடா... இன்ஸ்பெக்டராவது, இளைப்பாறுவதாவது...' எனக் குழப்பத்தில் இருந்த போது, அங்கு வந்த நண்பர், இலங்கை தமிழில், 'பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்காது என்பர். ஆனால், புதன் போன்ற நீங்கள் கிடைத்து விட்டீர்கள்...' என்றார். (மேற்சொன்ன வசனத்தை இலங்கைத் தமிழில், தெனாலி படத்தில் கமல் பேசுவது போல பேசிப் பார்த்துக் கொள்ளுங்கள்.)
'அதெல்லாம் சரி சார்... 'பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்காது' என்கின்றனரே... இதோட முழு பொருள் என்னன்னு விளக்குங்களேன்...' என்றேன்.
'பொன் நகைகளோ, பொன் போன்ற பொருட்களோ கிடைச்சாலும், அவற்றை பேணுவதற்கு சிறந்த புதன்கிழமை கிடைக்காது; அநேகமாக மற்ற நாட்களிலேயே அணியும்படியோ, பயன்படுத்தும்படியோ நேரும் என்பது ஒரு கருத்து.
'ஆனால், இதற்கு மற்றொரு பொருளும் உண்டு. பொன் என்பது, வானில் உள்ள வியாழன் கிரகத்தை குறிக்கும். அப்படியே, புதன் என்று ஒரு கிரகமும் இருக்கிறது.
'வானவீதியில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி மற்றும் சனி போன்ற கிரகங்களை சாதாரணமாகவோ, தொலைநோக்கி மூலமாகவோ பார்க்கலாம்.
'அவ்விதம் பார்க்கும்போது, பொன் எனப்படும் வியாழன் கிரகம் அகப்பட்டாலும், புதன் நம் கண்ணுக்கு புலப்படுவது அரிது. இதையே இந்த பழமொழி குறிப்பிடுகிறது.
'வியாழன் மிகப் பெரிய கோள்; சூரியனுக்கு அதிக தூரத்தில் உள்ளது. புதன் கிரகமோ சிறியது; சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ளது. வேறு எந்த கிரகமும் இவ்வளவு அண்மையில் இல்லை.
'ஆகையால், புதன், சூரியனுக்கு சற்று முன்போ, பின்போ உதயமாகி, சூரியனுடன் சற்று முன்போ, பின்போ அஸ்தமிக்கிறது. எனவே, புதன் கிரகம், சூரிய ஒளியின் காரணமாக, பிரகாசம் குன்றி மங்கலாகத்தான் தெரியும்.
'ஆனால், வியாழன் சில மாதங்கள் முன்னிரவிலும், சில மாதங்கள் பின்னிரவிலும் புலப்படும். நம் சாதாரண கண்ணாலேயே காணும்படி பிரகாசத்தோடு காணப்படும்.
'இதனாலேயே பொன்னாகிய வியாழன் பார்க்க கிடைத்தாலும், புதன் பார்க்கக் கிடைப்பது அரிது என்று சொல்லும் பழமொழி உண்டாகியிருக்கிறது...' என்று விளக்கியவர், சிறிதுநேரம் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு மொழி உணர்வு அற்றுப் போனது குறித்து அர்ச்சனை செய்தார். பின், வால்மீகி, வடமொழியில் எழுதிய ராமாயணத்தில் உள்ள பெயர்களை, தமிழில் எப்படி மொழி பெயர்த்துள்ளார் என்பதையும் கூறினார்.
உதாரணத்திற்கு சில:
இலக்குமிபதி: திருவின் நாயகன்.
பாததூளி: கழல் துகள்.
லட்சுமி: தாமரைச் சேயவள்.
கிருஷ்ணன்: கரியவன்.
பங்கஜம்: அள்ளற்பூ.
யக்ஞ சத்ரு: வேள்விப்பகை.
பிராண நாயகர்: உயிரனைய கொழுநர்.
ஹிரண்யன்: கனகன்.
தூமிராட்சன்: புகையின் பொருகண்ணன்.
ரிஷ்ய சிருங்கர்: கலைக்கோட்டு முனி.
எனக்கு நிஜமாகவே தலை சுற்றியது! பின்னர், அவரிடம், 'இளைப்பாறிய இன்ஸ்பெக்டர் கோவிந்தன்...' பற்றி கேட்டேன். 'இளைப்பாறிய என்றால், 'ஓய்வு பெற்ற' என்று அர்த்தம்...' எனக் கூறினார்.
'சாப்பாட்டை முடித்துவிட்டு, நானும் இரவில் இளைப்பாறுகிறேன்...' என்றேன். சிரித்துக் கொண்டே விடைபெற்றார்!
நண்பர் விடைபெற்று சென்றபின், இளைப்பாற மனமின்றி, 'கால்பேஸ்' என்ற அந்த புல்வெளி நிறைந்த இடத்தையும், அதையொட்டி உள்ள கடலையும், அலைகளையும் சிறிதுநேரம் பார்த்தபடி சாளரத்தில் அமர்ந்திருந்தேன். விமான நிலையம் செல்ல இன்னும், 10 மணி நேரத்திற்கு மேல் இருந்தது.
வழக்கமாக உறங்க செல்லும் நேரத்திற்கு, இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது.
உடன் எடுத்துச் சென்ற புத்தகம் ஒன்றை பிரித்தேன்... வெள்ளை ஆட்சியருக்கு எதிரே, நம் ராஜாக்கள் செய்த தந்திரங்கள் அடங்கிய நூல் அது...
