
கடமையை முடித்துவிட வேண்டும் என்ற வேகத்தில், அறியாப் பருவத்தில், தம் பெண்களுக்கு திருமணம் செய்து கொடுத்து விடுகின்றனர், சில பெற்றோர். மண வாழ்வைப் பற்றியோ, இல்லற உறவைப் பற்றியோ ஒன்றுமே தெரிந்திருக்க வாய்ப்பில்லாத அவ்விளம்பெண்கள், பின், அனுபவிக்கும் துன்பங்கள் அளவிட முடியாமல் போய் விடுகிறது.
திருவண்ணாமலை மாவட்ட வாசகி ஒருவர் எழுதிய கடிதம்: என் பெற்றோருக்கு நான் ஐந்தாவது பெண். படிக்கும் போதே, படிப்பை பாதியில் நிறுத்தி, 15 வயதில் திருமணம் செய்து வைத்து விட்டனர். திருமணம் முடிந்து, 18வது வயதில் தான் எனக்கு உலகமே புரிய ஆரம்பித்தது; நான் ஒரு காட்டு மிராண்டி கும்பலுக்கு மருமகளாக வந்ததும் புரிந்தது. என் மாமனார், பொம்பளை பொறுக்கி; பெண்மையை கேவலமாக நினைப்பவன். இவ்வளவு நாள், கூட்டுக் குடும்பமாக இருந்து, இப்போது தனி குடும்பமாக பிரிந்தும், பிரச்னை தொடர்ந்தபடிதான் இருக்கிறது.
ஒரு பக்கம், மாமனாருடைய உறவினரின் கேவலமான பேச்சு; மறுபுறம் எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் கணவர். தாய் வீட்டிற்கு சென்று வந்தால்கூட சந்தேகம். கற்பு என்ன கையிலா இருக்கிறது, தொலைத்துவிட! மனதில் அல்லவா இருக்கிறது. 17 வருட மண வாழ்க்கையில், மனைவியை புரிந்து கொள்ளாத, மனைவியும் ஒரு மனிதப் பிறவி, அவளுக்கும் விருப்பு, வெறுப்பு உண்டு என்று எண்ணிப் பார்க்காத கணவருடன், எப்படி காலம் தள்ளுவது என்று புரியாமல் தவிக்கிறேன்.
இப்படிப்பட்ட கணவரிடம் இருந்து பிரிந்து, ஆறு மாதம் சுதந்திரமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று, மனம் கற்பனை செய்கிறது. அப்படி ஒரு சூழ்நிலை அமைந்தால், கடவுளுக்கு நன்றி சொல்வேன்.
என்னுடைய இத்தகைய நிலைக்கு காரணம், என் பெற்றோர். திருமண வயது, 18 என்று சட்டம் கூறுகிறது. அதையும் மீறி உலகமே தெரியாத வயதில், திருமணம் செய்து வைத்து விட்டனர். 'மண வாழ்க்கை சரியாக அமையவில்லை...' என்று பெற்றோரிடம் முறையிட்டால், 'எங்கள் கடமையைத் தான் செய்தோம். இது, உன் தலைவிதி...' என்று பூசி மொழுகுகின்றனர்.
'காலம், எழுந்து நில் என்று சொல்லும் போது, உட்கார்ந்திருந்தால், பின்னர் படுக்க வேண்டியதாகி விடும்' என்ற பழமொழி, என் வாழ்க்கையில் உண்மையாகி விட்டது. 15வது வயதில், என் பெற்றோரை எதிர்த்து, மேற்கொண்டு படித்து இருந்தால், இப்படி ஒரு நிலைமை எனக்கு வந்து இருக்காதே என நினைத்து வேதனைப்படுகிறேன்.
ஒரு பெண்ணுக்கு, 18 - 20 வயதில் தான் உலகமே புரிகிறது. அதன்பின், அவளுக்கு எதில் விருப்பமோ, அதன்படி அவள் வாழ்க்கையை அமைத்து கொடுக்கலாம். இதைவிட்டு, குடும்ப மானம், படித்தால் திமிர் வந்துவிடும், கற்பை தொலைத்து விடுவாள், என்று பெண்மைக்கு கட்டுப் போட்டு விடுவதால், உலகம் புரிவதற்குள் குழந்தை பிறந்து விடுகிறது. பின், குழந்தைகளுக்காக தன்னம்பிக்கை, மானம், சுயகவுரவத்தை எல்லாம் விட்டுக் கொடுத்து, இயந்திர வாழ்க்கை வாழ வேண்டி உள்ளது. அப்படியே வாழ்ந்தாலும் சில சமயம் மனம்விட்டு போகிறது. எங்கு திரும்பினாலும் இடிக்கிறது...
- இப்படியே, அவரது மனம் நொந்த கடிதம் தொடர்கிறது.
குறைந்த அளவே படித்திருந்தாலும், இவரது எழுத்தில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. ஒரு எழுத்தாளராகக் கூட, இவரால் மலர்ந்திருக்க முடியும், இன்று...
பெற்றோரே சிந்தியுங்கள்!
