sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கல்லுக்குள் ஈரம்!

/

கல்லுக்குள் ஈரம்!

கல்லுக்குள் ஈரம்!

கல்லுக்குள் ஈரம்!


PUBLISHED ON : ஏப் 17, 2016

Google News

PUBLISHED ON : ஏப் 17, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று அப்பாவின் பத்தாவது நாள்; வீட்டின் எல்லா இடங்களிலும், அவரின் அடையாளங்கள் மற்றும் அவர் குரல் கேட்டுக் கொண்டே இருப்பதைப் போன்று பிரமை. நண்பர்களும், உறவினர்களும் வந்து கொண்டே இருந்தனர். அவர்கள் எல்லார் வாழ்க்கையிலும் அப்பாவின் தாக்கம் ஏதோ ஒரு வகையில் இருந்திருக்க வேண்டும்.

காரணம் இல்லாமல் அப்பாவிற்கு கோபம் வருவதில்லை என்றாலும், எங்களை பொறுத்தவரை, அவர் கோபக்காரர். அவருக்கு கோபம் வரும்போது, எதிரில் நிற்கவோ, பதில் பேசவோ, எங்களுக்கு தைரியம் வந்ததில்லை. இதைத் தவிர, அவருக்கு வேறு முகமும் உண்டு என்பதை நாங்கள் அறியவில்லை. ஒருக்கால், அம்மாவுக்கு தெரிந்திருக்கலாம்.

துக்கம் கேட்க வந்தவர்களில் ஒருவர், அப்பாவின் போட்டோ அருகில் சென்று, ''சார்... என்னை மன்னிச்சுடுங்க... நீங்க இருக்கற போதே, உங்க கிட்ட மன்னிப்பு கேட்கணும்ன்னு நினைச்சேன்; அதுக்கு கொடுத்து வைக்கல...''என, தேம்பித் தேம்பி அழுதார். பின், அம்மாவிடம் சென்று, ''நீங்களாவது என்னை மன்னிச்சிடுங்க; உங்களப் பாக்கற அருகதை கூட எனக்கு இல்லை...'' என்றார்.

''அவர், உங்கள என்னிக்கோ மன்னிச்சுட்டார். இப்ப, தெய்வம் ஆகிட்டார். எப்பவும் அவர் தெய்வ குணத்தோட தான் இருந்தார்ங்கிறது ரொம்ப பேருக்கு தெரியாது,'' என்றாள் அம்மா.

அம்மாவின் வார்த்தைகள், அவருக்கு ஆறுதல் தர, கண்களை துடைத்தபடி சென்று விட்டார். அவர் பெயர் ராமச்சந்திரன் என்பதும், அப்பா வேலை பார்த்த மின் நிறுவனத்தில், ஜெனரல் மேனேஜர் என்பது தெரிந்ததும், எங்கள் எல்லார் முகங்களிலும் ஆச்சரியக்குறி!

அதை குறிப்பால் உணர்ந்த அம்மா, ''சுபத்தன்னிக்கு சொல்றேன்,''என்றாள்.

பதிமூன்றாம் நாள்; சாஸ்திரிகள் சடங்குகளை செய்து முடித்த பின், அப்பாவைப் பற்றி, உணர்ச்சி பூர்வமாக சொன்னார். அவர் அப்பாவின் நண்பர் என்பதால், அவருக்கும், இது தனிப்பட்ட இழப்பே!

அன்று மாலை, அம்மாவைச் சுற்றி, எல்லாரும் உட்கார்ந்து இருந்தோம்.

எங்களுக்கு நிமிடங்கள் நீண்டு கொண்டே போக, அம்மா கடந்த காலத்தில் மூழ்கி இருந்தவள், நினைவுக்கு வந்தவளாக, கூறத் துவங்கினாள்...

''அப்ப, உங்க அஞ்சு பேருக்கும் அதிகம் விவரம் புரியாத வயசு. பள்ளிக் கூடம், படிப்புத் தவிர வீட்டுச் சூழல் எதுவும் தெரியாது. பெரியவ, ஒன்பதாவது படிச்சிட்டு இருக்கும் போது, கடைசிகாரன் கைக்குழந்தை. அந்த சமயத்துல, உங்க அப்பாவுக்கு ஆபிஸ்ல ஒரு பிரச்னை...'' என்றவளின் நினைவுகளில், கணவன் தன்னிடம் பகிர்ந்து கொண்ட அந்த சம்பவம் நினைவிலாடியது.

