
தி.குணசேகரன், வீரபாண்டி: நம்மை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் கம்ப்யூட்டர்கள் ஒரு புறம், மறுபக்கம், நடிகர்களின் பிறந்த நாளுக்கு தோரணம் கட்டி, பாலாபிஷேகம் செய்யும் சினிமா ரசிகர்கள்; நாம் எதை நோக்கி போகிறோம்?
பாலாபிஷேக கோஷ்டிகள் சிறியவை தான்; அவை, அதே நிலையிலேயே நிற்க, நாமும், நாடும் முன்னேற்ற பாதையில் தான் செல்கிறோம். அதேநேரம், பாலாபிஷேக, தோரண கோஷ்டிகளுக்காக வருந்தவும் செய்வோம்!
ஜி.ராதாகிருஷ்ணன், கோவை: முன் கோபத்தால் பல நண்பர்களை பகைத்துக் கொண்டேன்; கோபம் கொள்ளக் கூடாது என்று நினைக்கிறேன். ஆனால், என்னையும் மீறி கோபப்பட்டு பின் வருத்தப்படுகிறேன். பகைத்த நண்பர்களுடன் மீண்டும் நட்பை புதுப்பித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். என்ன செய்வது?
தவறை உணர்ந்ததே பெரிய வெற்றி தான். உங்களை, நீங்களே ஆராய்ந்து எடை போட கற்றுக் கொள்ளுங்கள். இது, சற்றே சிரமம் தான்; ஆனாலும், முயற்சி செய்தால், பழகி விடலாம். பின்னர், கோபம் பறந்து சென்ற இடத்தைத் தேட வேண்டி வரும். 'ஈகோ'வை காலில் போட்டு நசுக்கி விட்டு, பகைத்துக் கொண்ட நண்பர்களிடம், 'ஓபன் அப்பாலஜி' கேளுங்கள்; நிச்சயம் ஏற்றுக் கொள்வர்!
எஸ்.ஜீவா, விருத்தாசலம்: எவ்வளவு தான் உதவி செய்தாலும் முதுகுக்கு பின் பேசுகின்றனரே...
மனித இயல்பு இது: உதவி செய்த மகிழ்ச்சியை மட்டுமே மனதில் கொள்ளுங்கள்; முதுகுக்கு பின் பேசுவதை சட்டை செய்யாதீர்கள்!
கே.அமுதன், நசரத்பேட்டை: திறமைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டால், இந்தியா, இன்று உலகில் சிறந்த நாடாக இருக்குமல்லவா?
தொழில் துறையைப் பொறுத்த வரை, நம் அரசின், 'சிவப்பு நாடா' சண்டித்தனத்தை ஒழித்தால், ஜப்பானை மிஞ்சி விடுவோம். சிவப்பு நாடாக்கள் தடுத்தாலும், 'விட்டமின் ப' உள்ளவர்கள் சுலபமாக காரியம் சாதித்து, தொழில் துறையில் முன்னேற முடிகிறது!
எஸ். கணேசமூர்த்தி, பழைய பல்லாவரம்: ஓரளவு நகைச்சுவை உணர்வுடன், தினசரி வாழ்க்கையின் பிரச்னைகளை அணுக கற்றுக் கொண்டால், கணவன் - மனைவி இடையே பிணக்கு குறையுமல்லவா?
முழுமையாகவே பிரச்னை தீர்ந்து விடும்; மண வாழ்க்கையின் அடிப்படை தத்துவத்தை சிம்பிளாக கூறி விட்டீர்கள்!
கே.சுந்தரேசன், மதுரை: தன்னை பற்றி எப்போதும் பெருமை பேசுபவர்களைப் பற்றி...
இப்படிப்பட்ட ஆசாமிகளை நெருங்கி ஆராய்ந்தால், அவர்களது தாழ்வு மனப்பான்மை நன்கு புலப்படும். தங்களது தாழ்வு மனப்பான்மையை மறைக்க பெருமை பேசிக் கொள்வர். இவர்களது பேச்சில் பாதிக்கு மேல் உண்மை இருக்காது. இதுபோன்ற, 'கேரக்டர்'களை இன்று முதல் உற்று கவனித்து, ஆராயுங்கள்; உண்மை புலப்படும்.

