sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : நவ 08, 2015

Google News

PUBLISHED ON : நவ 08, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ரஷ்ய நாட்டை கேலியாக, 'ரஷ்யக் கரடி' என்று குறிப்பிடுகின்றனரே... ஏன்?' என்று கேட்டேன் குப்பண்ணாவிடம்!

'ரஷ்யாவுக்கும், கரடிக்கும் என்ன சம்பந்தம்... அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு என்பதால், அமெரிக்கக் கழுகு என்கிறோம்.

'ஆதி காலத்திலிருந்தே, இங்கிலாந்தின் அரசு சின்னங்களில் சிங்கம் தான் இடம் பெற்றிருந்தது. அதனால், பிரிட்டிஷ் சிங்கம் என்கிறோம்...' என்ற குப்பண்ணா, 'ஜங்கிள் புக்' கதையை எழுதிய, ரூட்யாட் கிப்ளிங்கை தெரியுமா?' என்று கேட்டார்.

விழித்தேன்...

'பள்ளிக் கூடத்திலே படித்தபோது, 'நான்டீடெயில்'டாக அவர் எழுதிய கதையை வைத்திருந்தனர். ஓணாயோடு ஓணாயாக வளருவானே... மவுக்ளி அகேலா என்று ஒரு பையன்...' என புரிய வைத்தவர், தொடர்ந்தார்...

'கதை கிடக்கட்டும்... அந்தக் காலத்தில ரஷ்யா மிகவும் பின் தங்கியிருந்தது. மிகப்பெரிய தேசமானாலும், மக்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருந்தனர். எப்போது, என்ன செய்வர் என்று ஊகிக்க முடியாதபடி இருந்த அரசின் யதேச்சதிகாரத்தை குறிப்பிடும் விதமாக, 'மனிதன் போல் நடக்கும் கரடி' என்று எழுதினான் கிப்ளிங். சோவியத் வருவதற்கு முன் சூட்டிய பெயர்; இப்போதும் அப்படியே நிலைத்து விட்டது...' என்று விளக்கினார் குப்பண்ணா.

'நான் கழுதையான போது...' என்ற நூல் ஒன்றை சமீபத்தில் (ரயில் பயணத்தில் தான்!) படிக்க நேர்ந்தது. எழுதியவர் வலம்புரி ஜான்; புத்தகத்திலிருந்து: நான், பத்திரிகை தொழிலுக்கு வந்து, 18 ஆண்டுகள் ஆகின்றன. என் முதல் வேலையே, 'தினமலர்' திருச்சி பதிப்பில் துணை ஆசிரியர் வேலை. மாதம், 1,000 ரூபாய் சம்பளம்; இரவு வேலை.

என் பேராசிரியர் வளனரசுவின் சிபாரிசு கடிதத்தோடும், அவர் தந்த, 50 ரூபாய் பணத்தோடும், 'தினமலர்' நிறுவனர் ராமசுப்பையரை சந்தித்தேன்.

அன்று, மார்ட்டின் லூதர்கிங் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி, 'டைம்' பத்திரிகையில் கட்டுரை வெளிவந்திருந்தது. அதை மொழி பெயர்க்குமாறு கூறி, என்னை சோதித்தார் ராமசுப்பையர்.

அக்கட்டுரையில், 'ஜீனியஸ்' என்று ஒரு வார்த்தை வந்திருந்தது. அதை, 'மேதை' என்று மொழி பெயர்த்திருந்தேன்.

அதைப் பார்த்த ராமசுப்பையர், 'ஜீனியஸ் என்றால், மேதை என்று எப்படி வரும்... கற்றுத் துறை போகியவர் என்றல்லவா வரும்...' என்று கேட்டார்.

நான், பேராசிரியர் வளனரசுவின் மாணவன் என்பதாலேயே அப்படிக் கேட்டார் என்பது புரிந்தது.

'சாதாரண மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காகவே, 'மேதை' என்ற சொல்லை எழுதினேன்...' என்று சொன்னேன்.

அவர் சிரித்துக் கொண்டார்; மறுநாளே வேலை கிடைத்தது.