பாட்டியாலா மகாராஜா பற்றிய கதையை படிக்க ஆரம்பித்தேன். இதோ அது:
பாட்டியாலா மகாராஜா பூபீந்தர் சிங்குக்கும், வைஸ்ராயாக இருந்த வெலிங்டன் பிரபுவுக்கும் பகைமை இருந்தது. எப்படியும் பூபீந்தர்சிங்கை ஒழித்து விடுவது என்று தீர்மானித்தார் வெலிங்டன். பல கொலை வழக்குகளை ஜோடனை செய்து அதில், பூபீந்தர் சிங்கை சிக்க வைத்தார்.
இந்த விஷயம் பூபீந்தர் சிங்குக்கு தெரிய வந்தது. ஆனால், என்னென்ன வகையில் வைஸ் ராய் தம்மை சிக்க வைத்திருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை.
மகாராஜாவுக்கு டில்லியில் ஒரு நண்பர் உண்டு; ஸாஹ்னி என்று பெயர். அவருடைய வெள்ளைக்கார நண்பருக்கு ஒரு காதலி இருந்தாள். அவள் வைஸ்ராயின் அந்தரங்க காரியதரிசி. அவளுக்கு, 50,000 ரூபாய் லஞ்சம் தந்து, வைஸ்ராயின் ரகசிய பைலை சில மணி நேரத்துக்குக் கொண்டு வருமாறு ஏற்பாடு செய்தார் ஸாஹ்னி.
குறிப்பிட்ட நாளில், இரவு, 10:00 மணிக்கு, மகாராஜாவைப் பற்றிய பைலுடன், காஷ்மீர் கேட் என்னுமிடத்திற்கு டாக்சியில் வந்தாள், அப்பெண்.
மிக வேகமாக டைப் செய்யக்கூடிய, 12 பேரை தயாராக வைத்திருந்தார் ஸாஹ்னி. பைல் வந்ததும், அவர்கள், அதிலிருந்த எல்லா பக்கங்களையும் கிடுகிடுவென்று டைப் செய்து நகலெடுத்தனர்.
காரியதரிசிப் பெண், 50,000 ரூபாயை வாங்கிக் கொண்டு, எடுத்த இடத்தில் பைலை பத்திரமாக வைத்துவிட்டு, மறுநாளே இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்று விட்டாள்.
பாட்டியாலா மகாராஜா, 200 பக்கங்களையும் படித்து ஆராய்ந்தார். பைலில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு விவரமாக பதில் தயார் செய்தார். தன் அமைச்சரிடம் கொடுத்து நேரே இங்கிலாந்துக்கு அனுப்பி, சக்கரவர்த்தியை சந்தித்து, வெலிங்டனின் அடாவடிச் செயல்களை பற்றி விளக்கச் செய்தார். அதில், ஒரு முக்கியமான குற்றச்சாட்டும் இருந்தது...
வெலிங்டனும், அவர் மனைவியும் ஒரு முறை பாட்டியாலாவுக்கு வந்திருந்த போது, அரச குடும்பத்துக்குச் சொந்தமான ஆபரணங்களை அவர்கள் பார்வையிட்டதாகவும், 30 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள ஒரு நெக்லஸ் தனக்கு வேண்டும் என்று வெலிங்டன் சீமாட்டி கேட்டதாகவும், பாட்டியாலா மகாராஜா அதைக் கொடுக்க மறுத்ததால், பகைமூண்டு, பாட்டியாலா மகாராஜா, மீது கண்டபடி புகார் செய்து அவரை பதவியிலிருந்து ஒழிக்க, வைஸ்ராய் சதி செய்வதாகவும் அந்த குற்றச்சாட்டில் கூறியிருந்தார்.
இவ்விஷயம் எதுவும் வெலிங்டன் பிரபுவுக்கு தெரியாது. அதனால், தாம் தயாரித்து வைத்திருந்த பைலையும், குற்றச்சாட்டையும் சக்கரவர்த்திக்கு அனுப்பினார்.
பாட்டியாலா மகாராஜா தெரிவித்தது போலவே, அதில் குற்றச்சாட்டுகள் இருப்பதை கண்டார் சக்கரவர்த்தி. 'தூக்கிக் குப்பைத் தொட்டியில் எறியுங்கள்...' என்று சொல்லி விட்டார் பிரிட்டிஷ் பிரதம மந்திரி.
வெற்றி பெற்ற பூபீந்தர்சிங்கின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதற்குப் பின், அவர் வெலிங்டன் பிரபுவை கடுகளவும் பொருட்படுத்துவது கிடையாது. அவரிடமிருந்து வரும் விழா அழைப்புகளுக்கும் செல்வதில்லை.
ஒரு முறை வெலிங்டன் சீமாட்டி, ஒரு விருந்தில் மகாராஜாவை சந்தித்த போது, அவருடைய சமஸ்தானத்தில் உள்ள பிஞ்சோர் என்ற உல்லாச தலத்தில் சில நாட்கள் தங்க வேண்டுமென்று கேட்டார். 'அரச குடும்பத்தை தவிர யாரும் அங்கு தங்குவதற்கு அனுமதி கிடையாது...' என்று, 'பட்'டென்று சொல்லி, வெள்ளைக்காரியின் மூக்கை உடைத்தார் பூபீந்தர் சிங்!
வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு தானே!

