
ஐ.சுப்பிரமணியன், வத்தலக்குண்டு: தற்கால சினிமாவை நினைத்தால், வெறுப்பாக உள்ளதே...
வெறுப்பினால் சினிமா பார்ப்பதை தவிர்த்தால், சினிமா தியேட்டரில், 200, 300 பேருடன் சேர்ந்து அமர்ந்து படம் பார்ப்பதால் வரும் தொற்று நோயிலிருந்து தப்புகிறீர்கள். அத்துடன், பர்ஸ் கரைவதிலிருந்து மீள்வதுடன், பொன்னான நேரத்தை வீணடிப்பதில் இருந்து தற்காத்துக் கொள்கிறீர்கள்.
— இப்படி ஒரு உணர்வு தோன்றியது குறித்து சந்தோஷம் அடையுங்கள்!
பி.சாலினிபிரியா, பழனி: எப்போதும் எங்கேயும் என் மனம் அமைதியாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன். இதற்கு என்ன செய்ய வேண்டும்?
எந்த நேரமும், எந்த நிமிடமும், எதற்கும் தயார் என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்; எதை நினைத்தும் எப்போதும் அச்சப்படாதீர்கள்... இந்த நிலையை எட்டி விட்டால், மன சஞ்சலம் ஓடிப் போகும்!
சூ.லிங்கன்மணி, அருப்புக்கோட்டை: குற்றங்களையும், வன்முறைகளையும் தடுக்கும் திறமை, நம் காவல் துறையினரிடம் குறைந்து விட்டதா?
குறையவில்லை; ஆனால், விட்டமின், 'பா' அது தாங்க... காந்தி பட நோட்டு, திறமையை அடக்கி வாசிக்க வைத்துள்ளது!
சா.மோகன்குமார், காஞ்சிபுரம்: கடன் கொடுத்து விட்டு, தாறுமாறாகப் பேசி தன்மானத்தை சீண்டுகின்றனரே...
தன்மானம் இருப்பவன் கடன் வாங்க மாட்டான்; வாங்கிய கடனை சொன்ன தவணையில் திருப்பிக் கொடுத்தால், ஏன் சீண்ட போகின்றனர்... கடன்னு வாங்கிட்டா, எல்லா உணர்வுகளையும் மூட்டை கட்டி வச்சிட வேண்டியது தான்!
ப.சங்கரநாராயணன், சென்னை: பெண்களுக்கு அளவுக்கு அதிகமான சுதந்திர மனப்பான்மை வளர்ந்து விட்டதால், விவாகரத்துகள் பெருகி வருகிறதா?
இல்லை. சம அந்தஸ்து தரவில்லை என்றாலும், 'அட்லீஸ்ட்' ஒரு உயிரினமாகவாவது மதிக்க வேண்டும் தம் கணவர் என, நினைக்க துவங்கி விட்டனர். இது குற்றமா?
மு.வெங்கடராம்ராஜு, திண்டிவனம்: ஆண்களுக்கு காதல் எப்போது கசக்கிறது?
பழத்தை புசித்த பின்! திருமணமாகும் வரை, ஆண்களின், 'பிசிக்கல் டச்' பட, இளம்பெண்கள் அனுமதிக்கவே கூடாது!
க.தேவராஜா, உடுமலைப்பேட்டை: மதிப்பிடவே முடியாத விஷயம் ஒன்று உலகில் உண்டா?
உண்டே! அரசியலில் ஒருவருக்கு இருக்கும் அந்தஸ்தை மதிப்பிடவே முடியாது. சமீபத்தில் ஒரு திருமண விழாவில், எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில் இருந்த ஒரு முன்னாள் மாண்புமிகுவை பார்த்தேன்; பரிதாபமாக இருந்தார். அப்போது நினைவில் நிழலாடியது... ஒரு காலத்தில் இவர் போட்ட ஆட்டம்!
ப.முத்தரசன், விருதுநகர்: பரீட்சை வைத்து விட்டல்லவா பாடம் நடத்துகிறது அனுபவம்...
ஏற்கனவே, பாடம் படித்த, 'பெரிசு'களின் சொல் கேட்டால், பரீட்சையில் பெயிலாகாமல் இருக்கலாம். ஆனால், இந்தக் கால இளசுகள், 'இதோ ஆரம்பிச்சுட்டுதுப்பா...' என, பெரியவர்கள் வாயை திறந்தாலே சலித்து, இடத்தைக் காலி செய்கின்றனரே!