மக்கள் தொகையை கட்டுப்படுத்த இங்கே, நாம் படாதபாடு படுகிறோம்; ஆனால், மக்கள் தொகையை அதிகப்படுத்த பெருமுயற்சி எடுத்து வருகிறது ஆஸ்திரேலிய அரசு.
நிலப்பரப்பில், நம்மை விட, பல மடங்கு பெரிய நாடு ஆஸ்திரேலியா. இந்தியா, 32 லட்சத்து, 80 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது; ஆஸ்திரேலியா, 76 லட்சத்து 92 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது.
நம் ஜனத்தொகை, 121 கோடி; ஆஸ்திரேலியாவிலோ, 23 கோடி தான். ஆஸ்திரேலிய ஆண்கள் பலர், என்ன காரணத்தாலோ குழந்தை கொடுக்கும் ஆற்றலை இழந்து வருகின்றனர். எனவே, ஆஸ்திரேலிய நாட்டின் பல நகரங்களில், 'விந்து வங்கிகள்' வேகமாக திறக்கப்பட்டு வருகின்றன.
ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்று, இவ்வித, 'விந்து வங்கிகள்' பற்றி விரிவாகக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. உ.ஆ., ஒருவரின் உதவியுடன் படித்த போது, 'பெர்டிலிட்டி சொசைட்டி ஆப் ஆஸ்திரேலியா' என்ற அமைப்பின் முக்கிய உறுப்பினர், டாக்டர் ஜான் மக் பெயின். நாட்டில் உள்ள, 'தகுதி' படைத்த, 'டொனர்'கள் - தானம் செய்பவர்களுக்கு, உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்:
உங்கள் நாட்டிற்கு, சமூகத்தின் வளர்ச்சிக்கு, உங்கள் உதவி தேவை.
18 முதல் 45 வயது உடைய ஆண்களே... உங்களது, 'விந்து'வை தானம் செய்யுங்கள். வெட்கப் படாதீர்கள். நீங்கள் செய்யும் தானத்தால், ஆஸ்திரேலிய சமூகம் வளர்ச்சி அடையும்.
குழந்தையில்லாமல் கவலையும், துன்பமும், அவப் பெயரும் பெற்ற தம்பதியருக்கு, உங்களால் சந்தோஷத்தையும், மனநிம்மதியையும் கொடுக்க முடியும்.
ஆஸ்திரேலியாவில், 10 ஆண்களுக்கு ஒருவர் என்ற கணக்கில், மலட்டுத்தன்மை பெருகி வருகிறது. பிறக்கும், 250 குழந்தைகளில் ஒன்று செயற்கை முறையில், கருவூட்டப்பட்டு பிறக்கிறது. வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளும் சட்டம், ஐரோப்பிய நாடுகளைப் போல அல்லாமல், ஆஸ்திரேலியாவில் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
எனவே, செயற்கையாக கருவூட்டும் முறையை, பலரும் இப்போது நாட ஆரம்பித்துள்ளனர்; ஆனால், 'விந்து' தானம் கொடுப்பவர்கள், நாட்டில் குறைந்து வருகின்றனர். இதற்கு கூச்சம் ஒரு காரணமாக இருந்தாலும், 'நாம் கொடுத்த உயிர், எங்கோ, எப்படியோ, முகம் தெரியாமல் வாழுமே...' என்ற பாசம் கலந்த எண்ணமும் காரணமாக அமைந்து விடுகிறது. இதனால், பிள்ளை பெற்ற தம்பதியர், செயற்கை முறை கருவூட்டல் பெற, நீண்டநாள் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
இங்கு, விக்டோரியா மாநிலம் தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதற்கும், 40 பேர் தான், விந்து வங்கிகளில் பெயர் பதிவு செய்து உள்ளனர். ஆனால், செயற்கை முறை கருவூட்டலுக்காக காத்திருக்கும் தம்பதியரின் எண்ணிக்கையோ, 300க்கும் மேல்! ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை, இவர்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நாடு வளர, மக்கள் சக்தி தேவை. நீங்கள் கொடுக்கும் உயிர், நாளை நாட்டையே ஆளும் பிரதமராகக் கூட வரலாம். எனவே, சுயநலம் இல்லாத இந்த தேசப் பணிக்கு உதவுங்கள் என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தானம் கொடுக்க விரும்புவோருக்கு, 'எய்ட்ஸ்' போன்ற பால்வினை நோய் இருக்கிறதா என, முதலில் சோதனை செய்கின்றனர். பின் அவரது, 'விந்து'வில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை கணக்கிடுகின்றனர். எவ்வித குறையும் இல்லாத பட்சத்தில், தானம் கொடுப்பவர் மீண்டும் மீண்டும் அழைக்கப்படுகிறார்.
இந்த தானத்திற்கு பண உதவி ஏதும் கொடுப்பதில்லை; போக்குவரத்து கட்டணம், அதுவும், தானம் செய்பவர் விருப்பப்பட்டால் மட்டும் அளிக்கின்றனர்.
பிரச்னைகளின் பரிமாணங்கள், நாட்டுக்கு நாடு, எதிர் எதிர் திசையில் இருப்பதைப் பார்த்தீர்களா?