திருச்சி தினமலர் நாளிதழில் வேலைக்கு சேர்ந்த ஒரே மாதத்தில், புலவர் இருதயராசுக்கு பிழை திருத்துபவராக வேலை வாங்கித் தந்தேன். இவர், இலக்கணத்தில் மிகுந்த கவனம் செலுத்துபவர். அதனால், 'ற்' வருகிற இடத்தில், 'ல்' வந்திருக்கிறது என்று, ஓடிக் கொண்டிருந்த மூன்றாவது பதிப்பை இடையில் நிறுத்தி விட்டார். விடிந்ததும் எனக்கும், அவருக்கும் போயிற்று வேலை!

— இப்படியே பல சுவையான அனுபவங்களைக் கொண்டுள்ளது புத்தகம்!

வீறிட்டு அலறிக் கொண்டிருந்தது குப்பண்ணாவின் பக்கத்து வீட்டுக் குழந்தை. அது, எங்கள் பேச்சுக்கு இடையூறாக இருந்தது. 'அந்தக் குழந்தை மகா முரடு; ஒன்றுமில்லாததற்கெல்லாம் இப்படித்தான் கத்தும்...' என்று சமாதானம் சொன்னார் குப்பண்ணா.

'அதற்காக இப்படியா கத்த விடுவாங்க... பெத்தவங்களுக்கு குழந்தைய அடக்கத் தெரிய வேணாம்... புரொபசர் கூவே சொன்ன வழியை, அந்த வீட்டம்மாளிடம் சொல்லுங்க...' என்றேன்.

'அது யார் கூவே?'

'பெரிய மனோதத்துவ நிபுணர். குழந்தையை வழிக்குக் கொண்டு வர ஒரு வழி சொல்லியிருக்கார். ராத்திரியில குழந்தை தூங்கியதும், அதன் பக்கத்தில் உட்கார்ந்து, 'நீ நல்லவனா இருக்கணும்; சமர்த்தாய் படிக்கணும்; பிடிவாதம் பிடிக்கக் கூடாது...' என்று அதனிடம் என்னென்ன குறைகள் உண்டோ, அதையெல்லாம் நீக்கிக் கொள்ளும்படி, மெதுவாக, அதன் காதில் சொல்லி, ஓசைப்படாமல் வந்துடணுமாம். குழந்தையை எழுப்பி விடாமல் அப்படி சொல்லி வந்தால், அதன் உள்மனதில் நம் உபதேசம் பதிந்து, நாளா வட்டத்தில் குழந்தை திருந்தி விடுமாம்...' என்றேன்.

'அவருடைய குழந்தை எப்படி வளர்ந்ததென்று தெரிந்தால் சுவாரஸ்யமாயிருக்கும்...' என்றார் குப்பண்ணா.

'உடம்பை எப்படி காப்பது, உள்ளத்தை எப்படி வளர்ப்பது, பணத்தை எப்படிப் பெருக்குவது என்றெல்லாம் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வந்து கொண்டிருக்கின்றன.

'லட்சாதிபதியாவது எப்படி, கோடீஸ்வரனாவது எப்படி என்று புத்தகம் எழுதுபவர்கள், அந்த ரகசியத்தின் மூலம் கோடீஸ்வரனாகாமல் எதற்காக பிறத்தியாருக்கு புத்தகம் எழுதிக் கொடுக்கின்றனர்...' என்றேன்.

'நீ அப்படி ஒரேயடியாகப் பேசக் கூடாது...' என்றார் குப்பண்ணா.

'அப்படி வாருங்கள் வழிக்கு! கற்பிக்கிறவர்கள் வகை வேற; கற்றுக் கொள்கிறவர்கள் வகை வேற! மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதிலும், அதன் மூலம் மற்றவர்கள் பயனடைவதைப் பார்த்து சந்தோஷப்படுவதும் தான் கற்பிக்கிறவர்கள் வாழ்க்கை. அதையும், இதையும் கலக்கக்கூடாது. பெண்களுக்கு நடனம் சொல்லிக் கொடுக்கும் நட்டுவனாரே ஆடினால், யார் ரசிப்பர்!' என விளங்க வைத்தேன் குப்பண்ணாவுக்கு!






      Dinamalar
      Follow us