PUBLISHED ON : டிச 12, 2010

ஜெ.உஷா, சோழவந்தான்: நேர் வழியைக் காட்டிலும், குறுக்கு வழியில் செல்பவர்கள் எளிதில் முன்னேறி விடுகின்றனரே...
கடைசியில் ஆஸ்பத்திரியில் கொண்டு கொட்டுகின்றனரே... அதையும் நினைத்து பாரும்!
***
என்.ராஜசேகரன், பல்லடம்: பெண்களின் இதயம் மென்மையானது என்கின்றனரே... அது எப்படி?
நானும் உம்ம கேஸ் தான்... எனக்கும் இன்னும் விபரம் தெரியலே!
***
எஸ்.சேகர், விழுப்புரம்: ஒரு ஆண்மகன் பக்கத்து ஊரில், 'சின்ன வீடு' வைத்திருந்தால், அவன் மனைவி, பக்கத்து தெருவில், 'திரிய' தொடங்கி விடும் காலமாக இருக்கிறதே... நாடு நாசமாகாதா?
அரபு நாடுகளில் கண்ணுக்கு கண், தலைக்கு தலை தண்டனை முறை இருப்பதால், 'கிரைம் ரேட்' குறைவு. இங்கே இப்படிப்பட்ட கணவர்களைப் பெற்ற நம் பெண்மணிகள் மிரட்ட ஆரம்பித்தால் தான், 'சின்ன வீடு செட்-அப்' செய்யும் ஆண்கள் சரிப்பட்டு வருவர்!
***
ஏ.ஐயப்பன், செஞ்சி: அதிகமான நண்பர்களைப் பெற்றிருப்பவன் அதிர்ஷ்டசாலியா?
அதிர்ஷ்டசாலிதான்... அந்த அதிகப்படியான நண்பர்கள் உங்கள் மணிபர்சையும், பொன்னான நேரத்தையும் பதம் பார்க்காத வரையில்!
***
ஜி.பி.சரவணன், சிவகாசி: என் மனைவி எழுத்து வாசனை அறியாதவள். பெரியவர்களின் விருப்பத்திற்காக கிராமத்துப் பெண்ணான என் மனைவியை மணந்தேன். 'வாசனை' அறியாமல் இருப்பதால், சில நேரங்களில் உபத்திரவமுமாக உள்ளது. என்ன செய்வது?
உபத்திரவம் அதிகமாக இருப்பதை நீங்களே உணர்ந்து சொல்கிறீர்கள். உபத்திரவம் இல்லாமல் இருந்தாலும், எழுத்து வாசனை அறிந்தவனை இறைவன் என்று அல்லவா போற்றுகின்றனர். அதில், உண்மையும் இருக்கிறதே... 'வாசனை' அளிக்க முயலுங்கள் - வாசனை இல்லாமல் இருப்பதால், சில நேரங்களில் கிடைக்கும் அரிய சந்தோஷத்தை மாற்றுங்கள்!
***
*ஆர்.வேலு, திருக்கோவிலூர்: அடுத்த வீட்டுக்காரியின் சிரிப்பு - தன் மனைவியின் சிரிப்பு - ஒரு ஆடவனுக்கு எது பிடிக்கும்?
'மனைவியின் கண்ணில் படாதபோது - அடுத்த வீட்டுக்காரியின் சிரிப்பு...' என கல்யாணமான நம்ம உதவி ஆசிரியர் ஒருவர் கூறுகிறார். (உங்களுக்கு கல்யாணமான பின் சரியான பதிலை எனக்கு எழுதுங்கள்.)
***
*எம்.அருணாசலம், பெரியகுளம்: பதினைந்து ஆண்டுகளாக பாகப் பிரிவினை தொடர்பாக இரு சகோதரர்களுக்கு கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. இருவரிடமும் உள்ள பணம் காலி. பஞ்சாயத்து பேசி, சமாதானமாக போய், கேசை வாபஸ் வாங்கி விடலாம் என்றால், இளைய சகோதரர் ஒத்து வரமாட்டேன் என்கிறார். உங்கள் கருத்து என்ன?
கோர்ட் - கேஸ் என்றால் லேசில் முடியும் காரியம் இல்லை... பெரிய சகோதரரை கொஞ்சம் விட்டு கொடுத்து 60 - 40 என முடித்துக் கொள்ளச் சொல்லுங்கள். சொத்து விஷயங்களில் கோர்ட் படி மிதிக்காமல், சுமூகமாக முடித்துக் கொள்வது உத்தமம் என்பதை சொத்துள்ள - தகராறு ஆரம்பிக்க தயாராக உள்ள மற்றவர்களும் புரிந்து கொண்டால் சரி!
***
