
பி.அக்பர்கான், குரோம்பேட்டை: சமூக விரோதிகளை ஒடுக்க சிறந்த வழியாக எதைக் கருதுகிறீர்கள்?
'அடி உதவுற மாதிரி அண்ணன், தம்பி உதவ மாட்டான்' எனக் கேட்டு இருக்கிறீர்களா?
ஜெ.வெங்கடேஷ், நரிமேடு: தமக்கும் சமூக உணர்வு உண்டு எனக் காட்டிக் கொள்வதற்காக, சம பங்கு, பொதுவுடமை, மார்க்சிசம் என்று பேசுவோர், சமூகத்தில் தாங்கள் ஒரு அந்தஸ்தை அடைந்தவுடன், தாமும் ஒரு, 'பூர்ஷ்வா' சமூகத்து முதலாளியைப் போல நடந்து கொள்கின்றனரே...
உண்மை தான்; இங்கு மட்டுமல்ல, சமபங்கு பொதுவுடமை பேசி, அதை கடைப்பிடிப்பதாக காட்டி வரும் நாடுகளின் வண்டவாளங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்து விட்டன. இந்த சுயநலவாதிகளின் பிடியில் சிக்காது தப்பிப்பதில் தான், ஒவ்வொரு தனி மனிதன் மற்றும் நாட்டின் திறமை உள்ளது!
ரா.ராகுல், சிங்கம்புணரி: இக்கால, 'டீன் - ஏஜ்'கள், காதல் விஷயத்தில் எப்படி?
ரொம்ப விவரமானவங்க! கணக்குப் போட்டு காதலிக்கிறாங்க; கணக்கு தப்பினா, அது, ஆணோ, பெண்ணோ கழற்றி விட தயங்குவதே இல்லை. அதற்காக வருத்தப்படறதும் இல்லை. தேறிட்டாங்க; கெட்டிக்காரங்க!
எஸ்.பொன்னுச்சாமி, தாம்பரம்: கடன் வாங்கி விழா கொண்டாடி, திண்டாடி நிற்போரை என்ன செய்வது?
திண்டாடட்டும் என விட்டு விட வேண்டியது தான்! இவர்கள் தம் பொருளாதார நிலையை நன்கு அறிந்திருந்தும், வீண் பெருமைக்காக செலவு செய்கின்றனர்; கடன் வாங்கி சபரிமலை செல்கின்றனர். விரதமிருந்து உள்ளூர் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்தால், சபரிமலை ஐயப்பன் கோபித்துக் கொள்வாரா?
டி.குருலட்சுமி, தேவகோட்டை: தன் கணவன், இன்னொரு பெண்ணுடன் பேசினால் பொறுத்துக் கொள்கிறாள் மனைவி. ஆனால், தன் மனைவி, இன்னொரு ஆடவனோடு பேசினால், சந்தேகம் கொள்கின்றனரே இந்த கணவன்மார்...
தம்மைப் போலவே, தம் மனைவியையும் நினைக்கும் ஆசாமிகள் இவர்கள்! நம்பிக்கை துரோகம் செய்யும் குணம், இயற்கையிலேயே பெண்களுக்கு கிடையாது. ஆனால், கட்டிப்போட்டு காபந்து செய்ய நினைத்தால் தோல்விதான் என்பதை, சந்தேகப் பேர்வழிகள் உணர வேண்டும்!
வி.கதிர்வேலன், பொள்ளாச்சி: நல்லா சம்பாதிக்கிறேன்; இருந்தும், என் குடும்பத்தை வறுமை வாட்டுகிறதே...
திருப்தி வேண்டும்; திருப்தி இல்லாமையே வறுமையாக தோற்றமளிக்கிறது. 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற பழமொழியை எப்போதும் மனதில் நிலைநிறுத்துங்கள்!
என்.பாலகிருஷ்ணன், கோபிச்செட்டிபாளையம்: நான் நன்றாக வாழ ஆசைப்படுகிறேன்... என்ன செய்ய வேண்டும்?
நல்ல பழக்கங்களை பழகி கொள்ள வேண்டும். நாலு நல்லவர்கள், பெரியவர்கள் அறிமுகம் வேண்டும். அத்துடன், மிக முக்கியமாக, நாலு காசு சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். நிம்மதியாக, சந்தோஷமாக வாழலாம்!

