
பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்து தரக்கோரி, வட்டாட்சியர் அலுவலகங்களில் கொடுக்கும் மனுக்கள், என்ன பாடு படுகிறது என்பதையும், அரசு அலுவலகங்களில் கொடுக்கும் மனுக்களின் நிலை குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, இதை எழுதி அனுப்புவதாகவும், இதை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுள்ளார், வருவாய்த் துறையில், பணிபுரிந்து, ஓய்வு பெற்ற, அந்துமணி வாசகர் ஒருவர்.
கடிதம் இதோ...
பொதுவாக, அரசு அலுவலகங்களில், பொது மக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்து தரக்கோரி கொடுக்கும் மனுக்கள் என்னவாயின என, தெரியாமல் காத்திருக்கும் நிலை உள்ளது. ஒரு சில மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், இவை மிக மிக குறைவான எண்ணிக்கையில் தான் உள்ளன. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்படும் மனுக்களின் எண்ணிக்கையோ கணக்கில் அடங்காது. எல்லா அரசு துறைகளிலும் இதே நிலை தான். எனினும், வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலகங்களில் கொடுக்கப்படும் மனுக்களின் கதி, அதோ கதி தான்.
அதே போன்று, தாலுக்கா அலுவலகங்களில் நேரிலும், அஞ்சல் மூலமாகவும் கொடுக்கப் படும் மனுக்களின் நிலையோ பரிதாபகரமானது. இவ்விதமான நிலை, மனுக்களுக்கு எவ்வாறு ஏற்படுகிறது என்பது, பலருக்கும் தெரிய வாய்ப்பிலலை. வழக்கமாக, தாலுக்கா அலுவலகங்களில் தாசில்தாரிடம் நேரில் கொடுக்கப்படும் மனுக்களை பெற்று, மனுதாரரை, வருவாய் ஆய்வாளரிடம் அனுப்பி நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, அனுப்பி விடுவர்.
பெரும்பாலான மனுக்களை தாசில்தார் படிப்பதே இல்லை. வெறுமனே மனுக்களில் சுருக்க ஒப்பமிட்டு, திருப்பி அனுப்புவார். தாசில்தார் பார்வையிட்டு வந்த மனுக்கள், பதிவறை எழுத்தரிடம் கொடுக்கப்படும். பதிவறை எழுத்தர், தபால் எண் கொடுத்து, வழங்கல் பதிவேட்டில் பதிவு செய்வார். மனுக்கள் எந்த எழுத்தர் (கிளார்க்) சம்பந்தப்பட்டதோ, அவரிடம் கொடுத்து, ஒப்புதல் பெற்றுக் கொள்வது வழக்கம்.
மனுக்களை பெற்றுக் கொண்ட எழுத்தர், தன் பதிவேட்டில், (தபால்களை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் பதிவேடு. இப்பதிவேடு எல்லா அரசு அலுவலகங்களிலும் பராமரிக்கப்பட்டு வரும்.) பதிவு செய்து, மனு, எந்த கிராமத்தில் வசிக்கும் நபரால் கொடுக்கப்பட்டதோ, அக்கிராமத்தின் வருவாய் ஆய்வாளருக்கு (ரெவின்யூ இன்ஸ்பெக்டர்) அனுப்பி வைப்பார். இவ்வாறு அனுப்பப்படும் மனுக்கள் தொடர் நடவடிக்கையில் இருக்கும்படியே அனுப்பப்பட வேண்டும்.
ஆனால், தாலுக்கா அலுவலகங்களில் பணி புரியும் எழுத்தரோ, மனுவை, வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பும் போது, அம்மனுவின் பின்புறத்தில்,
அ.தி.மு., (அசல் திருப்பு முடிவு) என எழுதி, தாசில்தார் கையொப்பம் பெற்று, மனுவை, வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பி வைப்பார். இவ்வாறு அனுப்பப்படும் மனுக்களின் நடவடிக்கை, தாலுக்கா அலுவலகத்தில், அத்துடன் முடிக்கப்பட்டு விடும்.
மனுவை கொடுத்தவர், 'மனு என்னவாயிற்று...' என்று தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று கேட்டால், 'வருவாய் ஆய்வாளரை போய்ப் பார்...' என்றும், 'மனு இங்கே பெண்டிங் (நிலுவையில்) இல்லை...' என்று கூறி, அனுப்பி விடுவர். பல சமயங்களில், தாசில்தார் அலுவலக, பியூனே, மனுதாரரை உள்ளே விடாமல், பதில் கூறி, அனுப்பி விடுவார். எல்லா மனுக்களும்,அ.தி.மு., என்று தாசில்தார் அலுவலகத்திலேயே முடிவு செய்து அனுப்பப்படுவதால், அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட வருவாய் ஆய்வாளர் (ரெவின்யு இன்ஸ்பெக்டர்) அல்லது கிராம நிர்வாக அலுவலர் மனுவை வாங்கி, மூலையில் தூக்கிப் போட்டு விடுவர்; இம்மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
மேலும், மனு குறித்து எவராவது விசாரிக்க வந்தால், 'அந்த மாதிரி தபாலே வரவில்லை...' என்றும், 'தாசில்தார் அலுவலகம் சென்று பார்...' என்று கூறி அனுப்பி விடுவர். மனுதாரர்கள் கொடுத்த மனு, பெறப்பட்ட அன்றே தாசில்தார் அலுவலகத்தில் முடிக்கப்பட்டு விட்ட நிலையில், அந்த உண்மை தெரியாத மனுதாரர்கள், தாசில்தார் அலுவலகத்திற்கும், வருவாய் அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கும், நடையாய் நடந்து கொண்டிருப்பர். இந்நிலை, இன்று வரை, மாறாத தொடர்கதையாக இருக்கிறது என்பது, வேதனையான, நெஞ்சை
நெருடும் விஷயம்.
