PUBLISHED ON : மார் 06, 2016

'உன் அருமை தெரியாத சபையில், தாராளமாக உன் பெருமைகளை எடுத்துக் கூறு; இதில் தவறில்லை...' என்று, நம் பண்டைய இலக்கண, இலக்கியங்கள் நமக்கு ஏற்கனவே, உரிமம் தந்து விட்டன.
இந்த அளவிற்குப் போகாவிட்டாலும், நம் முதுகை நாம் தட்டிக் கொள்ளலாம் தான்!
என்னுடன், பாட்மிண்டன் விளையாடும் சக ஆட்டக்காரர் ஒரு நல்ல பாயின்ட்டை எடுத்து விட்டால், 'கிரேட் ரா...' என்று தன் பெயரையும் சேர்த்து, பெரிதாகக் கத்துவார்.
குளுக்கோஸ் ஊசி ஏற்ற ஆள் கிடைக்கா விட்டால், குளுக்கோஸ் டி, 'பாக்கெட்' ஒன்றை வாங்கி வாயில் போட்டுக் கொள்வது எப்படி தவறில்லையோ, அப்படித் தான் இதுவும்!
நாம் செய்த தவறுகளை எண்ணி, மணிக்கணக்கில் வருந்துகிறோம்; நாள் கணக்கில், மாதக் கணக்கில், ஆண்டுகணக்கில் வருந்துபவர்களும் உண்டு. ஆனால், நாம் செய்த கெட்டிக்காரத்தனமான செயல்களுக்காக, அறிவார்ந்த முடிவுகளுக்காக, எவ்வளவு பேர், சுயமாக மனதிற்குள் பாராட்டிக் கொள்கிறோம்?
ஆங்கிலத்தில், 'செல்ப் எஸ்டீம்' என்று ஒரு சொல் உண்டு. இதன் பொருள், சுய கவுரவம், சுய மதிப்பீடு. இவற்றை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இப்படிச் செய்யா விட்டால், நம் இதயத்தை, நம் தவறுகளால், கவலைக் குச்சிகளால் குத்திப் பார்க்கத் தெரிந்த நமக்கு, அந்த இதயத்தை வேறு ஒரு வகையில் ஒத்தடம் கொடுக்கத் தவறிட்டோம் என்று பொருள்!
நம்மை நாமே பீற்றிக் கொள்வது, நம் நெஞ்சைத் தாண்டி, வெளிப்படையாகவும், பிறர் கேட்கும்படியும் நடக்கும் போது தான், கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன.
மேடையில் பேசி விட்டு, கீழே இறங்குகிறவர், கீழே தன்னைச் சந்தித்தவர்களிடம், 'எப்படி இருந்தது என் பேச்சு...' என்று கேள்வி கேட்டால் கூட, அது தவறாகி விடுகிறது.
இக்கேள்வியின் உட்பொருள் என்ன தெரியுமா... 'ஊம்... என்னைப் பாராட்டுங்கள்; நாலு நல்வார்த்தை கூறுங்கள்...' என்பது தான்! ஆக, வெறும் கேள்வியிலேயே, 'நான் பாராட்டும்படி பேசி விட்டேன்...' என்கிற உட்பொருள் உண்டாகி விட்டது என்றால், 'சூப்பராப் பேசிட்டேன் இல்லே...' என்று சுயமாகப் பாராட்டிக் கொண்டு விட்டால், அப்புறம் கேட்கவா வேண்டும்!
'நல்லாத்தான் பேசினீங்க... ஆனா, பாருங்க...' என்று எதிராளி ஒரு குட்டு வைக்க ஆரம்பித்து விடுவான். ஆனால், உண்மையான பாராட்டு எது தெரியுமா? தேர்வு எழுதி விட்டு வெளிவரும் மாணவனுக்கே தெரியும். 'நான் மிக நன்றாக, ஓரளவு நன்றாக எழுதி விட்டேன்...' என்று! இதைப் போன்றது தான், மேடையில் பேசியவரின் நிலையும். நன்றாகப் பேசியிருந்தால், இவருக்கு எந்தக் கொம்பனும் மதிப்பெண் போட வேண்டியதில்லை. இந்நிலையில், எவரது இடித்துரைப்பும் இவரை ஒன்றும் செய்யாது. இதேபோல், பிறரது பாராட்டும், மரத்துப் போனது போல்தான் தெரியுமே தவிர, அது, இவரை ஒன்றும் செய்யாது.
'சூப்பராப் பேசினீங்க சார்...' என்று எவரேனும் வலிய முன் வந்து கூறினால், அது இவரது எண்ணத்திற்கு வலுவூட்டி, உரமூட்டும் செய்தியே தவிர, புதிய ஒன்றே அல்ல. பேச்சு சரியில்லாத போதும், நம்மைப் பிறர் பாராட்டினால் அது கிண்டல் ரகம்; ஊக்கப்படுத்தும் முயற்சி; முகமன் கூறல் ஆகிய, ஏதேனும் ஒன்றினுள் அடக்கி விடலாம்!
எனவே, நம் செயல்பாடுகளின், படைப்புகளின், நம் வெளிப்பாடுகளின் முதல் விமர்சகராக நாம் ஆகி விடுவது எல்லா வகையிலும் நல்லது!
அதேநேரத்தில், நம் இதயம் தேடும் சுய பாராட்டுகளை, அடியோடு புறக்கணித்து, தங்களைத் தாங்களே குறை கூறிக் கொண்டே இருப்பவர்கள், தங்கள் இதயத்திற்கு, நல்ல நண்பனாக விளங்க முடியாது.
நம் சிறந்த முடிவுகளுக்காக, நல்ல செயல்களுக்காக உலகம் நம்மை பாராட்ட முன்வருமுன், முதல் முதுகுத் தட்டை, நாம், நமக்கு வழங்கிக் கொள்ளும் புதுப்பழக்கம், இன்று முதலேனும் அரங்கேறட்டும். நம் சுயமதிப்பீடுகளை உயர்த்திக் கொள்ள இப்பழக்கம் வெகுவாக உதவும்.
லேனா தமிழ்வாணன்

