PUBLISHED ON : அக் 04, 2015

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 215 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —
நாம் மற்றும் கூண்டுக்கிளி படங்களின் தொடர் தோல்வியால் மனம் சோர்ந்திருந்த எம்.ஜி.ஆரை, செகண்ட் இன்னிங்க்ஸ் ஆட வைத்தது, குலேபகாவலி படம். காரணம், அதில் எம்.ஜி.ஆர்., நடித்திருந்த புலிச் சண்டைக் காட்சி!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை, புரிந்து கொண்டார் எம்.ஜி.ஆர்., கதாநாயகன் தம்மை விட ஆற்றல் படைத்த வில்லன்களுடனும், மிருகங்களுடனும் சண்டையிட்டு ஜெயிப்பதையே ரசிகர்கள் விரும்புகின்றனர். அதனால், நாம் மோதுகிற காளையும், காண்பவரை மலைக்கச் செய்யும் விதத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தவர், 'நல்ல காளையைப் பாருங்க; ஜனங்க சீட் நுனிக்கு வரணும்...' என்று கூறி, தேவரை உற்சாகப்படுத்தினார் எம்.ஜிஆர்.,
தேவரும், தன் உதவியாளர்கள் மூலம் தமிழகம் எங்கும் நல்ல முரட்டுக் காளையை தேடினார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடியான காளை மாடு எந்தச் சந்தையிலும் சிக்கவில்லை. 'போங்கப்பா... நீங்க ஒரு வேலைக்கும் லாயக்கில்ல; நானே தேடி புடிச்சுட்டு வரேன்...' என்று கூறி புறப்பட்டுச் சென்றார்.
பெரியகுளத்தில், மதில் போன்ற திமிலோடு அந்தக் காளை தேவருக்காக காத்திருந்தது. 'அண்ணே... இம்புட்டு நாளா காக்க வெச்சுட்டீங்களே...' என்று கூறுவது போல் சலங்கை மணிகளை ஆட்டியது. எம்.ஜி.ஆருடன் முட்டி மோதப் போகிறோம் என்ற ஆணவம் அதன் கண்களில்! 'ஜல்லிக்கட்டுகளில் அதை யாரும் வென்றதே கிடையாது' என்ற கூடுதல் தகவல், தேவரைக் குஷிப்படுத்தியது.
காளையைப் பார்த்தார் எம்.ஜி.ஆர்., 'உங்க செலக் ஷன் பிரமாதம்ண்ணே...' என்றார்.
இப்படத்தில், எம்.ஜி.ஆருக்காகவே சண்டைக் காட்சிகள் அதிகம் புகுத்தப்பட்டன. ஷூட்டிங் முடிய ஒரு ஷெட்யூல் மட்டுமே பாக்கி. மருதமலை முருகன் அருளால் படம் நல்லபடியாக தயாராகி விட்டதால், உற்சாகமானார் தேவர். காளைச் சண்டையை படம் பிடித்து விட்டால் வியாபாரம் முடிந்த மாதிரி. இதுகுறித்து, எம்.ஜி.ஆரிடம், 'அண்ணே... உங்க தேதிக்கு காத்துக்கிட்டு இருக்கேன். வாகினில, 'செட்' தயார். பெரிய மைதானம். வர்ற ஆடி அமாவாசை அன்னிக்கு வேலையை ஆரம்பிச்சா பரவாயில்லயா...' என்று கேட்டார் தேவர்.
'காளைக்கு நல்லா டிரெயினிங் கொடுத்தாச்சா?' என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.,
'நீங்க அச்சப்படற மாதிரி விட்டுடுவேனா...''
'பயமா, எனக்கா!'
'இல்லண்ணே ஒரு பேச்சுக்கு...' தேவருக்கு சட்டென்று மனதுக்குள், 'எம்.ஜி.ஆரின் உரையாடலும், நடவடிக்கையும் தட்டிக் கழிப்பதாக தெரிகிறதே...' என்று நினைத்தவர், அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். அம்முகத்தில் 'எனக்குப் பதில் சொல்லிட்டுப் போ...' என்ற பிடிவாதமும், மிரட்டலும் அப்படமாகத் தெரிந்தன.
'அண்ணே...'
'என் கால்ஷீட்டை இப்ப பெரியவரு தான் பாக்குறாரு; அதனால், இதுபற்றி, நீங்க சக்ரபாணி அண்ணனைக் கேளுங்க...' என்றார் எம்.ஜி.ஆர்.,
'தாய்க்குப் பின் தாரத்துல சக்ரபாணி கிடையாதே... நான் எதுக்கு அவருகிட்டப் பேசணும். டி.எஸ்.பாலையாவைத் தானே நடிக்க வெச்சேன்...' என்று சூடானார் தேவர்.
''புரிஞ்சுக்குங்க அண்ணே... எல்லா முதலாளிகளும், அண்ணன் கிட்டதான் பேசறாங்க. எனக்கு அவரு சொன்னா சரி... ஒரே குடும்பமா வாழுறோம்; பெரியவங்க வார்த்தையை மீற விரும்பல...' என்றார்.
அமைதியாக வெளியேறினார் தேவர். தன்னை சமாதானப்படுத்தியபடி, சக்ரபாணியை போய் பார்த்தார்.
''விஷயம் கேள்விப்பட்டிருப்பீங்களே... தம்பி சொந்தமா படம் ஆரம்பிக்கப் போறான்; அதனால, பணம் தேவைப்படுது. மொத்தமா செட்டில் பண்ணிடுங்க. முதல் கால்ஷீட்டை உங்களுக்கே ஒதுக்கிடுறேன்; தம்பி உங்க மேலே பிரியமா இருக்கான். உடனே முடிச்சுக் கொடுப்பான்...' என்றார் சக்ரபாணி.