திருச்சியில் மின் வினியோகம் செய்யும் கம்பனியில், சாதாரண லயன்மேனாக, தினம் பத்தணா கூலியில், வேலைக்கு சேர்ந்தவர் சீனிவாசன். ரொம்ப கஷ்டப்பட்டு சூப்பர்வைசர் ஆனார். அதுக்கே, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் ஒரு வருஷத்தில, ஜூனியர் இன்ஜினியர் புரொமோஷன் கிடைக்கலாம் என்ற நிலையில், அந்த சம்பவம் நடந்தது.

மின்சாரத் திருட்டு, பெரிய பிரச்னை ஆகி, கம்பெனியோட வருமானம் ரொம்பவும் பாதித்ததால், திருட்டைக் கண்டுபிடிக்க, எல்லாருக்கும், ஏரியாவை பிரித்து தரப்பட்ட போது, சீனிவாசனுக்கு அரியமங்கலம் ஏரியாவை ஒதுக்கினர். சக பணியாளர்களுடன் இணைந்து, ஒவ்வொரு மின் இணைப்பையும் சோதித்து வந்தார் சீனிவாசன். அப்போது, ரைஸ் மில் ஓனர் ஒருவர், மின்சாரம் திருடுவதை கண்டுபிடித்து, அபராதத்துடன், பெரிய தொகை கட்ட சொன்ன போது, ரைஸ் மில் ஓனர், லஞ்சம் கொடுக்க முனைந்துள்ளார்.

ஆனால், சீனிவாசனோ, 'என் கை சுத்தமா இருக்கறதால தான், நிம்மதியா தூங்கறேன்; மின்சாரம் திருடுனதுக்கான நோட்டீஸ் உங்களுக்கு வரும்; நீங்க எங்க மேலதிகாரிகளுக்கு பதில் சொல்லிக்கங்க...' என்று கூறவும், 'நோட்டீஸ் அனுப்ப வேணாம்; அபராதம் கட்டிடுறேன்'னு சொல்லி, அபராதம் கட்டினார். இதனால, மில் ஓனர், சீனிவாசனை எப்படியாவது பழி வாங்கணும் என்று காத்திருந்தார்.

அச்சமயத்தில் தான், ஜூனியர் இன்ஜினியராக வேலையில் சேர்ந்தார் ராமச்சந்திரன். எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் பட்டம் வாங்கிய அவர், தனக்கு கீழ் வேலை பார்க்கும், அதிகம் படிக்காதவரான சீனிவாசனை அவ்வளவாக மதிப்பதில்லை.

அக்காலத்தில், மாதம் ஒரு முறை பராமரிப்பு வேலைகள் நடக்கும். ஏரியா ஏரியாவாக பிரித்து, அந்தப் பகுதிகளில், முன்னறிவிப்பு தண்டோரா போட்டு, மின் தடையை அறிவிப்பர்.

சீனிவாசனுக்கு அரியமங்கலம் ரைஸ் மில் அருகில் இருந்த 'டிரான்ஸ்பார்மர்' ஒதுக்கினர். மதியம், 3:00 மணிக்கு பெரும்பாலான வேலைகள் முடிந்த நிலையில், இரண்டு இடங்களில் மட்டும் மின் கம்பிகள் மீது, மரக்கிளைகள் உரசியபடி இருப்பதை பார்த்து, அதை வெட்டுவதற்காக இரண்டு லைன் மேன்கள் மரத்தில் ஏறினர். ஒருத்தர் வேலையை முடித்து திரும்பி விட்டார். மற்றொருவரான ராசு மட்டும், கிளைகளை, வெட்டிக் கொண்டிருந்தார். கீழே, 'டிரான்ஸ்பார்மர்'க்கு காவலுக்கு நின்றிருந்த லைன்மேன் முருகன், டீ குடிக்க சென்று விட்டான்.

மறுபடியும், மின் இணைப்பு கொடுப்பதற்காகவும், அந்தப் பகுதியில் நடந்த பராமரிப்பு பணிகளை மேற்பார்வையிடவும், சீனிவாசனும், அவர் குழுவினரும் சென்றனர்.

அச்சமயம், இன்ஜினியர் ராமச்சந்திரன் அங்கு வர, பராமரிப்பு பணி முடிந்துள்ள நிலையில், மின் இணைப்பு கொடுக்காததைப் பார்த்து, 'ஏன் இன்னும் இணைப்பு கொடுக்கல?' என்று கேட்டார்.

அப்போது அங்கு வந்த ரைஸ் மில் ஓனர், இதுதான் சீனிவாசனை பழிவாங்க ஏற்ற சமயம் என, 'சார்... வேலை முடிஞ்சு ஒரு மணி நேரம் ஆச்சு; வேணும்ன்னே, 'டிலே' செய்றாங்க. காரணமே இல்லாம, கரன்ட்டை, 'கட்' பண்ணிடுறாங்க. தீபாவளி, பொங்கலுக்கு கவனிக்கலன்னு பழி வாங்கறாங்க...' என்றார்.

