
ஹெச்.ஹரிஹரன், கோட்டூர்: தன் தகுதி அறியாதவர் கதி என்னவாகும்?
'துள்ளிய மாடு பொதி சுமக்கும்' என்பது முதுமொழி. தன்னைத் தானே அறியாதவர், ஜால்ராக்களின் புகழ் மொழியால் இழி நிலைக்கு தள்ளப்படுவர். பின், உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா கதை தான்!
என்.உத்தமசோழன், விழுப்புரம்: எனக்கு ஏராளமான நண்பர்கள். இதனால், ஆபத்து என்கின்றனரே... உண்மையா?
உடன் உள்ள நண்பர்களின் குணத்தைப் பொறுத்து தான் ஆபத்தா, இல்லையா என்பதை கணிக்க முடியும். ஐந்து விரலும் ஒன்றாக இல்லாதது போல, நண்பர்களில் பல குணம் கொண்டவர்களும் இருக்க வாய்ப்புண்டு. அல்லாத குணம் கொண்டவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது!
க.தமிழ்செல்வன், சென்னை: தற்போது, ஆண்களை விட, பெண்கள் சோம்பேறிகளாக உள்ளனர். கவனித்தீர்களா?
தவறு! பெண்கள் தான் சுறுசுறுப்பாக உள்ளனர். டூ - வீலர்களில் பாருங்கள்... எந்த டென்ஷனும் இல்லாமல் ஹாயாக பின் சீட்டில், ஆண்கள் அமர்ந்து வர, பெண்கள் தானே டென்ஷனுடன் வண்டி ஓட்டுகின்றனர்... இதே கதை தானே காரிலும்! மீண்டும் பெண்களிடம் மாடு போல வேலை வாங்க ஆரம்பித்து விட்டனரோ ஆண்கள் என எண்ணத் தோன்றுகிறது!
டி.ஜெயந்தன், கடலூர்: குற்றங்களையும், வன்முறை களையும் தடுக்கும் திறமை, நம் காவல் துறையினரிடம் குறைந்து விட்டதா?
குறையவில்லை; ஆனால், விட்டமின், 'ப' அது தாங்க காந்தி பட நோட்டு... திறமைகளை அடக்கி வாசிக்க வச்சுட்டது!
பொ.தங்கபாண்டியன், திருவல்லிக்கேணி: இன்றைய உலகில் நிம்மதியாக வாழ்பவர் யார்?
பணக்காரர்களோ, பதவியில் இருப் பவர்களோ, அதிகாரம் உள்ளவர்களோ, புகழின் உச்சாணிக் கொம்பில் வீற்று இருக்கும் நடிகர்களோ, தொழிலதிபர்களோ அல்ல என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்!
பி.மனோரஞ்சிதம், மதுரை: நம் கலாசாரத்தில் வெகுவாக ஆணுக்கும், பெண்ணுக்கு மிடையே மேம்போக்கான நிலை இருக்கிறது. ஆனால், இந்த அம்சம் அடிப்டையில், 'நட்பென' அங்கீகரிக்கப்பட்ட பெரும்பாலான ஆண் - பெண் மனங்கள் காதல் என்ற நிலையிலிருந்து மீள்வதில்லை. இந்த தவறு யார் மீது?
காஞ்ச மாடு கம்பங் கொல்லையிலே மேய்ஞ்சது மாதிரி என்று சொல்வர் கேட்டிருக்கிறீர்களா? அதே நிலையில் நம் சமுதாய அமைப்பு உள்ளது. ஆண்களை கண்டால் ஒளியும் நிலை இப்போது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நம் சமுதாயம் மாறி வருகிறது. காலப்போக்கில் இந்த சமுதாய மறுமலர்ச்சி கலாசாரத்தை மாற்றும். அப்போது, நட்பை, காதலென நினைக்கும் எண்ணங்கள் மறைந்து விடும்!
வி.ஜெ.கார்த்திக், அருப்புக்கோட்டை: ஒரு மனிதனுக்கு எத்தனை மணி நேரம் தூக்கம் தேவை?
புளிச்ச ஏப்பம் விடுபவன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தூங்கலாம். பசி ஏப்பக்காரன் தூங்கும் ஒவ்வொரு மணி நேரமும், அவன் முன்னேற்றத்தை அந்த அளவுக்கு பின்னுக்குத் தள்ளி விடும்!

