
எஸ்.சின்னராஜ், உத்தங்குடி: அரசு வேலை வேண்டும் என்று நினைத்தேன்; கிடைத்தது. ஆனால், நியாயமாக, விதிகளுக்கு உட்பட்டு நாணயமாக இருக்க விடாமல் செய்கின்றனரே சிலர்... வேலையை விட்டு விடலாமா?
காலில் முள் தைத்து விட்டதற்காக காலையா வெட்டிப் போடுகிறோம்... வேலையை துறக்கும் தப்பை மட்டும் செய்து விடாதீர்கள்! நியாயவாதிகளுக்கு ஆயுள் முழுக்க போராட்டம் தான்; போராட்டம் இல்லா வாழ்க்கை
சலிப்பு தட்டிவிடும்!
மு.மணிசங்கர், அம்மாபாளையம்: பத்து மாதங்களாக நான் பூஜித்து வந்த பெண், (இப்போது என் கண்களுக்கு பேய்) வேறொரு பையனை காதலிக்கும் செய்தி எனக்கு கிடைத்திருக்கிறது. நான் தாடி வளர்த்து, சாராயம் குடிக்கவா? உங்கள் யோசனைக்கு கட்டுப்படுகிறேன்...
உங்கள் கடிதப்படி நீங்கள் தான் பூஜித்து இருக்கிறீர்கள். அந்தப் பெண் இல்லை எனத் தெரிய வருகிறது. தவறு உங்கள் மீது தான்; தாடியும் வேண்டாம், சாராயமும் வேண்டாம். உங்களை நேசிக்கும் பெண்ணாகத் தேட ஆரம்பியுங்கள். அதற்கான எல்லாத் தகுதிகளையும் நீங்கள் அடைந்து விட்டீர்களா என்பதை சிந்தித்து கொண்டு!
ஆர்.சுப்பிரமணியம், மடிப்பாக்கம்: விதண்டாவாதம் பேசுவோரை திருத்துவது எப்படி?
நேரத்தையும், சக்தியையும் ஏன் வீணடிக்க விரும்புகிறீர்கள்? இப்படிப்பட்ட ஆசாமிகளை திருத்த முடியாது. இவர்களைப் பார்த்தாலே, 'அம்பேல்' ஆகிவிடுங்கள்!
எஸ்.அந்தோணிராஜ், திண்டுக்கல்: முகம் தெரியாத தங்களிடம் தம் ஆதங்கத்தை கடிதம் மூலமும், தொலைபேசி மூலமும் கூறும் பெண்கள் பற்றி...
சகோதர பாசம் தேடும் சகோதரிகள்! என் எழுத்தைப் படித்தே, மனதில் என்னை அவர்களின் அன்பு சகோதரனாக்கிக் கொண்ட பின், தயக்கம் என்ன இருக்க முடியும்?
வி.ஜெயராமன், மதுரை: வியாபார நஷ்டத்தால், இன்று வறுமைக் கோட்டில் நிற்கும் என்னை, என் பணக்காரக் குடும்பத்தார் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை; அவர்களிடம் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
'மதியாதார் வாசலை மிதியாதே...' என்ற கொன்றை வேந்தனை மனதில் கொள்ளுங்கள். பணம், இன்று இருக்கும், நாளை போகும்; நாளை மறுநாள் மீண்டும் வரும். மனிதனை மனிதனாக மதிக்கும் பண்பு தான் அவசியம்!
கே.எஸ்.பாலகிருஷ்ணன், மார்த்தாண்டம்: மேற்கத்திய நாடுகளில், 40 வயதில் தான் வாழவே ஆரம்பிக்கின்றனராமே... இந்த வயதில் நாம் பாதி முதுமையை அடைந்து விடுவது ஏன்?
இங்கே, 20 வயதிலேயே ஆணுக்கு திருமணத்தை முடிக்க துடிக்கின்றனரே... அவனுக்கு, 40 வயது ஆகும் போது, பேரன், பேத்தி பிறந்து விடுகின்றனர் அல்லது பெண்ணுக்கு வரதட்சணை தர முடியாமல் திண்டாட ஆரம்பித்து விடுகிறான். மனபாரம், அழுத்தம், கவலை, சோர்வு, சோகம் என, 40 வயதிலேயே கழண்டு போய் விடுகிறான். அங்கு, 40 வயது வரை, 'லிங்விங் டு கெதர்' - சேர்ந்து வாழ்வது மட்டும் தான்! ஆணும், பெண்ணும் அந்த வயது வரை எந்த தளைகளிலுமே சிக்கிக் கொள்வதில்லை; கவலை இல்லை. பிடிக்கவில்லை என்றால், பை பை... நம் கலாசாரத்துக்கு இதெல்லாம் ஒத்து வருமா?