உடனே, ராமச்சந்திரன் தானே மின் இணைப்பு கொடுக்க டிரான்ஸ்பார்மர் அருகில் போனார். சற்று தொலைவில் மர உச்சியில் இருந்த ராசு, அதைப் பார்த்து, இணைப்பு கொடுத்தால் உயிர் போய்விடுமே என பயந்து, கீழே குதித்து விட்டார். இதில், அவரது வலது கால் முறிந்தது.

இதனால், கோபமடைந்த ராமச்சந்திரன், சீனிவாசனின் வயதுக்கு கூட மரியாதை தராமல், எல்லார் எதிரிலும் திட்டினார். சீனிவாசன் விளக்கம் கொடுக்க முயன்ற போது, கேட்க மறுத்து, 'நாளைக்கு ஆபிசில் பேசிக்கலாம்...' என சொல்லி, ஜீப்பில் ஏறிப் போய்விட்டார்.

மறுநாள், எக்சிகியூட்டிவ் இன்ஜினியர் முன்னிலையில் விசாரணை நடந்த போது, காவலுக்கு நின்ற முருகன், தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும், பர்மிஷனில் போய்விட்டதாகவும் பொய் சொன்னான். அவன் முரடன்; அவனை யாரும் மறுத்துப் பேசவில்லை.

'பணியாளர்கள் அனைவரும் வரும் வரை, 'டிரான்ஸ்பார்மர்' அருகில் சீனிவாசன் இருந்திருக்க வேண்டும்...' என்றும், 'அவர் கவனக் குறைவால் தான் மின் இணைப்பு கொடுப்பதில் தாமதமானதுடன், ராசுவிற்கு கால் முறிவு ஏற்பட்டது. 'கஸ்டமர் சர்வீஸ்' பாதிக்கப்பட்டது...' என, வக்கீல் போல் வாதாடினார் ராமச்சந்திரன்.

எதுவும் பேசாமல் மவுனமாகவே நின்றிருந்த சீனிவாசன், 'உங்க முடிவுக்கு கட்டுப்படறேன்'னு சொன்னாரே தவிர, விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை. இதைப் பார்த்த சக பணியாளர்களுக்கு ஆச்சரியம்.

சீனிவாசனுக்கு ஆறு மாச சஸ்பென்ஷன். ராசுவின் மருத்துவ செலவுகளை கம்பெனி ஏற்றுக்கொண்டது.

சீனிவாசன் தவறு செய்திருக்க மாட்டார் என நினைத்தார், எக்சிகியூட்டிவ் இன்ஜினியர்.

அதனால், அவரே ஒரு நாள் வீட்டுக்கு வந்து, 'சீனிவாசா... அன்னிக்கி கேட்ட கேள்விகளுக்கு நீ எந்த பதிலும் சொல்லாமல், மவுனமாக இருந்துட்டே... இப்ப கேட்குறேன் பதில் சொல்லு. உன்னோட அந்த மவுனத்துக்கு காரணம் என்ன?' என்று கேட்டார்.

'சார் இதுக்கு நான் பதில் சொல்லணும்ன்னா, நீங்க எனக்கு விதிச்ச தற்காலிக பதவி நீக்கத்தை குறைக்கவோ, நீக்கவோ கூடாது. ஏன்னா, அப்படி நீங்க செய்தீங்கன்னா, யார் என்ன வேணும்ன்னாலும் செய்துட்டு, மேலதிகாரிட்ட பேசி தப்பிக்கலாம் என்ற எண்ணம் வந்து, தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அதோட, ராமச்சந்திரனுக்கும் தலைக்குனிவு ஏற்படும். அப்புறம், அவரை யாரும் மதிக்க மாட்டாங்க. அவர் மேல் நீங்க எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது...' என்று கண்டிஷன் போட்டு, அன்று நடந்த விஷயங்களைக் கூறியவர், ரைஸ் மில் ஓனரின் கோபம், ராமச்சந்திரன் தன்னை மதிக்காதது மட்டும் இல்லாமல், மட்டம் தட்டவும் முயற்சி செய்தது என, எல்லாவற்றையும் கூறினார்.

'உன் பேர்ல தப்பே இல்லாத போது அன்றைக்கு ஏன் எந்த விளக்கமும் கொடுக்கல...' என, கேட்டார் எக்சிகியூட்டிவ் இன்ஜினியர்.

