
பி.அஸ்வத்கந்தன், புதுச்சேரி: சந்தா செலுத்தி வரவழைக்கும் பத்திரிகைகள், குறிப்பிட்டது போல கிடைக்காததற்கு யார் காரணம்? பத்திரிகையா, தபால் துறையா? அஞ்சாமல் பதில் கூறவும்!
தொண்ணூறு சதவீதம் தபால் துறைதான்! அஞ்சல் மூலம் அனுப்பப்படும் சுவையான செய்திகள் அடங்கிய பத்திரிகைகள் என்றால், பெரும்பாலும் சந்தா செலுத்தியவருக்கு கிடைக்காது. சில சந்தர்ப்பங்களில், (அதாவது, 10 சதவீதம்) பத்திரிகை வெளியீட்டாளர்களின் தரப்பிலும் தவறு ஏற்படுவது உண்டு!
ஆர்.கலாதரன், கோட்டக்கரை: சின்னச் சின்ன கிராமங்களில் கூட, பொடியன்கள் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து விட்டனரே...
எப்போதும் சினிமா பற்றி பேசி, வெட்டியாக அலையாமல், உருப்படியாக உடற்பயிற்சியாவது செய்கின்றனரே என எண்ணி மகிழுங்கள்!
என்.பி.சேகர், அப்பைநாயக்கர்பட்டி: பலவீனனாக, எதையும் செய்யும் ஆற்றல் இல்லாதவனாக என்னை எப்போதும் உணர்கிறேனே...
இது உங்கள் தப்பல்ல, உங்கள் பெற்றோரின் தவறு! மன தைரியம் அளிக்காமல், பயம் காட்டியே குழந்தையை வளர்ப்பதால், இந்த எண்ணம் தோன்றி விடுகிறது. இளம் வயதிலேயே ஆக்கப்பூர்வமான, உறுதியான, உதவுகிற எண்ணத்தை, மனதில் விதைக்க வேண்டும். போகட்டும்... உங்களை பலவீனமாக்கும் எண்ணங்களுக்கு இனிமேலாவது மனதில் இடம் கொடாமல், 'என்னால் முடியும்' என்ற எண்ணத்தை இரவு, பகலாக உங்கள் மனதில் விதையுங்கள்; தன்னம்பிக்கை தானே வந்து விடும்!
ச.பெரியசாமி, தச்சம்பட்டு: வாசகர்கள் கேள்வி கேட்பதிலும், நீங்கள் பதில் சொல்வதிலும் உபயோகமான விஷயங்கள் கிடைக்குமா?
நமக்கு கிடைக்குமா தெரியாது. ஆனால், இங்கு ஆசிரியர் குழுவுக்கு சந்தோஷம்; ஒரு பக்கத்திற்கு தேவையான, 'மேட்டர்' எழுதும் வேலை குறைகிறதே!
எல்.சாரதா, சென்னை: ராணுவத்திற்கென பணத்தை தண்ணீராக செலவு செய்கிறதே அமெரிக்கா...
ஐ.நா., சபை அங்கீகரித்துள்ள உலக நாடுகள், 191; அவற்றில், 130 நாடுகளில், அமெரிக்க ராணுவம் ஏதேனும் ஒரு ரூபத்தில் இருக்கிறது. அத்துடன் உலக போலீஸ் வேலையையும் செய்கிறது. பெரியண்ணன் பதவியை தக்க வைத்துக் கொள்ள செலவு செய்து தானே ஆக வேண்டும்!
எஸ்.சூரியகாந்த், தேப்பிரம்பட்டு: பிறரை ஏமாற்றாமல் உண்மையான உழைப்பு இருந்தும், சேமிப்பு இயலாத நிலையில், அத்தியாவசியமான செலவுகள் வந்துவிடுகிறதே...
'இயலாது' என்பது தெரிந்து விட்டாலே, எல்லா சங்கடங்களும் சேர்ந்து விடும். தேவைகள் எதையாவது குறைத்துக் கொள்ளும் மனத் துணிவை வளர்த்துக் கொண்டால், சேமிப்பு கூடிவிடும். சேமிப்பு இல்லாத வாழ்க்கை என்றுமே, 'டென்ஷன்' நிறைந்ததாகத் தான் இருக்கும்!
வை.லினோராஜ், விருதுநகர்: இன்ஜினியர், வழக்கறிஞர், டாக்டர் இவர்களின் வருமானம் வெளியே தெரியாத நிலையில், வருமான வரியை எப்படி வசூல் செய்கின்றனர்?
இவர்களில், 75 சதவீதம் பேர் வரி கட்டினால், நம் வருமானம் எங்கோ போய்விடும். பட்ஜெட்டில், துண்டு, வேட்டி எல்லாம் விழாது. ஆனால், வரி கட்ட இவர்களிடம் மனமில்லையே... வரி கட்டும் கொஞ்சப் பேரும், ஆடிட்டரின் ஆலோசனையின்படி, ஒரிஜினல் வருமானத்தில், 25 சதவீதமே கணக்கு காட்டி, வரி கட்டுகின்றனர்!
எஸ்.வெங்கடராம் ராஜூ, திண்டிவனம்: தற்போதுள்ள வாழ்க்கைச் சூழ்நிலையில், பொறுமை, நிதானம், சத்தியம் இவற்றால் முன்னேற முடியும் என்று நம்புகிறீர்களா?
பொறுமை, நிதானம், சத்தியம் இவற்றோடு புத்திசாலித்தனமும் இணைந்து கொண்டால் முன்னேற முடியாது என்றா சொல்கிறீர்கள்? கம்ப்யூட்டர் கண்டுபிடித்த ஆசாமி முதல், நம்மூர் இளம் விஞ்ஞானிகள் வரை உதாரணம் எடுத்துப் பாருங்கள்!

