
'உலகில் எங்கெல்லாம் பார்லிமென்ட் உள்ளதோ, அங்கெல்லாம் ஹாஸ்யமும் உண்டு...' என, என்னைக் கண்டதும், படித்துக் கொண்டிருந்த பேப்பரை மடித்து வைத்தபடியே கூறினார் குப்பண்ணா. பின், அவர் இளைஞராக இருந்தபோது நடந்த, கேள்விப்பட்ட நிகழ்ச்சிகளை கூறத் துவங்கினார்...
'டாக்டர் சுப்பராயனுக்கு, இந்தி வெறியர்களைக் கண்டால் கட்டோடு பிடிக்காது. இந்தி மொழி பற்றுடைய டாக்டர் கோவிந்ததாசைப் பற்றி ஒரு முறை இவர், 'கோவிந்த தாசுக்கு வாழ்வில் இரண்டு லட்சியங்கள் இருக்கின்றன. ஒன்று, இந்தி; மற்றொன்று, பசுவதைத் தடுப்பு! என்றைக்கு அவர் பசுமாட்டை இந்தி பேச வைக்கிறாரோ அன்றைக்குத்தான் அவருடைய அபிலாஷைகள் நிறைவேறியதாகக் கொள்ளலாம்...' என்றார்.
'இது இப்படி இருக்க, இந்து - முஸ்லிம் ஒற்றுமை நடக்காத காரியம் என்று வாதாடினார் ஜின்னா. அப்போது அவர், 'மகாத்மா காந்திக்கு பசு தாய் மாதிரி; எனக்கு, பசு மாமிசம் மிகவும் பிடிக்கும். ஆகையால், நான் மாமிசம் சாப்பிடும்போது மகாத்மாவின் தாயாரை சாப்பிடுகிறேன், அல்லவா?' என்றார்.
'பார்லிமென்ட்டில் சோக ரசம்கூட, சமயத்தில் ஹாஸ்யமூட்டும் வகையில் அமைந்து விடும். அரியலூரில் நடந்த ரயில் விபத்தால் ஏற்பட்ட இறப்பை பற்றி தமிழ்நாட்டு அங்கத்தினர் வல்லத்தரசு, விளக்கியதுடன் நிற்கவில்லை. தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.
'முகத்தில் துண்டைப் போட்டுக் கொண்டதால் அவர் சபாநாயகரைப் பார்க்கவில்லை; சபாநாயகர் எவ்வளவு வற்புறுத்தியும் அவர் நிறுத்தவில்லை.
'நாகாலாந்தில் எப்படி கலகக்காரர்கள் கொட்டமடிக்கின்றனர் என்பதை விளக்க, ஒரு எம்.பி., நாகர் போல் நடிக்க ஆரம்பித்து விட்டார். 'நாகர்கள் வந்ததும் நாங்கள் ஓடுவோம்...' என்று சொல்லி, அவர் குறுக்கும், நெடுக்குமாக ஓட ஆரம்பித்து விட்டார். 'உறுப்பினர், தன் இடத்தை விட்டு நகரக் கூடாது...' என்ற சபாநாயகரின் எச்சரிக்கை, அவர் காதில் விழவில்லை. 'நாகர்கள் சுடுவர்; அப்போது நாங்கள் ஒளிந்து கொள்வோம்...' என்று சொல்லி, அந்த உறுப்பினர் மேஜைக்கும், தம் ஆசனத்துக்கும் இடையே உள்ள இடத்தில் உட்கார்ந்து விட்டார்.
'சில நிமிடங்களாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. சபாநாயகர் அவரை இருக்கையில் உட்கார வைப்பதற்குள் என்பாடு, உன்பாடு ஆகி விட்டது.
'சமயத்தில் உறுப்பினர்கள், சபாநாயகர் யாரை கூப்பிடுகிறார் என்று கவனிக்காமல் பேச முற்படுவர். பேச விரும்புபவர்கள் முன்கூட்டியே தங்கள் பெயரைக் கொறடாவிடம் கொடுக்க வேண்டும்.
'ஒரு சமயம், கோயம்புத்தூர் தொகுதி உறுப்பினர் கருத்திருமன் முறை வந்ததும், சபாநாயகர் அவர் பெயரைக் குறிப்பிட்டார். ஆனால், மற்றொரு உறுப்பினர் எழுந்து வெளுத்து வாங்கி விட்டார். அப்போது, கருத்திருமன் சபையில் இல்லை.
'அவர் உள்ளே வந்ததும், தாம் பெயர் கொடுத்திருப்பதை நினைவூட்டினார். 'நீங்கள் பேசியாகி விட்டதே...' என்றார் சபாநாயகர்.
'சபை நடவடிக்கைகளை சுருக்கெழுத்தில் எழுதுபவர்களும் கருத்திருமன் பேசியதாகவே எழுதியிருந்தனர்.
'காங்கிரஸ் உறுப்பினர்களில் ஒருவரான திவான்சந்த் சர்மா மிகவும் குள்ளமானவர். அவர் எழுந்து நின்றால்கூட, உட்கார்ந்திருப்பது போல் தோன்றும், ஒரு சமயம் சபாநாயகர் அனந்தசயனம், 'சர்மா எழுந்து நின்று கேள்விகள் கேட்க வேண்டும்...' என்றார்.
'சர்மா பரிதாபமாக, 'நான் இப்போது நின்று கொண்டு தான் இருக்கிறேன்...' என்றார்.
'இப்போது நடக்கும் ஹாஸ்யங்கள் தான் உனக்குத் தெரியுமே...' என, கூறி முடித்தார் குப்பண்ணா!