'லைன்மேன்கள் எல்லாம் ஏழைகள்; போஸ்ட் ஏறி, ரிஸ்க் எடுத்து, வேலை செய்யறவங்க. முருகன் செய்தது தப்பு தான்; அவன் முரடனே தவிர, நல்ல வேலைக்காரன். அவன மாதிரி வேலையாள் கிடைக்க மாட்டாங்க. ஏதோ அன்னிக்கு தப்பு செய்துட்டான். நான் தான் அவனை அப்படி பேச சொன்னேன். என், 'டீம்' ஆட்களை, நான் விட்டு கொடுக்க மாட்டேன். அதுக்காகத் தான், மவுனமா இருந்து, நான் தான், பொறுப்புன்னு சொல்லாம சொன்னேன்...' என்றார்.

'சரி அதவிடுங்க... ராமச்சந்திரன் தான் மின் இணைப்பு கொடுக்கப் போனார்ன்னு சொல்லியிருக்கலாம்லே...' என்றார் எக்சிகியூட்டிவ் இன்ஜினியர்.

'நான் அப்படி சொல்லியிருக்கலாம் தான்; ஆனால், இந்தக் காலத்துல வேலை கிடைக்குறதே குதிரைக் கொம்பா இருக்கு. ராமச்சந்திரனுக்கு தகுதி அடிப்படையில தான் இந்த வேலையே கிடைச்சிருக்கு. ஏழைக் குடும்பம்; சின்ன வயசுலேயே தகப்பன இழந்த அவர, அவரோட அம்மா தான், சமையல் வேலை செஞ்சு, படாத கஷ்டமெல்லாம் பட்டு படிக்க வச்சாங்க. இப்ப தான் கஷ்டமில்லாம இருக்காங்க. அவர் தான் தப்பு செய்தார்ன்னு நிரூபிச்சா, அது, அவருக்கு, 'ப்ளாக் மார்க்' ஆயிடும். இதனால், எதிர்காலம் பாதிக்கப்படலாம். வேற வேலை கிடைக்கறதும் கஷ்டம்.

'கொஞ்ச நாள்ல அவருக்கே உண்மை தெரியும். அப்ப, அவர் மனசாட்சிக்கு பதில் சொல்லியே ஆகணும். இனிமேலாவது, அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார். தப்பும் செய்ய மாட்டார்...' என்றார்.

'சீனிவாசா உன்ன மாதிரி ஆளை, இந்த உலகத்தில பாக்க முடியாதுப்பா... நீ கேட்காமல் இருந்தா கூட, உன் பதவி உயர்வுக்கு ஏதும் பிரச்னை வராம பாத்துக்கிறேன்...' என்று சொல்லி, காபி குடித்து விட்டுக் கிளம்பினார் எக்சிகியூட்டிவ் இன்ஜினியர்.

ஆறு மாதம் குடும்பம் கஷ்டப்பட்டது. ஏழு வயிறுகள்; ரசம் சாதம், அப்பளம், நீர் மோர் மட்டும் தான். அம்மாவின் நகைகள் அடகு கடைக்கு சென்றன. இருப்பினும் அவர்கள் தங்கள் கஷ்டத்தை வெளியில் சொல்லிக் கொள்ளவே இல்லை.

அதன்பின், கட்டுமானப் பிரிவுக்கு மாற்றப்பட்டார் சீனிவாசன்.

ராமச்சந்திரன் ஒன்றும் பேசவே இல்லை. வறட்டு கவுரவம், வீண் ஜம்பம், மன்னிப்பு கேட்பதை தடுத்திருக்க வேண்டும். ஆனால், அந்த மன உறுத்தல் அவருக்குள் இருந்தது.

சீனிவாசன் இறந்த பின்னரே, கண்ணீருடன் மன்னிப்புக் கேட்டு, தன் கறையை கழுவிக்கொண்டார், ராமச்சந்திரன்.

அம்மா சொல்லி முடித்த போது, எல்லார் கண்களிலும் கண்ணீர்!

பல்வேறு சமயங்களில், அப்பா எங்களிடம் கண்டிப்பு காட்டியது, கோபித்தது என, எல்லாவற்றுக்கும் இப்போது, புதுப் புது அர்த்தங்கள் கிடைத்தன. கல்லுக்குள் ஈரம் என்பது போல், அவருக்குள் நிறைந்திருந்த மனித தன்மையை நினைத்த போது, அவரை தந்தையாக அடைந்ததை எண்ணி, பெருமையடைந்தோம்!

எஸ்.கோபாலகிருஷ்ணன்






      Dinamalar
      Follow us