தேவருக்கு பகீரென்றது. திடீரென்று பெரிய தொகை கேட்டால் எங்கே போவது, யாரைக் கேட்பது... கிளைமாக்ஸ் தயாராகாமல் எதை நம்பி பணம் தருவர்!
'சம்பளம் வேணும்ன்னு நேரடியாகவே எம்.ஜி.ஆர்., சொல்லியிருக்கலாமே... யாரோ மாதிரி விலக்கி விட்டாரே...' என, நிலை கொள்ளாமல் தவித்தார் தேவர். காளைக்குப் பதிலாக மைதானத்தை வலம் வந்தவர், 'இப்படியொரு இக்கட்டில் சிக்கிக் கொண்டோமே... அடேய் கந்தா... ஓடி வந்து நல்வழி காட்ட மாட்டாயா...' என்று புலம்பினார்.
'தம்பி... நீங்க தான் புரொடியூசரா... 'செட்' போட்டு ரொம்ப நாளா சும்மாக் கிடக்குது. நஷ்டம் ஆவாதா... யாரு கதாநாயகன் எம்.ஜி.ஆரா... என்ன சொல்றாரு? தயங்காமல் சொல்லுங்க...' என வாகினி அதிபர்களில் ஒருவரான சக்ரபாணி விசாரித்தார். எல்லாவற்றையும் சொன்னார் தேவர். 'எடுத்தவரை ஒரு புரொஜெக் ஷன் போடுங்க. பார்க்கலாம்; படம் நல்லா இருந்துச்சுன்னா நாங்களே வெளியிடுறோம்...' என்றார்.
நிம்மதி பெருமூச்சு விட்டார் தேவர்.
படத்தைப் பார்த்த நாகி ரெட்டியும், சக்ரபாணியும் அசந்து விட்டனர். 'படம் பிரமாதமாக வந்திருக்கு; கதாநாயகியாக பானுமதி, கண்ணாம்பா வேற அம்மா வேஷத்துல... தெலுங்குலயும், 'டப்' செஞ்சிடலாம் போலிருக்கே... உங்க ரேட்டை சொல்லுங்க. ஒத்து வருதான்னு பாப்போம்...' என்றார் சக்ரபாணி.
'அய்யா... மொதல்ல ஒரு லட்சம் ரூபாய் கொடுங்க; மீதியை அப்புறம் சொல்றேன்...' என, கை கூப்பி நின்றார் தேவர். மூச்சு முட்டியது; கண்கள் கலங்கின. ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் நேரம் கிடையாது. அடுத்த நிமிடம் எம்.ஜி.ஆர்., அண்ணன் சக்ரபாணி முன் நின்றார் தேவர்.
'பணம் கொண்டாந்திருக்கேன்; எவ்வளவு வேணும்ன்னாலும் எடுத்துக்குங்க. முதல்ல படம் முடியணும்...'என்றார்.
எம்.ஜி.ஆர்., காளையை அடக்கி, கை தட்டலை பெற்றார். தேவர் பிலிம்சின் முதல் தயாரிப்பே தேவருக்கு, சுளையாக, 30,000 ரூபாயை லாபமாக கொடுத்தது. சொந்த சினிமா முயற்சி வெற்றி பெறாவிட்டால், பிறந்த ஊருக்கே சென்று விடலாம் என்று முடிவு செய்திருந்தார் தேவர். ஆனால், அவரது, தாய்க்குப் பின் தாரம் அள்ளிய வசூலை, வேறு எந்தப் படமும் பெறவில்லை. தாய்க்குப் பின் தாரம் தெலுங்கில், 'டப்' செய்யப்பட்டு வெளியாகிய போது, கோபம் கொண்ட எம்.ஜி.ஆர்., 'யாரைக் கேட்டு படத்தை, 'டப்' செய்தீங்க... எனக்கு எப்படி இன்னொருவன் குரல் கொடுக்கலாம்...' என, விளக்கங்கள் கேட்டு, தேவர் பிலிம்சுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
அலறியடித்து வாகினியில் போய் நின்றார் தேவர். சக்ரபாணி சிநேகமாக சிரித்து, 'என்ன ஆச்சு?' என்று கேட்டார்.
'எம்.ஜி.ஆருக்கு நஷ்ட ஈடு வேணுமாம்...' என்றார்.
தேவரிடம் இருந்த வக்கீல் நோட்டிசை வாங்கி படித்து பார்த்தார் சக்ரபாணி. இத்தகவல் நாகிரெட்டிக்கும் போனது. 'பயப்படாதீங்க... அவர நாங்க பாத்துக்குறோம்...' என்று ஆறுதல் தந்தனர். பின், எம்.ஜி.ஆரிடம், 'நீங்கள் காளையை நிஜமாகவே அடக்கவில்லை. உங்களது, 'டூப்' தான் மோதி வெற்றி பெற்றார். ஆனால், அதற்கும் சேர்த்து ஊதியம் பெற்றுக் கொண்டீர்கள். உண்மையில், நீங்களே அக்கறையோடு மாட்டை வென்றிருந்தால், இன்னும் எங்களுக்கு வசூல் அதிகரித்திருக்கும். அதற்கான, நஷ்டத்தை உங்களிடம் இருந்தே பெற விரும்புகிறோம்...' என்று எம்.ஜி.ஆருக்கு பதிலடி கொடுத்தனர்.
அதன்பின், 'தன் அனுமதி பெற்றே, இனி தயாரிப்பாளர்கள், படத்தை வேறு மொழிக்கு, 'டப்'பிங் செய்ய வேண்டும்...' என்று முதலிலேயே எழுதி வாங்க ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர்.,
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
பா. தீனதயாளன்

