
மணமகளுடன், 'செல்பி' எடுக்கலாமா?
'கார்ப்பரேட்' நிறுவனத்தில் வேலை பார்க்கும் என் தோழிக்கு, சமீபத்தில், பிரபல ஓட்டலில் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை அமெரிக்காவில் வேலை பார்ப்பதால், அவரது நண்பர்கள் குறைவாகவே இருந்தனர். ஆனால், தோழி உள்ளூரிலேயே படித்து, மூன்று, நான்கு நிறுவனங்களில் வேலை பார்த்திருந்ததாலும், எல்லாருடனும் நட்பாக பழக கூடியவள் என்பதனாலும், பழைய, புதிய என, எல்லா நண்பர்களும் ஆஜர்!
வரவேற்பின் போது, மணமக்கள் மேடையில் இருக்க, தோழியின் அலுவலக நண்பர்களில் சிலர், அவள் அருகே சென்று, தோளைத் தொடுவதும், காதில் ரகசியமாய் கிசுகிசுப்பதுமாக, அட்டகாசம் செய்தனர். உச்சகட்டமாக, பரிசு கொடுக்க மேடையேறியவர்கள் அவளருகே நின்று, கன்னத்தோடு கன்னம் வைத்து, 'செல்பி' எடுத்துக் கொண்டதை கண்டு மாப்பிள்ளையும், அவரது வீட்டாரும் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதாபமாக விழித்தனர்.
இக்காலத்தில் ஆண் - பெண் நட்பு தவிர்க்க முடியாதது என்றாலும், பொது இடங்களில், அதிலும் மணமேடையில் வைத்தே தொட்டுப் பேசுவதையும், உரசிக்கொள்வதையும் எப்படி சகித்துக் கொள்வது! இரு குடும்பங்கள் பிணைக்கப்படும் திருமண நிகழ்வில், நட்பை பறைசாற்றுவதாக சொல்லி, குடும்பத்தினரின், வருங்கால நிம்மதிக்கு வேட்டு வைக்கலாமா? 'செல்பி' எடுத்துக்கொள்ள, எத்தனையோ அவகாசங்கள் இருக்க, மணமேடை தானா கிடைத்தது?
தோழியரின் திருமணத்துக்கு செல்லும் நண்பர்களும், நண்பர்களின் மணநிகழ்வுக்கு போகும் தோழியினரும், சூழ்நிலை அறிந்து நடந்து கொள்ள வேண்டும்.
— எஸ்.ரீனு, மாடம்பாக்கம்.
ரொம்ப அடக்கமான பொண்ணு!
என் உறவினரின் மகனுக்கு, திருமணம் நிச்சயம் செய்தனர். பையன் தங்கக் கம்பி; பெண் லட்சணமாகவும், அமைதியாகவும் இருந்ததால், மாப்பிள்ளைக்கு பெண்ணை மிகவும் பிடித்து விட்டது. மொபைல்போன் வாங்கிக் கொடுத்து, தினமும், போனில், 'கடலை' போட்டான். ஆனால், எங்கே வெளியே கூப்பிட்டாலும் வர மாட்டாள். 'இந்தக் காலத்திலும் இப்படி ஒரு பெண்ணா...' என வியந்தான். தன்னுடன் வேலை செய்யும் பெண்களின் அட்டகாசங்களை நினைத்து, தனக்கு மிகவும் அடக்கமான, அழகான மனைவி கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான்.
திருமணமும் முடிந்தது; அதன்பின், வீட்டில் இருக்கும் போதே, 'முன்பு பேசியது போல, போனில் பேசுங்க...' என டார்ச்சர் செய்வதும், 'ஆபிசுக்கு என்னையும் கூட்டிட்டு போங்க...' என, அட்டகாசம் செய்ததையும் பார்த்து, 'என்ன இப்படி இருக்கிறாள்...' என குழம்பிப் போனான்.
அதன் பின் தான் தெரிந்தது, பெண், சிறிது மனநிலை பாதிக்கப்பட்டு, 'ட்ரீட்மென்ட்'டில் இருக்கிறாள் என்பது! இதுபற்றி பெண் வீட்டாரிடம் கேட்ட போது, 'வேணும்ன்னா விவாகரத்து செய்துடுங்க; ஆனா, இவ்வளவு லட்சம் கொடுத்துடுங்க...' என்று மிரட்டுகின்றனர்.
அப்பெண் மீது, உண்மையாகவே பாசம் வைத்து விட்ட பையனோ, இப்போது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளான்.
இதேபோன்று, மற்றொரு சம்பவம்... எங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் பையனுக்கு, பெண் பார்த்து நிச்சயித்தனர் பெற்றோர்.