அன்று, செம குஷியில் இருந்தார் லென்ஸ் மாமா. காரணம் கேட்டால், சொல்லாமல் தமக்குத் தாமே சிரித்துக் கொண்டார்; அதுவும் வெட்கச் சிரிப்பாக இருந்தது.
பின்னர், அவரே பேச ஆரம்பித்தார்...
'நிலா வெளிச்சத்தில் காதலர்களுடன் கூடி மகிழும் காதலிகள், காதலரைப் பிரிந்து விட்டால், முதலில் திட்டுவது நிலவைத் தான் தெரியுமா...' என்றார்.
'தெரியாதே!' என்றேன்.
'காதலனை பிரிந்த நிலையில், வானத்தில் முழு நிலவு தோன்றி, பெண்களைப் படுத்தும் பாடு சொல்ல முடியாது. காதலனுடன் முந்தைய இரவு நேரங்களில் பேசி மகிழ்ந்தவை யாவும் நினைவுக்கு வந்து, பெண்களைக் கொடுமைப்படுத்தும்.
'நந்திக் கலம்பகத்தில், நந்தி வர்மன் மீது காதல் கொண்ட ஒரு பெண், நிலவை பார்த்து இப்படிச் சொல்கிறாள்...
பெண்ணில்லா ஊரில்
பிறந்தாரைப் போல வரும்
வெண்ணிலாவே இந்த
வேகம் உனக்காகாதே!
'சந்திரன், பெண் மக்கள் பிறக்காத ஊரில் பிறந்து, பெண் இனத்தின் உணர்ச்சியை அறியாதவன் போல் வருகிறானாம். இந்த இரண்டு அடிகளில், பிரிவாற்றாமையால் துயரடையும் பெண்களின் இதய உணர்ச்சிகளையெல்லாம் கவிஞர் கொட்டி விட்டார் பார்த்தாயா...' என்றவர், 'உமர் கய்யாமை தெரியுமா?' என்று கேட்டார்.
'நேரில் கண்டதில்லை...' என கிண்டலடித்தேன்.
'பாரசீக நாட்டு பெருங்கவிப்பா! இவரது முழுப் பெயர் கியாது டீன் அபுல்பாத் உமர். தம் பெயரோடு, 'கய்யாம்' என்பதை சேர்த்துக் கொண்டார். 'கய்யாம்' என்றால், 'கூடாரம் செய்பவன்' என்று அர்த்தம்.
'இவரோடு பள்ளியில் படித்த நண்பன், இளமையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, தான் ஒரு மாகாணத்தை ஆளும் உன்னத பதவிக்கு வந்ததும், உமர், கவலையின்றி வாழ, ஆண்டுதோறும் பெரும் தொகையை உமருக்கு கொடுத்து வந்தான்.
'உமர், கவியாக மட்டும் வாழவில்லை; கணிதத்திலும், ஜோதிடத்திலும் சிறந்த மேதையாக விளங்கினார். அது பற்றி பல நூல்களை எழுதினார். ஆனால், அவைகளால் அவர் உலகப்புகழ் பெறவில்லை.
'கணித, ஜோதிட ஆராய்ச்சிகளுக்கு நடுவே, நேரம் கிடைக்கும் போது இம்மை, மறுமை பற்றி ஆழ்ந்து சிந்தித்து, பல கவிதைகளை எழுதினார். இந்தக் கவிதைகளுக்கு, 'ரூபாயத்' என்று பெயர். ரூபாயத் என்றால், 'நான்கடி செய்யுள்' என்று பொருள்.
'இவரது பாடல்களில் சோக உணர்ச்சி இழையோடும்... 'மது, மாது, மதுரமான பாடல்... இவற்றைத் தவிர இன்பம் தருவது இவ்வுலகில் ஏதுமில்லை...' என்பது இவரது பாடல்களின் கருத்து.
'இவரது பாடல் ஒன்றுக்கு கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையின் மொழி பெயர்ப்பு இதோ:
வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையாந்தருமில் வனமின்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ!
'பாரதியார் கூட, 'காணி நிலம் வேண்டும்' பாடலில், 'பக்கத்திலே ஒரு பத்தினிப் பெண் வேண்டும்...' என்கிறார்!
லென்ஸ் மாமா தன், 'மாஜி' யாரையோ சந்தித்தோ, போனில் பேசிவிட்டோ வந்திருக்கிறார் என நினைத்த அதே நேரத்தில், 'சே... இந்த கவிஞர்கள் எல்லாம் சுத்த மோசம்...' என்றும் எண்ணிக் கொண்டேன்!
பிரிட்டனின் இவர் முதல் லேபர் கட்சிப் பிரதமர் மக்டொனால்ட். அடிக்கடி வெளிநாடுகளுக்கு விஜயம் செய்வதில் ஆர்வமுள்ளவர். எதிர்க்கட்சிகள் எவ்வளவோ கண்டனம் செய்தும், இவர் காதில் ஏறவில்லை.
ஒரு முறை, இவர், கனடா நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்துவிட்டு, இங்கிலாந்து திரும்பிய போது, 'டைம்ஸ்' பத்திரிகை, 'மக்டொனால்ட் இங்கிலாந்துக்கு விஜயம்...' என்று தலைப்பு செய்தி வெளியிட்டது.
இந்தத் தலைப்பு, பிரதம மந்திரியை தாக்கியது; அதிலிருந்து அவருடைய வெளிநாட்டுப் பயணங்கள் குறைந்தன!