- என்று முடித்துள்ளார்.
அரசு துறைகளில் இன்னும் எத்தனை எத்தனை, 'ரெட் டேப்பிச' பூதங்கள் உள்ளடங்கியுள்ளதோ!
முத்துராமலிங்கத் தேவர் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. தெய்வ பக்தி மிகுந்தவர்; அவரது சமகாலத்து அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு, சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.
சிவகங்கை மன்னர் சண்முகராஜாவின் மகன் கார்த்திகேய வெங்கடாஜலபதி ராஜாவின் காதணி விழாவில் கலந்து கொண்டு பேசினார் தேவர். அவரது அந்தப் பேச்சு, எந்தத் தொகுப்பிலும் இதுவரை வெளிவரவில்லை. எதிர்பாராத விதமாக என்னிடம் சிக்கியது அந்த தொகுப்பு. பேச்சில் இருந்து ஒரு பகுதி...
காது குத்தல் கல்யாணம் என்ற வைபவம் தமிழன் மட்டுமே தெய்வ வழிபாடாகக் கொண்டாடும் ஒரு விழா. சிவகங்கை அரண்மனையில் கோலாகலமாக நடத்தப்பட வேண்டிய இந்த வைபவம், தென்னவராயன் புதுக்கோட்டை கிராமத்தில், பொட்டலில் அமைந்திருக்கும் அய்யனார் கோவிலில் ஏன் நடக்கிறது?
தமிழன், இறை பக்தி மிகுந்தவன். தனக்கு குழந்தை பிறந்தவுடன் மட்டற்ற மகிழ்ச்சியடைந்து, தன் குழந்தையின் முகமண்டலத்தைப் பார்க்கிறான்; மூக்கை பார்க்கிறான்; அழகான வாயைப் பார்க்கிறான்.
அதே சமயம், குழந்தையின் காதைப் பார்க்கிறான்; அதன் வடிவத்தைப் பார்க்கிறான். தனக்கு இந்த குழந்தை பாக்கியத்தை அளித்த இறைவனின் ஓங்கார வடிவமாக காது அமைந்திருப்பதை எண்ணி மகிழ்கிறான்.
ஓங்கார வடிவமாக அமைந்துள்ள ஆண்டவனுக்கு நன்றி செலுத்த எண்ணி, தன் குழந்தைக்கு, முதன் முதலாக கொண்டாடும் வைபவத்தை, காது குத்து கல்யாணமாக நடத்தி, ஓங்கார வடிவத்திற்கு நிரந்தர காணிக்கையாக, தங்கத்தாலான ஒரு ஆபரணத்தை காதில் அணிவித்து, அதையே ஒரு விழாவாக நடத்துகிறான்.
கடவுள் நாத வடிவம்; அந்த நாதத்தை அறிவது காது தான். காதின் வழியாகத்தான் ஆதிகாலத்தில் மனிதன் ஞானம் பெற்றான். அதை உணர்ந்து, காதணி வைபவத்தை இறைவனுக்குச் செய்யும் தொண்டாக எண்ணினான் தமிழன்.
வினாயகரை வணங்கும் போது, 'துங்கக் கரிமுகத்துத் தூமணியே, நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா...' என்று வணங்குகிறான். பிள்ளையாரை ஞானக் கடவுளாக உணர்ந்து, தான் வணங்கும்போது, இரு காதுகளையும் இழுத்து வணங்கி, தலையில் குட்டிக் கொள்கிறான்... ஏன்?
பழங்காலத் தமிழன், உடற்கூறு சாத்திரத்தை நன்குணர்ந்தவன். காதின் வழியாகச் செல்லும் சிறு நரம்புகள் இயங்கித்தான், தலையில் இருக்கும் மூளைக்கு ஞானம் செல்கிறது என்பதை உணர்ந்திருந்தான்.
ஆசிரியரிடம் படிக்க, குழந்தையை சேர்க்கும் தாய், 'ஐயா, நல்லா காதை திருகி, தலையில் குட்டி சொல்லிக் குடுங்க...' என்பாள். ஏன் காதை திருகி, தலையில் குட்டச் சொல்ல வேண்டும்?
காதிற்கு சுறுசுறுப்பு ஏற்படுத்தி, தூங்கும் மூளையை எழுப்பி விடத்தான் காதை முறுக்கி, தலையில் குட்டச் சொல்கின்றனர். மூக்கைத் திருகவோ, கையை முறுக்கவோ சொல்வதில்லை!
— இப்போதெல்லாம் பள்ளியில், வாத்தியார் மாணவன் காதை திருகி, தலையில் குட்டினால், பெற்றோர் கச்சை கட்டி, சண்டைக் கோழியாக அல்லவா மாறி விடுகின்றனர்.