பையன் போனில் பெண்ணிடம் பேசும் போதெல்லாம், கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் வரும்.
'நமக்கு தான் நிச்சயமாகி விட்டதே... வா... தனியாக பேசலாம்...' என்று கூப்பிட்டாலும் வர மாட்டாள். 'பொண்ணு ரொம்ப அடக்கம் போலிருக்கு...' என நினைத்து மகிழ்ந்தான்; திருமணமும் முடிந்தது. முதல் இரவுக்கு ஒத்துக் கொள்ளாமல் முரண்டு பிடித்ததுடன், வீட்டில் அவள் செய்த அட்டகாசத்தை கண்ட பின்பே, மனநிலை பாதிக்கப்பட்டு, 'ட்ரீட்மென்ட்'டில் இருப்பவள் என்று தெரிந்தது.
மாப்பிள்ளை வீட்டார் சண்டை போட்டனர். உடனே, 'வரதட்சணை கொடுமை' என்று சொல்லி, கேஸ் கொடுத்து விட்டனர், பெண் வீட்டார். சட்டம், பெண்களுக்கு சாதகமாக இருப்பதால், மாப்பிள்ளை, தற்போது, வீட்டுக்கும், ஸ்டேஷனுக்கும் நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்.
இதேபோல் இரண்டு, மூன்று சம்பவங்கள் பார்த்து விட்டேன். கோளாறு உள்ள பெண்களை அழகாக உடுத்தி, அப்பாவி மாப்பிள்ளைகள் தலையில் கட்டி விடுகின்றனர். கேட்டால், 'உங்களால் முடிஞ்சதை பாருங்க...' என, 'டார்ச்சர்' கொடுக்கின்றனர். 'எங்க பெண்ணுக்கு பாதுகாப்பு வேண்டாமா...' என்கின்றனர்.
மாப்பிள்ளை வீட்டாரே... ஜாக்கிரதை! பெண் எடுக்கும் போது, நன்கு விசாரித்து, அதன்பின், முடிவெடுங்கள்!
— டி.ஜேனி சார்லட், சென்னை.
வீட்டுக்கும், நாட்டுக்கும்...
சமீபத்தில் என் நண்பர் ஒருவர், 'இரண்டு மாதத்துக்கு ஒருமுறை வரும் கரன்ட் பில்லைப் பார்த்தாலே தலை சுற்றுகிறது. வீட்டில் யாருக்கும் விழிப்புணர்வு இல்ல; இதே என் கம்பெனியில் பணி புரியும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியர், திறமையாக வேலை செய்து, குறைவாக செலவு வைக்கிறார். அவரது செயலை பாராட்டி, அவருக்கு நல்ல சம்பளமும், செலவு குறைவுக்கு ஏற்ப ஊக்கத் தொகையும் கொடுக்கிறேன்...' என்று புலம்பினார். அலுவலகத்தில் செய்யும் அதே வேலையை வீட்டிலும் செய்ய சொன்னேன்.
'பில் தொகையை எவ்வளவு மிச்சப் படுத்துகிறாயோ, அதை நீயே வைத்துக் கொள்...' என்று மனைவியிடம் சொல்லியிருக்கிறார் நண்பர். இப்போது பலன் கை மேல். பாதிக்கு பாதி கரன்ட் பில் குறைந்து விட்டதாம்.
வீட்டுக்கும், நாட்டுக்கும் ஒரே நேரத்தில் நல்லது செய்து விட்ட நண்பரை பாராட்டினேன்.
— பிரகாஷ், திருச்செங்கோடு.
இதுவும் சமூகசேவை தான்!
எங்கள் வீட்டிற்கு அருகில், சிலர் இணைந்து, 'பாரத மாதா குரூப்ஸ்' என்ற சமூக சேவை அமைப்பை ஆரம்பித்தனர். அப்போது சிலர், 'இவர்கள் சங்கம் அமைத்து, என்ன செய்ய போகின்றனர்...' என்று ஏளனமாக பேசினர். ஆனால், எல்லாரும் வியக்கும் வண்ணம் அவர்கள் ஒரு காரியத்தை செய்தனர்.
அந்த அமைப்பினர், வாரத்திற்கு ஒரு முறை, தெருவில் போவோர், வருவோர் துப்பும் எச்சிலை, மண் போட்டு மூடி விடுவர். அதுமட்டுமின்றி, எச்சில் துப்புவதனால் வரும் தீமைகளை, எடுத்து கூறுகின்றனர்.
இவர்களது செயலை பாராட்டி, இப்போது, நானும் அவர்களுடன் இணைந்து, சமூக சேவை செய்ய ஆரம்பித்துள்ளேன்.
— பிரேம், சென்னை.

